சீர்திருத்தவாதம் குறித்து லெனின், மற்றும் இந்தியாவில் சீர்திருத்தங்களின் விளைவும்- தேன்மொழி

 



பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவிலிருந்து வெளியேறிய பின்பு
ஆட்சிக்கு வந்த நேரு காலத்திலிருந்து அதாவது 1950ஆம் ஆண்டுகளிலிருந்து
பல காலம் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கை கீன்சியம் என்று
சொல்லப்படும் கலப்புப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையாகும். இந்த
கொள்கையை செயல்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சனைகள்
தீர்க்கப்படும் என்று ஆட்சியாளர்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இந்தக்
கொள்கையால் மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. மாறாக மக்களின்
பிரச்சனைகள் மேலும் மேலும் மோசமாகியது.
இதன் விளைவாக 1970ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பல இடங்களில் விவசாயிகள்,தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் வெடித்தது.காங்கிரஸ் கட்சி சில மாநிலங்களில் தனது ஆட்சியை பறிகொடுத்தது.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பிளவுகள் வெடித்தது. வசந்தின் இடி
முழக்கமாய் நக்சல்பாரிகளின் கட்சி உதயமாயி அதன் தலைமையில் பல
போராட்டங்கள் நடந்தது. இந்த வரலாற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள
வேண்டியது என்ன? இந்திய ஆளும் வர்க்கங்களாலும் அதன்
ஆட்சியாளர்களாலும் அவர்களது ஆதரவாளர்களான சீர்திருத்தவாதிகளாலும்
கொண்டுவந்து செயல்படுத்திய கொள்கையான கீன்சியம் என்று
சொல்லப்படும் கலப்புப் பொருளாதாரக் கொள்கையானது ஒரு
தோல்வியடைந்த கொள்கையாகும். இந்த உண்மையை நாம் எப்போதும்
மறந்துவிடக்கூடாது.
 
இவ்வாறு 1970ஆம் ஆண்டுகளிலேயே தோல்வியடைந்த கொள்கைக்கு
பூச்சூட்டி அலங்கரித்து இப்போது அதாவது 2022ஆம் ஆண்டில் இந்தியாவில்
மீண்டும் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும் என்று சிலர்
வாதிடுகிறார்கள். இப்படி வாதாடுபவர்கள் தங்களை மார்க்சியவாதிகள் என்று
சொல்லிக்கொள்கிறார்கள். தோல்வியடைந்த கொள்கையை மீண்டும்
கொண்டுவரவேண்டும் என்று சொல்பவர்கள் இவர்கள் மார்க்சியவாதியா?
என்ற சந்தேகம் நமக்கு இயல்பாக எழுகிறது. மார்க்சியவாதிகள் என்று
சொல்பவர்கள் வறட்டுச் சிந்தனையாளர்கள் அல்ல, மாறாக வளமான
சிந்தனையாளர்களே மார்க்சியவாதிகள் ஆவார்கள். அவர்கள் வரலாற்றை
முன்னோக்கி நகர்த்துவதற்கான வழிமுறைகளை சுதந்திரமாக சிந்தித்து
முடிவெடுக்கிறார்கள். வரலாற்றை பின்நோக்கி நகர்த்துவதற்கான
வழிமுறைகளை ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து கடன் வாங்கி சிந்திப்பவர்கள்
அதையே மார்க்சியம் என்றும் முன்னேற்றத்திற்கான வழி என்றும்
கூறுபவர்கள் மார்க்சியவாதிகளாக இருக்க முடியாது. ஆகவே
ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களிலிருந்து ஏகாதிபத்தியவாதிகளால்
உருவாக்கி செயல்படுத்தி தோல்வியடைந்த கொள்கையான கீன்சிய
கலப்புப்பொருளாதாரக் கொள்கைக்கு வக்காலத்து வாங்குபவர்களை
மார்க்சியவாதிகள் என்பதையும் அவர்களது இந்தக் கருத்தை மார்க்சியக்
கருத்து என்றும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய சூழலில்
உழைக்கும் மக்களின் நலன்களுக்கான கருத்துக்களையும் கொள்கைகளையும்
சொந்தமாக சுதந்திரமாக உருவாக்குவதற்கு முயற்சி செய்யாமல் மக்களின்
எதிரிகளான ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்ட கீன்சியக்
கொள்கைக்கு வக்காலத்து வாங்குபவர்கள் சாராம்சமாக சீர்திருத்தவாதத்தை
ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். மக்களிடத்தில்
சோசலிசத்தின் அவசியத்தை பிரச்சாரம் செய்து சோசலிசக் கொள்கைக்கு
வலிமை சேர்ப்பதற்கு மாறாக முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய
சீர்திருத்தவாத்த்தின் பிரச்சாரகராக செயல்படுகிறார்கள்.
 
ஆகவே சீர்திருத்தவாதம் பற்றி லெனின் என்ன சொன்னார் என்பதை நாம்
அடிப்படையாக புரிந்துகொண்டு இந்தியாவில் ஆட்சியாளர்களால்
கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட சீர்திருத்த கொள்கைகளின்
விளைவுகளின் வரலாற்றையும் நாம் பார்க்கும் போது சீர்திருத்தவாதம் பற்றி
லெனின் சொன்னது எவ்வளதூரம் உண்மையாக இருக்கிறது என்பதை இந்த
கட்டுரை விளக்குகிறது.
 

‘’சீர்திருத்தங்கள் என்றால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை
அழிக்காமலேயே உழைக்கும் மக்களின் நிலைமைகளில் மேம்பாட்டையச்
செய்வதாகும். அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கும்வரை, தனிப்பட்ட
மேம்பாடுகள் ஏற்பட்டாலும், எப்போதும் கூலி அடிமைகளாகவே இருந்து
வருவோரான தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான்
சீர்திருத்தவாதம் ஆகும்’’ என்றார் லெனின்.
 
லெனின் கூறியதுபோலவே இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட கீன்சிய கலப்புப்
பொருளாதாரக் கொள்கை என்ற சீர்திருத்தக் கொள்கையானது மக்களை
அடிமைப்படுத்தி ஆளும் ஆட்சி அதிகாரத்தை முடிவிற்கு
கொண்டுவரவில்லை, மேலும் உழைக்கும் மக்களை கூலி அடிமைகளாகவே
இருக்க வைத்து ஏமாற்றிய மோசடிக் கொள்கைதான் என்று இந்திய
வரலாறு நிருபித்துள்ளது.
 
‘’மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தார் ஒரு கையால் சீர்திருத்தங்களை
வழங்கிவிட்டு மறுகையால் எப்போதும் அவற்றை திருப்பி எடுத்துக்கொண்டு
விடுகிறார்கள்’’ என்றார் லெனின்.
 
லெனின் சொன்னது போலவே இந்தியாவில் கீன்சிய சீர்திருத்தக் கொள்களை
1950 ஆண்டில் அமல் படுத்தினார்கள். அரசே மக்களுக்கு கல்வி வழங்குவது,
மருத்துவ வசதி செய்துகொடுப்பது, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த அரசு
பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவது என்ற சீர்திருத்தக்
கொள்கைகளை தற்போது கைவிட்டு விட்டதையும் தொழிலாளர்களுக்கு
இதுவரை வழங்கிவந்த சலுகைகளை பறித்துக்கொண்டு இருப்பதையும் நாம்
காணலாம். இதிலிருந்து அன்று லெனின் சொன்னது போலவே
முதலாளிகளின் அரசு வழங்கிய சலுகைகளை பறித்துக்கொள்வார்கள்
என்பது இன்றும் உண்மையாக இருப்பதை நாம் காணலாம்.
 
 
‘’தொழிலாளர்களை அடிமைப்படுத்தவும், தனித்தனி கோஷ்டிகளாகப்
பிளவுபடுத்தவும் கூலி அடிமை முறையை நிரந்தரமாய் நீடிக்கச் செய்யவும்
இந்த சீர்திருத்த முறையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே
இந்த சீர்திருத்தமானது தொழிலாளர்களை சீர்கெடுப்பதற்கும்,
பலவீனப்படுத்துவதற்கும் முதலாளிகளால் பயன்படுத்தப்படும் ஆயுதமாக
மாறிவிடுகிறது என்றும் சீர்திருத்தவாதிகளை நம்பும் தொழிலாளர்கள்
எப்போதும் ஏய்க்கப்படுகிறார்கள் என்பதை அனைத்து நாடுகளின் அனுபவம்
தெளிவாக்க் காட்டுகிறது’’ என்றார் லெனின்.
 
லெனின் கூறியபடியே இந்தியாவில் பிரிட்டீஷ் காலனி ஆட்சியாளர்களாலும்அவர்களுக்குப் பின்பு வந்த புதியகாலனி ஆட்சியாளர்களாலும் கொண்டுவந்துசெயல்படுத்தப்பட்ட சீர்திருத்த கொள்கைகள் அனைத்தும் உழைக்கும்மக்களை ஏமாற்றுவதற்கே பயன்பட்டது. வேலையில்லாத பட்டாளம்எவ்வளவுக்கு பெருகுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு முதலாளிகள்உழைக்கும் மக்களுக்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்டி அவர்களின்மூலதனத்தை குவித்துக் கொள்வார்கள். ஆகவே முதலாளிகளும் அவர்களதுஅரசும் எப்போதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க விரும்பமாட்டார்கள். ஆனாலும் வேலையில்லாத் திண்டாம் அதிகரித்தால்உழைக்கும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுவார்கள் என்பதை உணர்ந்துஆட்சியாளர் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க ஆர்வம்உள்ளவர்கள் போல் காட்டிக்கொள்வதற்காக வேலை வாய்ப்பில் எளியமக்களுக்கு (பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு) முன்னுரிமைகொடுக்கிறோம் என்று சொல்லி இடஒதுக்கீட்டுக் கொள்கை என்ற சீர்திருத்தக்  கொள்கையை கொண்டுவந்து இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இதன்மூலம் இவர்களால் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பைஇவர்களால் கொடுக்க முடியாது அதற்கு இவர்கள் முயற்சி செய்யமாட்டார்கள் என்ற உண்மையை உழைக்கும் மக்களிடம் மூடிமறைத்துஏமாற்றினார்கள். அனைத்து மக்களுக்கும் இவர்கள் வேலை வாய்ப்பைஏற்படுத்தவே இல்லை. மேலும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுசெய்வதன் மூலம் உழைக்கும் மக்களை சாதிரீதியாக நிரந்தரமாக பிரிக்கும்மோசடியை செய்தார்கள். ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும்ஒற்றுமையாக இருக்கவிடாமல் சாதி அடிப்படையில் சில சாதியைச்சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பதைப் பார்த்து பிற சாதியினர் போட்டிபொறாமை கொள்ளச் செய்து சாதி அடிப்படையில் வேற்றுமையையும்வெறுப்பையும் பகையையும் வளர்த்தார்கள். லெனின் கூறியதுபோலஉழைக்கும் மக்களை கோஷ்டிகளாக சாதி அடிப்படையில்பிளவுபடுத்தினார்கள். கூலி அடிமைத்தனத்திலிருந்து உழைக்கும் மக்கள்விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வை உழைக்கும் மக்களிடம்மழுங்கடித்தார்கள். ஆட்சியாளர்களும், முதலாளிகளும் கொடுக்கும்சலுகைகளே போதுமானது என்ற சுயதிருப்தி மனப்பான்மையை மக்களிடம்ஏற்படுத்தினார்கள். இந்தகைய மன நிலையிலேயே வாழ்ந்துபழக்கப்பட்டுவிட்ட மக்கள் இப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்டசலுகைகளை ஆட்சியாளர்கள் பறிக்கும் போது உழைக்கும் மக்கள் கையறுநிலையிலேயே நிற்கிறார்கள். இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்கானநிறுவனங்கள் அதாவது கட்சிகள் இன்றி மக்கள் தனிமைப்பட்டுள்ளார்கள்.

 

ஆகவே இந்திய வரலாற்றில் உழைக்கும் மக்கள் இந்த சீர்திருத்தவாதிகளை நம்பி அவர்கள் பின்னால் சென்றதன் விளைவாக உழைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் பலவீனப்படுத்தப் பட்டுள்ளார்கள், உழைக்கும் மக்கள்சீரழிந்துள்ளார்கள் என்ற நடைமுறை உண்மையை அன்றே லெனின் பலநாடுகளின் அனுபவங்களிலிருந்து வழிகாட்டியதை நாம் பின்பற்றத்தவறியதன் பலனை இப்போது நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.
 

 

‘’அற்ப சலுகைகளின் மூலம் சீர்திருத்தவாதிகள் தொழிலாளர்களை
பிளவுபடுத்தவும்ஏமாற்றவும் முயல்கிறார்கள்அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பிவிட முயலுகிறார்கள்’’ என்றார் லெனின்.
 

இங்கு சாதி அடிப்படையிலான அற்ப சலுகைகளுக்கான போராட்டங்களை

சீர்திருத்தவாதிகள் முன்னெடுக்கிறார்கள். இத்தகைய சீர்திருத்தங்கள் மூலம்ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வெகுசிலருக்கு சலுகை கிடைத்தாலும்மிகப்பெருவாரியான ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு இந்த சலுகைகள்கிடைப்பதில்லை. எனினும் இந்த சீர்திருத்தைக் காட்டி ஒடுக்கப்பட்டசாதியைச் சேர்ந்த பெருவாரியான உழைக்கும் மக்களை ஏமாற்றுவதோடு பிறசாதி உழைக்கும் மக்களிடம் பொறாமை உணர்வை தூண்டி உழைக்கும்(ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்களை இந்த சாதியவாதிகள் திரட்டி தங்களது சாதிக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்றும் தங்களது குறிப்பிட்டசாதிக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு சாதி மக்களிடம் பகையை தூண்டுவது) மக்களிடம் பிளவைஏற்படுத்துவதை நாம் காணலாம். மேலும் கூலி அடிமை முறையை ஒழிப்பதற்கான வர்க்கப் போராட்டம் தேவையில்லை சலுகைகளுக்காக மட்டும் போராடினால் போதும் என்ற மனோநிலையை உழைக்கும் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. ஆகவே லெனின் கூறியது போல இந்த சீர்திருத்தவாத கண்ணோட்டம் கொண்டவர்கள் இன்றும் மக்களை பிளவுபடுத்துவதையும் ஏமாற்றுவதையும் வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்புவதையும் அவர்களின் வர்க்கப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிப்பதையும் நாம் காணலாம்.
 
‘’தொழிலாளர்களிடையே சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கு எவ்வளவுக்கு
எவ்வளவு பலமாய் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் பலமிழந்தவர்களாகிவிடுகிறார்கள் முதலாளித்துவ வர்க்கத்தை அண்டி வாழவேண்டிய அவர்களது சார்பு நிலை அவ்வளவுக்கு அவ்வளவுஅதிகமாகிவிடுகிறது. முதலாளித்துவ வர்க்கம் பல்வேறு தக்கடி
வித்தைகளைக்கையாண்டுச் சீர்திருத்தங்களை தள்ளுபடி (பறித்துக்கொள்வதுசெய்வது அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாகிவிடுகிறது’’ என்றார் லெனின்.
 இங்கே உழைக்கும் மக்களிடையே சோசலிசக் கொள்கையில் உறுதியாக உள்ள மார்க்சிய லெனினியவாதிகளின் செல்வாக்கு உழைப்பாளர்களிடம் இல்லை. உழைப்பாளர்கள் சீர்திருத்தவாதத்தை அடிப்படையில் ஏற்றுக்கொண்ட திருத்தல்வாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கில்தான் உள்ளனர். இவர்களின் செல்வாக்கின் கீழ் உழைப்பாளர்கள் இருப்பதால்தான் இந்த உழைப்பாளர்கள் பலமிழந்தவர்களாகவும் முதலாளித்து வர்க்கத்தாரைஅண்டி வாழ்பவர்களாகவும் தொடர்ந்து பழக்கப்பட்டு விட்ட காரணத்தால் இதுவரை உழைப்பாளர்கள் அனுபவித்து வந்த சலுகைகளை இன்றைய ஆட்சியாளர்கள் எளிதாக பறித்துக்கொண்டு
இருக்கிறார்கள். லெனின் அப்போது சொன்னது இப்போதும் இங்கே எதார்த்த உண்மையாக இருக்கிறது.
 

‘’எல்லா நாடுகளிலும் சீர்திருத்தவாதிகள் இருக்கிறார்கள். ஏனெனில் எங்கும்முதலாளித்துவ வர்க்கத்தினர் ஏதேனும் ஒரு வழியில் தொழிலாளர்களைசீரழிக்க முனைகின்றனர், கூலி அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்றஎண்ணத்தையே உழைப்பாளர்கள் கைவிட்டு விட்டு மனநிறைவு கொண்டஅடிமைகளாக உழைப்பாளர்களை மாற்ற முயலுகின்றனர்’’. என்றார் லெனின்.

 

லெனின் சொன்னது போலவே இங்கே சீர்திருத்தவாதிகள் உழைக்கும்

மக்களை சீரழித்து கூலி அடிமை முறையிலேயே சுகம் காண்பவர்களாக மாற்றிவிட்டதையும் கூலி அடிமைத்தனத்தை முடிவிற்கு கொண்டுவர முன்வராததையும் நாம் பார்க்கலாம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்று பாரதி பாடினாரே அந்த நிலையில்தான் இங்கு தொழிலாளிவர்க்கம் இருக்கிறது இதற்கு காரணமாக தொழிலாளி வர்க்கத்தை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த நிலைக்கு தொழிலாளிவர்க்கத்திற்கு தலைமை ஏற்று வழிகாட்டிய இந்த சீர்திருத்தவாதிகளே,திருத்தல்வாதிகளே காரணம் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்வோம்.
 
‘’சீர்திருத்தவாதம் உண்மையில் மார்க்சியத்தை கைவிட்டு அதற்குப் பதிலாகமுதலாளித்துவ சமூக கொள்கையை பின்பற்றுவதைக் குறிக்கிறது என்றும் மார்க்சிய நிறுவனம் அதாவது கம்யூனிஸ்டு கட்சி அழிக்கப்படுவதையும் தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயகக் கடமைகளை மறுத்துவிட்டுஅவற்றுக்குப் பதிலாக மிதவாத தொழிலாளர் கொள்கை பின்பற்றுவதை குறிக்கிறது’’ என்றார் லெனின்.


லெனின் கூறியது போலவே இந்தியாவில் சீர்திருத்த கொள்கைகளை

ஆட்சியாளர்கள் செயல்படுத்திக்கொண்டிருந்த காலங்களில் தொழிலாளி வர்க்க இயக்கமானது மார்க்சியத்தை கைவிட்டு விட்டு சீர்திருத்தவாத கொள்கையைப் பின்பற்றும் திருத்தல்வாதமாக மாறியது. பொதுவுடமை கட்சியானது திருத்தல்வாத கட்சியாக மாறியது வரலாறு. இதற்கு காரணம் பல, அவற்றில் ஒன்றுதான் கீன்சிய சீர்திருத்தவாத கொள்கையாகும்.இவ்வாறு பொதுவுடமை கொள்கையையே கைவிட்டு விட்டு திருத்தல்வாத கொள்கை உருவானதற்கு காரணமான கீன்சிய சீர்திருத்த கொள்கையை இப்போது கொண்டுவந்து பின்பற்ற வேண்டும் என்று புதிதாக முளைத்த திருத்தல்வாதிகள் சொல்கிறார்களே அவர்களை நாம் இனம் கண்டுகொள்ளவேண்டும்.
 

 

எனினும் சீர்திருத்தங்களுக்கு கம்யூனிஸ்டுகள் எதிரானவர்களா? என்ற
கேள்வியை எழுப்பி இல்லை என்றும் சீர்திருத்தங்களை மார்க்சியவாதிகள் எப்படி பார்க்கிறார்கள் அதனை எப்படி அணுக வேண்டும் அதனை கடைபிடிக்க நாம் என்ன வகையான அனுகுமுறையை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு லெனின் கீழ் கண்டவாறு வழிகாட்டுகிறார்.
 

 

‘’மார்க்சிய தத்துவத்தை கிரகித்துக் கொள்ளும் தொழிலாளர்கள், அதாவது
மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை கூலி அடிமை முறை தவிர்க்க  முடியாமல் நீடிக்கும் என்பதை உணர்ந்துகொள்ளும் தொழிலாளர்கள்,முதலாளித்துவ சீர்திருத்தம் எதனாலும் ஏய்க்கப்பட்டுவிட மாட்டார்கள். எங்கேமுதலாளித்துவம் தொடர்ந்து நீடிக்கிறதோ அங்கே சீர்திருத்தங்கள் நீடித்துநிலைக்கவோ அதிக பயனளிப்பனவாகவோ இருக்க முடியாதென்பதைஉணர்ந்துகொள்ளும் இத்தொழிலாளர்கள், மேம்பாடான நிலைமைக்காகப்போராடி, கூலி அடிமை முறைக்கு எதிரான போராட்டத்தைமும்முரமாக்குவதற்காக இம்மேம்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.’’என்றார் லெனின்.

 

இந்தியாவில் தொழிலாளி வர்க்கங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் இந்த
சீர்திருத்தங்கள் நீடித்து நிலைக்காது என்றும் அதிக பயன் கொடுப்பதாகவும் இருக்காது என்ற உண்மையை சொல்லி தொழிலாளர்களுக்கு மார்க்சிய லெனினியத்தை போதித்து அதனை தொழிலாளர்கள் கிரகித்துக்கொள்ளும்படி செய்திருந்தால் தொழிலாளர்களை ஆட்சியாளர்களும் சீர்திருத்தவாதிகளும்
ஏமாற்றியிருக்க முடியாது. இந்த மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை


கூலி அடிமை முறை நீடிக்கும் என்பதை தொழிலாளர்களுக்கு எடுத்துச்

சொல்லி கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதுதான் தொழிலாளர்களின் லட்சியம் என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்திஅதற்கான போராட்டத்தில் இந்த முதலாளிகளையும் அதன் ஆட்சியாளர்களையும் எதிர்த்த வர்க்க அரசியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபடுபடுவதற்காக இந்த சீர்திருத்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி தொழிலாளர்கள் வளர்க்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த வகையில்தான் சீர்திருத்தத்தை மார்க்சியவாதிகள் இந்தியாவில் அனுகியிருக்க வேண்டும். அப்படி லெனினிய முறையில் இங்கு தொழிலாளி வர்க்க இயக்கம் அனுகவில்லை அதன் விளைவுதான் இன்றைய இழிநிலையாகும்.
 


‘’தொழிலாளி வர்க்க இயக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு சுயேச்சையாக

இருக்கிறதோ, அதன் குறிக்கோள்கள் எவ்வளவுக்கு ஆழமாகவும் விரிவாகவும் உள்ளதோ, சீர்திருத்த குறுகிய நோக்கிலிருந்து அது எவ்வளவுக்கு எவ்வளவு விடுபட்டு இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் மேம்பாடுகளை (சலுகைகளை) விடாது இருத்திக் கொள்வதும் (அதாவது முதலாளிகளால் பறித்துக்கொள்ள முடியாதபடி தடுப்பது) அதனை பயன்படுத்திக் கொள்வதும் எளிதாகிவிடுகிறது.’’ என்கிறார் லெனின்.
 

 

இதன் மூலம் லெனின் வலியுறுத்துவது என்ன? தொழிலாளி வர்க்க இயக்கம் மற்றும் அதன் கட்சியானது சுதந்திரமான கட்சியாக இருக்க வேண்டும், அது தனது கொள்கைகளை சுதந்திரமாக உழைக்கும் மக்களின் நலனிலிருந்து எடுக்க வேண்டும். முதலாளித்துவ ஆட்சியாளர்களால் எடுத்து கொண்டுவரப்படும் சீர்திருத்த கொள்கைகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது அந்த கொள்கைகளை உழைக்கும் மக்களின் நலனிலிருந்து பரிசீலித்து சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். உதாரணமாக சாதி அடிப்படையில் வேலை வாய்ப்பிற்கு சலுகை வழங்கும் கொள்கை உழைப்பாளர்களின் நலனுக்கான சீர்திருத்த கொள்கை இல்லை, மாறாக உழைப்பாளர்களை ஏமாற்றுவதற்கும் சாதி அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கான கொள்கை என்று அதனை நிராகரித்து அனைத்து மக்களுக்கும் வேலை கொடு, வேலை கொடுக்க முடியாதவர்களுக்கு நிவாரணம் கொடு என்ற சீர்திருத்த கொள்கையை முன்வைத்து தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். சீர்திருத்த கொள்கை என்பது குறுகிய நோக்கம் கொண்டது என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்தி அதற்கு தொழிலாளர்கள்
பலியாகிவிடக்கூடாது என்று தொழிலாளர்களை எச்சரித்து இருக்க வேண்டும்.

அப்படி எச்சரித்து தொழிலாளர்கள் வளர்க்கப்பட்டிருந்தால் இப்போது

இன்றைய ஆட்சியாளர்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை இவ்வளவு எளிதாக பறித்திருக்க முடியாதுதொழிலாளி வர்க்க இயக்கம் சீர்திருத்த குறுகிய நோக்கத்திலிருந்து விடுபடாமல் அந்த சீர்திருத்தத்திற்குள்ளேயே வீழ்ந்துவிட்டதாலேயே இன்றைய உழைக்கும் மக்களின் இழிநிலை ஆகும்.


 

‘’சீர்திருத்தங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்குமான சாத்தியப்பாடு ஒன்றையேனும் தவறவிடாமல் மார்க்சியவாதிகள் அயராது
வேலை செய்கின்றனர்அதே வேளையில் சீர்திருத்துவாத்த்துக்கு  அப்பாற்பட்ட போராட்டங்களிலும் (அரசியல் போராட்டங்கள், கூலி அடிமை
முறையை ஒழிப்பதற்கான போராட்டங்களிலும்) மார்க்சியவாதிகள்  ஈடுபடுகிறார்கள். ஆனால் சீர்திருத்தவாதிகளும் திருத்தல்வாதிகளும் சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதோடு தங்களது போராட்டங்களை நிறுத்திக்கொள்கிறார்கள். அதற்கு மேல் போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்றால் அதனை எதிர்த்து பெருங் கூச்சல் போடுகிறார்கள்’’என்றார் லெனின்.
 


இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? சீர்திருத்தங்களுக்காக குறிப்பாக உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்கும், அவர்களை பிளவுபடுத்துவதற்கும், அவர்களது போர்குணத்தை மழுங்கடிப்பதற்கும் பயன்படும் சீர்திருத்தத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்பாடுத்தும், அவர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் மேலும் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வை வளர்ப்பதற்கு பொறுத்தமான சீர்திருத்தங்களை உழைக்கும் மக்களின் தலைவர்கள் சுதந்திரமாக சிந்தித்து உருவாக்கி அத்தகைய சீர்திருத்தங்களுக்காக உழைக்கும் மக்களை போராடவைத்திருக்க வேண்டும். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் கூலி  அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டுவதற்கான அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட வேண்டும். இந்த முறையில்தான் சீர்திருத்தத்திற்கான போராட்டங்களை நடத்திட வேண்டும் என்று லெனின் பிராவ்தா துருதாஇதழ் 2, ல் 1913 ஆண்டு லெனின் எழுதி உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டினார். ஆனால் இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் தோன்றியது முதல் இன்றுவரை சீர்திருத்தவாதம் பற்றிய இந்த லெனினிய வழிகாட்டுதலை
ஏற்றுக்கொள்ளவும் இல்லை, அதனை பின்பற்றவும் இல்லை. இதன்  விளைவுதான் இப்போது உழைக்கும் மக்களிடையே பிளவு,
அவர்களிடத்திலுள்ள போர்க்குண இழப்பு, அடிமை வாழ்விலான மோகம்  போன்ற இழிநிலைகள். இப்போதாவது விழித்துக்கொண்டு தொழிலாளி வர்க்கம் சீர்திருத்தவாத்த்தை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கத்திற்கு இலக்கு கோரிக்கை வைக்கிறது.
 

 

சீர்திருத்தம் என்பது தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைக்கான போராட்டம்குறைவான பேருந்து கட்டணம் போன்ற சலுகைகளை குறிக்கிறது.


சீர்திருத்தவாதம் என்பது கீன்சியம் போன்ற ஏகாதிபத்தியவாதிகளின்

பொருளாதாரக் கொள்கைகளை குறிக்கிறது. மார்க்சியவாதிகள் உழைக்கும் மக்களின் மேம்பட்ட வாழ்க்கைகாக சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அதே வேளையில் முதலாளிகளின் (ஏகாதிபத்தியவாதிகளின்) சீர்திருத்தவாதக் கொள்கைகளை எதிர்த்தும்
 சீர்திருத்தவாதிகளை எதிர்த்தும் போராடுகிறார்கள். மார்க்சியத்தை
பேசிக்கொண்டே ஏகாதிபத்திய முதலாளிகளின் நலன் காக்கும்  சீர்திருத்தவாதக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்குவது சித்தாந்தத்
துறையில் கலைப்புவாதமே ஆகும். மேலும் அரசியலில் நிதிமூலதனக்  கூட்டத்திற்கு அடிபணியும் சமரவாதமே ஆகும். இதுதான் இந்திய ஏகாதிபத்திய சார்பு சீர்திருத்தவாதிகளின் வரலாறாகும். இதனை விளக்கமாக புரிந்துகொள்ள வேண்டியது மார்க்சியவாதிகளின் கடமையாகும்.
 


குறிப்பு:- திருத்தல்வாதம் எதிர்ப்போம், மார்க்சியம் காப்போம் என்ற லெனினது நூலில் பக்கம் 119ல் மார்க்சியமும் சீர்திருத்தவாதமும் என்ற லெனினது கட்டுரையின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை எழுதப்பட்டது. 

 



இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்