மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம் - பிரேமசந்திரன்

 


முந்தைய பகுதியின் தொடர்ச்சியே

பிரான்சில் பொருள்முதல்வாதமும் மதஎதிர்ப்பும் பிரெஞ்சு புரட்சியும்:

பிரட்டிஷ் பொருள்முதல்வாதமானது தனது அடுத்த கட்ட வளர்ச்சியை 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் கண்டது. ரெனேதெகார்த்தே, துவக்கிவைத்தார். பொருள்முதல்வாத நிலையிலிருந்து கத்தோலிக்கமதத்தை சாதூரியமாக தாக்கினார். இவரின் தத்துவ செல்வாக்கின் காரணமாக ஸ்பினாசோ (டச்சு) தோன்றி அனைத்து மதங்களையும் கடுமையாக தாக்கினார். அவர் கூறினார்: அன்பு, மகிழ்ச்சி, அமைதி, கட்டுப்பாடு உண்மை ஆகியவற்றை கூறுவதாக கருதப்படும் கிறித்தவமதத்தைச் சார்ந்தவர்கள் தினசரி வாழ்க்கையில் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொண்டவர்களாகவும் சண்டையிட்டுக் கொள்பவர்களாகவும் உள்ளனர். கிறித்தவரும், முஸ்லிமும், யூதரும் உடையாலும் வழிபடும் இடங்களாலும் வேறுபடுகிறார்களே தவிர மற்ற அம்சங்களில்ஒன்றாகவே விளங்குகின்றன. மதஆலயங்கள் பெருமைக்குரிய இடங்களாகவும், பணவரவு உள்ள இடங்களாகவும்,மாறிவிட்டன. ஒவ்வொருவரும் அவர் எவ்வளவு தகுதியற்றவராயினும் மதக்குருமராக வர விரும்புகின்றார். மதத்தை பரப்புவது என்பது ஒரு பிழைப்புவாதமாக மாறிவிட்டது.” என்றார்.

லாமெட்ரி (பிரான்சு) என்ற பொருள்முதல்வாத தத்துவஞானி கடவுள் என்ற கருத்தாக்கத்தை கடுமையாக எதிர்த்தார். உலகத்தீமைகளுக்கு முக்கிய காரணம் மதம் என்றார். மதமற்ற உலகமே மகிழ்ச்சியான உலகமாக இருக்க முடியும் என்றார். அப்போதுதான் மத யுத்தத்திலிருந்து உலகம் விடுபட முடியும் என்றார். 18ஆம்நூற்றாண்டில் பிரான்சானது 14ஆம் லூயி மன்னனின் கொடூரமான எதேச்சாதிகாரத்தில் இருந்தது. போராடியவர்கள் 1000 கணக்கில் கில்லட்டின் என்ற கருவியைக் கொண்டு தலை துண்டாடப்பட்டனர். இருப்பினும் டேனிஸ் தீதரோ, மாண்டஸ்கியூ,வால்டர், ஹெல்விசியஸ் ஹோல்பாக் (கலைகளஞ்சியத்தார்) போன்ற போர்குணமிக்க முதலாளித்துவ பொருள்முதல்வாதிகள் முரணற்ற வகையில் நிலபிரபுத்துவ ஒழிப்பை மற்றும் மத எதிர்ப்பையும் நாத்திகத்தையும் அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சித்தாந்த்ததை அதாவது சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற முழக்கங்களை முன்வைத்து பிரெஞ்சு மக்களை திரட்டி 1789ல் பாஸ்டில் சிறைச்சாலையை தகர்த்து பிரெஞ்சு புரட்சியை துவக்கி விரைவில் நிறைவேற்றினர். 1000க்கணக்கான பாதிரியார்களும் மடாதிபதிகளும், மன்னரும் நிலபிரபுக்களும் அவர்கள் உருவாக்கிய கில்லட்டினாலேயே தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

மடாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மடங்களுக்கு நிலபிரபுக்களுக்கு சொந்தமான நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. . மதம் தனிநபரின் சொந்த விவகாரமாக பிரகடனம் செய்யப்பட்டது. புரட்சிக்கு தலைமைதாங்கிய ரோபெஸ்பியர் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றாக ”உன்னத புருஷன்” என்ற மதத்தை உருவாக்க முயற்சி எடுத்து தோற்றார். பின்னர் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நெப்போலியனால் முதலாளித்துவ வர்க்க நலனையொட்டி கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் வரலாறே வெறுக்கும் படியாக பிரெஞ்சு குடியரசுக்கு மன்னராக முடிசூடிக்கொண்டார். புரட்சிகரமான பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கமே பிற்போக்காக மாறி பிரிட்டனை முன்மாதிரியாகக் கொண்டு போராடும் மக்களை ஒடுக்க அவர்களை மதஉணர்வில் வைத்திருக்க முதலாளித்து அரசியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மன்னராட்சி முறையை கொண்டு வந்தது. இது 1870 வரை நீடித்தது.

1848ல் கம்யூனிஸ்டு அறிக்கையில் மதம் குறித்து மார்க்ஸ் எங்கெல்ஸ்: கம்யூனிசத்தின் எதிராளிகள் கம்யூனிசத்திற்கு எதிராக குற்றச்சாட்டை முன் வைக்கும்போது “ வரலாற்று வளர்ச்சியின் போது சமயம், ஒழுக்க நெறி, தத்துவவியல், சட்ட நெறி, இவை சம்பந்தமான கருத்துக்கள் உருத்திரிந்தது மெய்தான். ஆனால் சமயமும் ஒழுக்க நெறியும் தத்துவவியலும், அரசியல் விஞ்ஞானமு் சட்டமும் இந்த மாற்றங்களால் அழிந்துபடாது எப்போதுமே சமாளித்து வந்திருக்கின்றன” என்றும் “சுதந்திரம் நீதி என்பன போன்ற சாசுவத உண்மைகள் இருக்கின்றன. இவை சமுதாயத்தின் எல்லா கட்டங்களுக்கும் பொதுவானவை. கம்யூனிசமானது சாசுவத உண்மைகளை இல்லாதொழியச் செய்கிறது. மதம், ஒழுக்க நெறி ஆகிய அனைத்தையம் புதிய அடிப்படையில் அமைப்பதற்கு பதிலாக இவற்றை ஒழித்து கட்டிவிடுகிறது. ஆகவே கம்யூனிசம் கடந்த கால வரலாற்று அனுபவம் அனைத்திற்கும் முரணாய் செயல்படுகிறது.”என்றனர் . முதலாளித்துவ வாதிகள் முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்து கூறுகையில் மார்க்சும் எங்கெல்சும் ”தற்போதுள்ள உங்களுடைய பொருளுற்பத்தி முறையிலிருந்தும் சொத்துடைமை வடிவிலிருந்தும் உதித்தெழும் சமூக வடிவங்களை பொருளுற்பத்தியின் முன்னேற்றத்தின்போது தோன்றி மறைந்து போகும் உறவுகளாகிய இவற்றை என்றும் சாசுவத இயற்கை விதிகளாகவும் பகுத்தறிவு விதிகளாகவும் மாற்றும்படி உங்களது தவறான தன்னல கருத்தோட்டம் உங்களை தூண்டுகிறது இந்த தவறான கருத்தோட்டம் உங்களுக்கு முன்பிருந்த ஆளும் வரக்கங்கள் யாவற்றுக்குமே இருந்ததுதான். பண்டைக்காலத்து சொத்துடைமையை பொறுத்தவரை நீங்கள் தெட்டத் தெளிவாக காண்பதை, பிரபுத்துவ சொத்துடமை சம்பந்தமாய் நீங்கள் ஒத்துக் கொள்வதை உங்களுடைய முதலாளித்துவ சொத்துடமை குறித்து உங்களால் ஒத்துக் கொள்ள முடிவதே இல்லை. நீங்கள் தடுக்கப் பட்டுவிடுகிறீர்கள். என்றும் . புராதான பொதுவுடமை சமூகம் தவிர கடந்தகால சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்க பகைமைகளின் இயக்கமாய் இருந்திருக்கிறது. இந்த பகைமைகள் வெவ்வேறு சகாப்தங்களில் வெவ்வேறு வடிவங்களை ஏற்று வந்திருக்கிறது. ஆனால் இந்த வர்க்கப் பகைமைகள் ஏற்றவடிவம் எதுவானாலும் சமுதாயத்தின் ஒருபகுதி மற்றொரு பகுதியால் சுரண்டப்பட்டு வந்தது என்பதும் கடந்த சகாப்தங்கள் யாவற்றுக்கும் உண்மை. எனவே கடந்த சகாப்தங்களது சமூக உணர்வு எவ்வளவுதான் பல்வேறுபட்டதாகவும் பலவிதமானதாக இருந்திருப்பினும் வர்க்க பகைமைகள் அறவே அழிந்தாலொழிய முற்றிலும் கரைந்துவிட முடியாத குறிப்பிட்ட சில பொதுவடிவங்கள் அல்லது பொதுவான கருத்துக்களின் குறிப்பிட்ட சில பொதுவடிவங்கள் அல்லது பொதுவான கருத்துக்களின் வட்டத்தினுள்ளேதான் அந்த சமூக உணர்வு இயங்கி வந்திருக்கிறது. இதில் வியப்பு ஏதும் இல்லை. உதாரணமாக மதத்ததை பொறுத்தவரை, பண்டைய உலகு (அடிமைச்சமூகம்)அதன் அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பண்டைய சமயங்களை கிறித்தவ சமயம் வெற்றிக் கொண்டது. பிறகு 18ஆம் நூற்றாண்டில் கிறித்தவ சமயக் கருத்துக்கள் அறிவொளி இயக்க கருத்துக்களுக்கு அடிபணிந்து அரங்கை விட்டகன்ற போது அக்காலத்திய புரட்சி வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்துடன் பிரபுத்துவ சமுதாயம் தனது மரண போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது.எனவும் சமயத்துறை சுதந்திரம் மனசாட்சி சுதந்திரம் ஆகிய கருத்துக்கள் கட்டற்ற (முதலாளித்துவ )சுதந்திர போட்டியின் ஆதிக்கத்தினது அறிவுலக வெளிப்பாடுகளே என்றும் அதாவது முதலாளித்துவ அரசியல் சுதந்திரம் பெற்ற அமைப்பில் மதப்பிரச்சினை என்பது தனிநபர்சார்ந்தது அதாவது அரசு சாராதது, அது மனிதனது மனசாட்சி பிரச்சினை என்றும் அதே சமயத்தில் தனிச்சொத்தை பாதுகாக்கும் பாரம்பரிய கருத்தமைப்புகளிலிருந்து (மதம் உட்பட) மக்களே துண்டித்து கொள்ளும் நிலை ஏற்படும் அவைகள் படிப்படியாக அழிந்து போகும் என்பதை கீழ்க்கண்டவாறும் குறிப்பிடுகிறார். ” கம்யூனிச புரட்சி பாரம்பரிய சொத்துடமை (தனிச்சொத்து) உறவுகளிலிருந்து மிகவும் தீவிரமாய துண்டித்து கொண்டு விடும் புரட்சியாகும் . ஆகவே இந்த புரட்சியின் வளர்ச்சியின் போது (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் போது) பாரம்பரிய கருத்துக்களிடமிருந்து (தனிச்சொத்தை பாதுகாக்கும்) மக்கள் மிகவும் தீவிரமாய் துண்டித்து கொள்ளும் படி நேர்வதில் வியப்பிற்கு இடமில்லை.”

19ஆம் நூற்றாண்டுபிற்பாதியில் ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டு இயக்கங்களின் நிலை:19ஆம் நூற்றாண்டின் முதல் பாதிவரை தொழிற்துறையிலும் அரசியல் துறையிலும் வளர்ச்சி பெற்ற பிரிட்டன் மற்றும் பிரான்சு போன்ற ஒருசில நாடுகள்தான் அரசியல் சுதந்திரம் அடையப்பெற்ற நாடுகளாய் இருந்தன. ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவு பெறாத நாடுகளாகவே இருந்தன. 1848லிருந்து 1851 வரை ஐரோப்பாவில் ஜனநாயத்திற்காகவும் அரசியல் சுதந்திரத்திற்காகவும் செங்கொடி ஏந்தி தொழிலாளி வர்க்கம் நடத்திய ஜனநாயகத்திற்கான போராட்டங்கள்அனைத்தும் முதலாளித்துவ வர்க்கம் இழைத்த துரோகம் காரணமாக ஐரோப்பாவின் எதேச்சாதிகார பிற்போக்கு அரசாங்கங்களால் கடுமையாக ஒடுக்கப்பட்டன மற்றும் தோற்டிக்கப்பட்டன. கட்சி கட்டுவதற்கான அடிப்படை திட்டமும் அதைகட்டுவதற்கான 1871 பாரிஸ்கம்யூனுக்குப் பிறகு அடிப்படை வழிமுறைகளும் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும் எந்த ஒரு நாட்டிலும் மார்கஸியத்திற்கு அந்நியமான குட்டி முதலாளிய அராஜக மற்றும் வலதுசாரி சித்தாந்தப் போக்குகளை் இவற்றை முற்றிலும் முறியடித்து மார்க்ஸியத்தின்அடிப்படையில் ஒரு விஞ்ஞான பூர்வமான கட்சி கட்டப்படவே இல்லை. மார்க்ஸியவாதிகளும் மார்க்ஸியத்திற்கு விரோதமானவர்களும் கலந்து கொண்ட கலவையாகவே கட்சி இருந்தது. அது அக்கட்சியின் திட்டம் மற்றும் போர்தந்திரத்திலும் பிரதிபலித்தது. விஞ்ஞான சோசலிசத்திற்குஅந்நியமான அனைத்து போக்குகளை முறியடிப்பது பற்றியும் அந்தந்த நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் தொடர்ந்து தமது வாழ்நாள் முழுவதும் வழிகாட்டினர். இருப்பினும் கட்டப்பட்ட கம்யூனிஸ்டு கட்சிகளில் எல்லாம் திட்டம் போர்தந்திரம், செயல்தந்திரம் இவற்றில் ஒரு கதம்பவாதப் போக்கே நீடித்து வந்தது. ஆதலால் ஒரு முரணற்ற முண்ணனியாக இருந்து கம்யூனிஸ்டு கட்சியானது மக்களை புரட்சிக்கு வழிநடத்த முடியவில்லை..

மேலும் 17ஆம் ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே இங்கிலாந்தின் அரசியலில் பழமைவாதப் போக்கை அதாவது நிலபிரபுத்துவ வர்க்கத்துடன் ஒத்துழைப்பதை மற்றும் மதவாதப்போக்கை உயர்த்தி பிடிப்பதை ஆங்கிலேய முதலாளித்துவ வர்க்கம் நிரந்தரமாக ஆதரித்தது அது மட்டுமல்லாமல் தனது காலனியான வடஅமெரிக்காவிலும் சமய புத்தெழுச்சியை (revivalism) என்ற இயக்கத்தை உருவாக்கி கிறித்தவ மதத்தை வேகமாக பரப்பியது. 18ஆம்நூற்றாண்டின் துவக்கத்திலேயே சொந்த நாட்டில் பெரும்பாலான உழைக்கும் மக்களை அவர்களது எஜமானர்களுக்கு கீழ்படிந்து நடக்கச் செய்ய இந்த மதபோதனை அவர்களுக்கு மிகுதியான வாய்ப்புகளை அளித்ததை அவர் விரைவிலேயே கண்டு கொண்டார் சமயத்தின் செல்வாக்கு இதற்குரிய சாதனங்களில் ஒன்றாக பயன்பட்டது. மதஉணர்ச்சிகள் மக்களுக்கு குறையுமாயின் அவர்களது போராடும் மனோநிலையிலிருந்து அவர்களை திசைதிருப்ப முடியாது என்பதை ஐரோப்பாவில் நடந்த போராட்டங்களிலும் பாரிஸ் கம்யூனில் தொழிலாளி வர்க்கம் இரண்டு மாதம் அதிகாரத்தை கைப்பற்றி வைத்திருந்தன் மூலமும் உணர்ந்து கொண்ட இங்கிலாந்து முதலாளி வர்க்கம் மக்களை மேலும் மத உணர்ச்சிகளில் இருத்தி வைப்பதற்காக புரோட்டஸ்டான்ட் மதத்தை சேர்ந்த பிரச்சாரகர்களான சாங்கி மற்றும் மூடி போன்றவர்களை அமெரிக்காவிலிருந்து வரவழைத்து இங்கிலாந்து மக்கள் மத்தியில் மதப்பிரச்சாரம் செய்தது. 1875ல் இரட்சண்ய சேணை என்ற மதப் பிரச்சார அமைப்பை உருவாக்கி ஐரோப்பா மற்றும் தனது காலனிய நாடுகளில் மதப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டது. உதாரணமாக காலனிய நாட்டில் கிறித்தவ மதத்தை மட்டுமல்ல அந்த காலனிய நாட்டில் உள்ள மதத்தை பிரச்சாரம் செய்யவும் தனது சொந்த நாட்டிலிருந்து பிரச்சாரகர்களை தயார் செய்துஅனுப்பியது.1875ல்அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தியோசோபிக்கல் சொஸைட்டி (பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த கர்னல் வோல்காட் என்பவரையும் மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த அன்னி பெசன்ட் என்பவரையும் இந்துமதப் பிரச்சாரம் செய்யவும் அவர்களைக் கொண்டு இலங்கையில் புத்தமதவெறி அமைப்புகளை கட்டவுமான வேலையை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செய்தது. மற்றும் அதே சமயத்தில் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தை பின்பற்றி மதத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும் மதவிவகாரங்களை அரசோடு உறவுபடுத்தவும் தொடங்கியது. மத்திய காலத்தில் நிலபிரபுத்துவ வர்க்கமும் கத்தோலிக்கமதவாதிகளும் செய்த வேலையை இப்போது முதலாளித்துவ வர்க்கமும் புரோட்டஸ்டானட் மதவாதிகளும் செய்யத்துவங்கினர்.

எனவேதான் 1891ல் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியானது தனது எர்பர்ட் திட்டத்தில் மதப்பிரச்சினையை ஒரு அம்சமாக முன்வைத்தது. அத்திட்டத்தில் உள்ள அடிப்படை குறைபாடுகளை எங்கெல்ஸ் சுட்டிகாட்டும் போது ஜனநாயக குடியரசுக்காக போராடுகின்ற பணியை முன்வைக்கவில்லை என்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு அறைகூவல் விடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். மதப்பிரச்சினையை சுட்டி காட்டி விமர்சிக்கும் போது ”மதம் என்பது தனிநபர் விசயமாக கருதப்படவேண்டும் ” என்பதை அரசிடமிருந்து தேவாலயங்கள் முற்றிலும் பிரிக்கப்படவேண்டும், அரசைப் பொறுத்தவரை மதமானது தனிப்பட்ட பிரச்சினையே என்றும் கட்சியை பொறுத்தவரை மதம் தனிப்பட்ட விவகாரம் இல்லை என்றும் மதரீதியான நோக்கங்களுக்கு பொதுப்பணத்தை செலவு செய்யகூடாது”என்றுஇருந்ததை மதரீதியான நிறுவனங்களுக்கு எந்தவிதமான ஆதரவும் அரசிடமிருந்து கிடைக்கக் கூடாது என்றும் “மதரீதியான நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக கருதப்படவேண்டும்” என்று இருந்ததை “மதரீதியான நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக நடத்தப்படவேண்டும்” என்றும் விமர்சித்தார் மேலும் கோத்தா (1875) வேலைத்திட்டத்தை விட எர்பர்ட் திட்டம் மிகச்சிறப்பானது என்றும் மதிப்பீடு செய்தார். ஆனால் அவரது விமர்சனம் கட்சிக்கு தெரியப்படுத்தவே இல்லை. 1901ல் தான் அந்த விமர்சனம் வெளிவந்தது.

திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அம்சமாக மதம் மற்றும் மதம் பற்றிய கம்யூனிஸ்டு கட்சியின் அணுகுமுறை.ரஷ்யசமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்கான ஒரு அறிவியல் பூர்வமான திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில் அதை நிறைவேற்ற ஒரு உறுதியான கட்டுப்பாடுடைய போர்க்குணமுள்ள கம்யூனிஸ்டு கட்சியை முதன்முதலாக கட்டியவர் லெனின்தான்.அதனால் தான் வெற்றிகரமாக பாட்டாளிவரக்கப் பரட்சியை நடத்தி ஒருபாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவ முடிந்தது. ஒரு புரட்சிகரமான கொள்கைதிட்டம் (THEORY) இல்லையேல் ஒரு புரட்சிகரமான இயக்கம் இல்லை” எனக்கூறியும், புரட்சிகரமான இயக்கம் மட்டுமே எந்த பிரச்சினையானாலும் வெகுஜனங்களுக்கு தலைமை தாங்கமுடியும் எனக்கூறி திட்டத்தை பற்றி கூறுகையில் “திட்டமானது நமது அடிப்படை பார்வைநிலைகளை வரையறுக்கவேண்டும். நமது உடனடி அரசியல் பணியை தெளிவாக நிறுவவேண்டும். கிளர்ச்சி நடவடிக்கையின் செயல்பரப்பை காட்டக்கூடிய உடனடியான கோரிக்ககைகளை சுட்டிக்காட்டவேண்டும் ஒரு திட்டம் என்பது உத்தரவோ போதனையோ அல்ல. ஒரு திட்டமானது முழுஇயக்கத்தையும் தழுவி நிற்கவேண்டும். நடைமுறையில் இயக்கத்தின் முதலாவது அம்சம் பிறகு அடுத்த அம்சம் என முன்னுக்கு கொண்டு வரப்பட வேண்டும். லெனினுக்கு ரஷ்யசமூகத்திலுள்ள அனைத்துவிதமான அரசியல் பொருளாதார சமூக பிரச்சினைகளில் தெளிவான மார்க்ஸிய பார்வை இருந்துது போலவே மதத்தை பற்றிய தெளிவான மார்க்ஸிய பார்வை இருந்தது.ரஷ்யாவில் 1840லிருந்து ஜாரையும் நிலபிரபுக்களையும் எதிர்த்த விவசாயிகளின் போராட்டமும் .1880க்கு பிறகு ஜாரையும் முதலாளிகளையும் எதிர்த்த தொழிலார் வர்க்கத்தின் போராட்டமும் தொடர்ச்சியாக நடந்து வந்தது. தொடரும்......

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்