சாங்கியம் என்ற பெயரில் இன்று கிடைக்கின்ற நூல்களில் மூல சாங்கியக் கருத்துக்கள் திரிந்தே காணப்படுகிறது. அதில் குறிப்பிடத்தக்கவை கி.பி. 5ஆம் நூற்றாண்டில் தோன்றிய சாங்கிய காரிகை, இந்த நூல் ஈஸ்வர கிருஷ்ணரால் எழுதப்பட்டது. அடுத்து கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாங்கிய சூத்திரம். இந்த இரு நூல்களும் தொடக்க சாங்கியத்தின மரபு வழியில் வராது, விலகி செல்லும் நூல் என்றாலும் இது போன்ற நூல்களில் காணப்படும் முரண்பட்டக் கருத்துக்களைக் கொண்டே மேலே நாம் கண்ட தொடக்க கால சாங்கியக் கருத்துக்கள் திரட்டப்பட்டது. அதனால் இந்த இரண்டு நூல்களையும் முற்ற புறக்கணிக்க முடியாது.
சாங்கியத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டுமானால் கிடைப்பதைக் கொண்டு தான் செய்திட முடியும்.
சாங்கியமானது முதல்நிலை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தைக் கொண்டது என்பதனால்தான் பிரம்ம சூத்திரம் நூல் சாங்கியத்தை மறுக்க வேண்டிவந்தது என்பதை ஏற்கெனவே கூறப்பட்டது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலகாயதத் தத்துவத்தை குறிப்பிட்டு தனியே பிரம்ம சூத்திரம் நூலில் மறுக்கவில்லை. இதற்கு காரணம் பொருள்முதல்வாதத் தத்துவமான சாங்கியத்தை மறுப்பதே உலகாயதத்தை மறுப்பதாக பிரம்ம சூத்திர நூலாசிரியர் கருதியதாகக் கொள்ளலாம். ஆக சாங்கியத்தை முதனிலைப் பொருள்முதல்வாதம் என்று கூறுவது தவறாகாது.
இதற்கு அடுத்து சாங்கியம் என்ற பெயரில் ஆன்மீகக் கலப்பு ஏற்படுத்தியத்திற்குக் காரணத்தையும் அதன் விளக்கங்களையும் காண்போம்.தொடக்க சாங்கியத்தில் பிரகிருதி என்பது பெண்ணையும் புருடன் (புருஷ்) என்பது ஆணையும் குறிக்கும் என்று பார்த்தோம். இந்த புருடனை ஆணாக கருதாமல் ஆத்மாவாக மாற்றுவதின் மூலம் சாங்கியத்தை ஆன்மீக மயமாக்கும் பணி பல்வேறு நூல்களில் செய்யப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானதா உள்ள சாங்கிய காரிகை என்கிற நூலில் இருந்தே தொடங்குகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சாங்கியத்துடன் ஆன்மீகத்தை கலந்த நூல்களே இன்று கிடைக்கிறது.
இந்த ஆன்மீகக் கருத்து முதல்நிலை பொருள்முதல்வாதமான தொடக்க சங்கிய கருத்துடன் முரண்படுவதை கலப்பாளர்களால் மறைத்திட முடிவில்லை
இதுபற்றி தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறியதை பார்ப்போம்.
“புருடன் பற்றிக் காரிகையின் கருத்து சாங்கியத்தின் அடிப்படைகளுடன் முரண்படுகிறது. உண்மையில் இது சுயம் பற்றிய வேதாந்தக் கருத்தாகும். இது சாங்கியத்தின் அடிப்படைகளுக்கு நேர் எதிரானது. எனவே மிகத் தந்திரமாகச் சாங்கியத்தின் அடிப்படைகளை விட்டுக் கொடுப்பதன் மூலம் ஈஸ்வர கிருஷ்ணர் புருடன் பற்றிய அவரது கருத்திற்கு ஆதரவாக வாதிட முடிந்தது. அதாவது, புருடன் பற்றிய அவரது கருத்தினை வலுப்படுத்துவதற்காக அவர் சாங்கியத்தினை வேதாந்தமாக மாற்றினார். பரிணாம வாதத்தினை விவர்த்த வாதமாக மாற்றினார்.” (உலகாயதம்- பக்-544-545)
சாங்கிய சூத்திரத்தில் சாங்கிய நிலையில் புருடன் பல என்று கூறுவதுடன் புருடனை ஆத்மாவாகக் கூறி “ஒன்று” என்று வேதாந்தக் கருத்துடன் சாங்கியத்தை இணைக்க முயற்சிக்கிறது. புருடன் என்ற சாங்கியக் கருத்தை வேதாந்தாந்த கருத்தான ஆத்மாவாக விளக்கம் கொடுத்தது. இந்த போக்கு மிகவும் பழங்காலத்தில் இருந்தே தொடர்கிறது. மகாபாரத நூலில் காணப்படும் சாங்கியமும் ஆன்மீகமாக கலக்கப்பட்ட நிலையில் தான் உள்ளது.
சிதைத்ததின் காரணமாக சாங்கியம் இரண்டு வகையாக பிரிந்து காணப்படுகிறது. தொடக்கால சாங்கியப் போக்குடையவைகளை நிரீஸ்வர சாங்கியம் என்றும், கலப்பான வைதீகச் சாங்கியத்தை ஈஸ்வர சாங்கியம் என்றும் அழைக்கப்படுகிறது. நிரீஸ்வர சாங்கியம் என்றால் கடவுளை ஏற்றுக்கொள்ளாத சாங்கியம். ஈஸ்வர சாங்கியம் என்றால் கடவுளை ஏற்றுக் கொண்ட சாங்கியம்.
மேலே பெரும்பாலும் தொடக்ககால சாங்கியமான நிரீஸ்வ சாங்கியம் பற்றி பார்த்தோம். அடுத்து ஈஸ்வர சாங்கியம் என்பதைப் பார்ப்போம். ஈஸ்வர சாங்கியம் என்பது வைதீகக் கலப்பு ஏற்பட்ட ஆன்மீக சாங்கியம் என்று எற்கெனவே கூறப்பட்டது. ஆன்மீகமாக ஆக்கப்பட்டாலும் ஈஸ்வர சாங்கியத்தில் வைதீகத்துடன் முரண்படும் நாத்திகக் கருத்துக்கள் வெளிப்படவே செய்கிறது. இதே போல பிற்கால சாங்கிய நூல்களில் முரண்பாடு காணப்படுகிறது.
ஆதி சாங்கியம் பிரகிருதி என்ற பெண் தன்மையும் புருடன் என்கிற ஆண் தன்மையும் இணைந்து உலகம் தோன்றியது என்று கூறுவதை ஏற்கெனவே பார்த்தோம். இந்த விளக்கம் தாந்தரீகத்தின் அடிப்படையிலானது என்பதையும் சேர்த்துப் பார்த்தோம். பிற்காலத்தில் புருடன் என்பதை பிரகிருதியின்பெருக்கமாக கூறப்படுகிறது.
பிற்காலத்தில் ஆதி சாங்கிய தொடக்கநிலை பொருள்முதல்வாதத்தை மறுக்கும் விதமாக பிரகிருதிக்கும் புருடனுக்கும் எவ்வாறு விளக்கம் கொடுக்கப்படுகிறதுஎன்பதைப் பார்ப்போம்.
பிரகிருதியின் வெளிப்பாடே இந்தப் பரிணாமம்.பிரகிருதிஅறிவற்ற அசேதனம். அசேதனம் என்றால் உயிரற்ற சடப்பொருள்.
புருடன் (புருஷ்) என்பது அறிவுள்ள சேதனம். அதாவது அறிவுள்ள பொருள். புருடனை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. புருடன் அனுபவிக்கவே இந்த படைப்பு உருவானது என்று ஈஸ்வர சாங்கியம் கூறுகிறது. இந்தப் புருடனே ஆத்மா.
ஆதி சாங்கியத்தில் படைப்புக்கு பிரகிருதி-புருடன் ஆகிய இரண்டையும் சேர்ந்து கூறப்பட்டது, இங்கே புருடன் தனியே பிரித்து ஆத்மாவாக விளக்கப்படுகிறது. ஆத்மாவை நுழைத்துவிட்டால், ஆன்மீகமயமாக்கிவிடும் என்று அவ்வளவு எளிதாகக் கூறிட முடியாது. ஏன் என்றால் ஈஸ்வர சாங்கியத்தில் நாத்திகக் கருத்துக்கள் இருக்கவே செய்கிறது, ஈஸ்வர சாங்கியத்தில் உள்ள முரணை என்ன செய்தாலும் நீக்கிடமுடியாது.
புருடனை ஆத்மாவாக ஈஸ்வர சாங்கியம் கொள்வதால் முக்தியைப் பற்றி பேச வேண்டிவருகிறது. முக்தி என்றால் பிறப்பற்ற நிலை. மனிதப் பிறப்பை மனித வாழ்வை வெறுக்கும் நிலை.
“பொதுவாக, பாரதீய தத்துவங்களில் ஆன்மா என்று அழைப்பதைத்தான் சாங்கியம் புருஷன் என்கிறது. இந்தப் புருஷன் உடலோ, உடலின் சேர்க்கையால் உருவாவதோ, புத்தியோ, மனமோ அல்ல. இவையெல்லாம் இயற்கையாகிய பிரகிருதியின் வெளிப்பாடுகள். இவற்றில் இருந்து வேறுபட்ட ஒன்றே புருஷன். பிரகிருதி மூலமான அனுபவத்தைப் பெறுகின்றது எதுவோ அதுவே புருஷன்.”
(பத்மன், தத்துவ தரிசனங்கள், பக்-108)
புருடனை உடலுக்கு அப்பாற்பட்ட ஆத்மாவாக கருதுவதினால் அதன் ஒடுக்கத்தைப் பற்றி பேச வேண்டிவருகிறது. தாந்தரீகம், உலகாயதம், சாங்கியம் போன்ற கோட்பாடுகள் வாழ்வை கொண்டாடுகிறது. ஆனால் இந்த புருட கோட்பாடு அதாவது ஆத்மக் கோட்பாடு வாழ்வை வெறுக்கிறது. மாறுதலற்ற பிரம்மமே உண்மையானது என்கிறது. மாறுதலுக்கு உட்படுகிற இந்தப் பிரபஞ்சம், பிரம்ம உண்மைக்கு எதிரானது, அதனால் நிலையான உண்மையை முன்வைத்து மாறுதலுடன்கூடிய பிரபஞ்சத்தை வெறுக்கிறது-மறுக்கிறது. பிரபஞ்சத்தில் இருந்து விடுபடுவதை விடுதலையாக - முக்தியாக கருதுகிறது.
புருடன் பிரபஞ்சத்துடன் இணைவதே பந்தத்துக்குக் (சம்சாரத்துக்குக்) காரணம். அதாவது துக்கத்துக்குக் காரணம். ஆத்மத் தத்துவம் வாழ்க்கையை துக்கமயமாகப் பார்க்கிறது. துக்கத்தை ஏற்படுத்தும் பந்தமே முக்திக்குத் தடை என்பதை அறிந்து ஈஸ்வர சாங்கியம் முக்தியை முன்வைக்கிறது.
பிரகிருதி எனப்படும் மூலத்தில் இருந்து தோன்றிய ஐந்து புலன்கள், ஐந்து செயல்கருவிகள், ஐந்து தன்மாத்திரைகள், ஐந்து பூதங்கள் ஆகியவையே புருடனை மயக்கி துக்கப்படுத்துகிறது. பிரகிருதிக்கும் புருடனுக்கும் ஏற்படுகிற தொடர்பே துக்கத்துக்குக் காரணம். இந்த துக்கத்தில் இருந்து விடுபட்டு புருடன் தன்னை உணர்தலே முக்தி. வைதீகக் கலப்பால் ஈஸ்வர சாங்கியம் முரண்பாடுகளின் தொகுப்பாக காட்சி அளிக்கிறது.
பழங்குடிகளான தொடக்கக்கால விவசாயிகளின் தாந்தரீகம் உலகாயதம் சாங்கியம் ஆகியவைகளில், உலகில் சிறப்பாக வாழ்வது பற்றியே பேசுகிறது. இந்த காலகட்டத்துக்குப் பிறகு வாழ்க்கை என்பது துக்கமயமாக மாறியது என்பது உண்மையே, இதற்கு ஈஸ்வர சாங்கியம் கூறுவது போல் பிரகிருதிக்கும் புருடனுக்கும் ஏற்படுகிற (பந்தம்) தொடர்பு காரணம்.
தனித் சொத்துடமையும் சொத்துடமையால் ஏற்பட்ட வர்க்க வேறுபாடே காரணமாகும். இந்தக் காரணத்தை மறுப்பதற்கே ஆன்மீகம் ஆத்மா போதத்தை வளங்குகிறது. ஆத்ம விடுதலையே அனைத்துக்குமான விடுதலை என்று கூறுகிறது. இந்தக் கூற்று நிலவும் வர்க்க சமூகத்தை கட்டிக்காப்பதற்கே உதவுகிறது. இல்லாத ஆத்மாவுக்கு விடுதலைக் கிடைப்பது பற்றி பேசுவது, இருக்கும் வர்க்க வேறுபாட்டினால் ஏற்படும் துக்கத்தை மறைப்பதற்கே ஆகும்.
இந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு உலகில் வழியில்லை என்று கூறுவதன் மூலம் ஆன்மீகத் தத்துவம் வர்க்க சமூகத்தில் சுரண்டலாளர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கிறது. வர்க்க சமூகத்தில் கருத்துமுதல்வாதத் தத்துவம் வர்க்க சுரண்டலாளர்களுக்கு பயன்படுகிறது, உழைத்தும் துக்கத்துக்கு ஆளாகும் உழைப்பாளர்களுக்கு பொருள்முதல்வாதமே சமூக விடுதலையைக் காட்டுகிறது. உழைப்பாளர்களுக்கு சமூக விடுதலையில் தான் முழுமையான விடிவு இருக்கிறது.
வர்க்கமற்ற சமூகத்தில் தோன்றியது சாங்கிய முதல்நிலை பொருள்முதல்வாதம். மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதமானது நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையில் வளர்ச்சி பெற்ற பொருள்முதல்வாதமாகும்.
முதல்நிலை பொருள்முதல்வாதமான சாங்கியத்தின் வளர்ச்சியே மார்க்சிய பொருள்முதல்வாதமாகும். நம்நாட்டு பொருள்முதல்வாத வேரில் இருந்து நாம் கிளர்ந்து எழுவோம். மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதியாக மிளிர்வோம்.