4
சாங்கியம் (முதல் பகுதி)
இந்தியத் தத்துவங்களில்
மிகமிக பழைமையானது சாங்கியம். தொடக்கால அனைத்துத் தத்துவங்களும் சாங்கியத்தைப் பற்றி
பேசுவதில் இருந்தே இதன் பழைமையை அறிந்து கொள்ளலாம். சாங்கியம் பழைமையானது என்றாலும்
அதன் பழைமையான நூல் எதுவும் கிடைக்கவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஈஸ்வர கிருஷ்ணர்
எழுதிய சாங்கிய காரிகை நூலே கிடைத்ததில்
முதலாவதாகம்.
சாங்கியத்தை முதலில் உருவாக்கியது
கபிலர் என்றும் அந்த கபிலர் வைதீகத்தோடு இணைத்து பேசப்படுவதும் உண்டு. ஆனால் தொடக்கால
சாங்கியம் ஆன்மீகத்துக்கு எதிராகவே உள்ளது. அதனால் தான் வைதீக நூலான பிரம்ம சூத்திரம் சாங்கியத்தை மறுதலிக்க வேண்டி
வந்தது.
சாங்கியம் என்ற சொல்லுக்கு
பல பொருள் கூறப்படுகிறது. எண்ணிக்கை, முழுமையான அறிவு, விவேகம், பகுத்தறிவு, தர்க்க
ஞானம் என்று பலவாகக் கூறப்படுகிறது.
உலகப் படைப்பை 25 தத்துவங்களின்
தொடர்பு மூலம் விளக்கப்படுவதினால் இதற்கு எண்ணிக்கை என்ற பெயர் கூறப்படுகிறது. உலகப்
படைப்பைப் பற்றி முழுமையான விளக்கம் கொடுப்பதினால் இதற்கு முழுமையான அறிவு என்று கூறப்படுகிறது.
உலகப் படைப்புக்கு பிரம்மம் போன்ற பொருளற்ற, உலகுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக சக்தியை காரணமாக
சாங்கியம் கூறாததால் இதனை பகுத்தறிவு, தர்க்க
ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.
சாங்கியம் பெயரால் கிடைக்கிற
பிற்கால நூல்கள் தொடக் கால சாங்கியத் தத்துவத்துக்கு மாறாக அப்பாலைத் தத்துவமாக-ஆன்மீக
மயமாக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.
தேவிபிரசாத் சட்டோபாத்யாயா:-
“தொடக்கத்தில்
முழுதும் நாத்திகவாதமாகவும், பொருள்முதல்வாதமாகவும் இருந்த சாக்கியம் காலப்போக்கில்
தீவிரமாக ஆன்மீக மயாக்கப்பட்டு கருத்துமுதல்வாதம் ஊட்டப்பட்டு இறுதியில் உண்மையான மூல
சாங்கியத்திற்கு நேர் எதிராக மாற்றப்பட்டது.”
(உலகாயதம்-
பக்- 73)
இருந்தாலும் தேவிபிரசாத்
சட்டோபாத்யாயா போன்ற தத்துவ ஆய்வாளர்கள் தொடக்கக்கால சாங்கியத்தை திரட்டித் தருவதில்
பெரும்பாடுபட்டுள்ளனர்.
இன்றைய நிலையில் பெரும்பாலான
தத்துவங்கள் வைதீக மயமாதலுக்கு உட்பட்டே காணப்படுகிறது. வைதீக பட்டியலில் வேதத்துக்குப்
புறம்பான பிற தத்துவங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சேர்ப்பின் வழியில், பிற தத்துவங்கள்
விளக்கப்படுகிற போது அனைத்துத் தத்துவங்களும் வைதீகமாக காட்ட முயற்சிக்கப்படுகிறது.
என்ன முயற்சி செய்யப்பட்டாலும்
பிரஸ்தானதிரயத்தில் உள்ள பிரம்ம சூத்திரம் என்ற நூலில் உபநிடதத் தத்துவங்களுக்கு எதிரான
போக்காக சாங்கியத்தை விமர்சித்துள்ளதை மாற்றவோ, மறைக்கவோ முடியாது. ஆனால் இன்றைய நிலையில்
சாங்கியத்தை இணைத்து ஐந்து அல்லது ஆறு தரிசனங்களாக கூறப்படுபவை வைதீக தத்துவமாக அறிவிக்கப்படுகிறது.
ஆனால் வைதீகத்தை விளக்கும் நூல்களில் மிகவும் முக்கியமானதான பிரம்ம சூத்திரத்தில் சாங்கியம்
ஏன் மறுக்கப்பட்டுள்ளது என்பதற்கு அவர்களால் நேர்மையான பதிலைத் தரமுடியவில்லை.
இந்தியத் தத்துவங்களை அவைதீக தத்துவங்கள், வைதீக தத்துவங்கள் என்று
இரு பெரும் பிரிவாகப் பிரிப்பது வைதீக மரபு. இதில் உலகாயதம், பவுத்தம், சமணம் ஆகியவை அவைதீக தத்துவங்கள் என்று அழைக்கப்படுகிறது.
சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை
ஆகியவைகளை வைதீக தத்துவம் என்று கூறப்படுகிறது. இறுதியில் உள்ள மீமாம்சை தத்துவத்தை
பூர்வ மீமாம்சை, உத்திர மீமாம்சை என்று பிற்சேர்க்கையாக வைதீகம் சேர்க்கப்பட்டுள்ளது
என்பதே உண்மையாகும். வேதாந்தத்தையே உத்திர மீமாம்சை என்று கூறப்படுகிறது.
பூர்வ மீமாம்சை வேத சம்கிதையோடு
தொடர்புடையவை, வேதாந்தமாகக் கூறப்படும் உபநிடதக் கருத்துக்களை இந்த பூர்வ மீமாம்சை
ஏற்றுக் கொள்ளாது. உத்தர மீமாம்சை அதாவது வேதாந்தம் உலக வெறுப்பையும் சம்சார வெறுப்பும்
அதாவது வாழ்க்கை வெறுப்பையும், முக்தியையும் முன்னிருத்துகிறது. ஆனால் பூர்வ மீமாம்சை
உலகில் சிறப்பாக வாழ்வது பற்றியே பேசுகிறது. இருந்தாலும் உத்திர மீமாம்சை ஐந்து தரிசனத்தில்
இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பின் காரணமாக
ஆறு தரிசனம் என்று கூறுகிற போக்கு பிற்காலத்தில் ஏற்பட்டது. ஆறாவதாக தனித்து கூறப்பட்டு,
சேர்க்கப்பட்ட வேதாந்தம் (உத்தர மீமாம்சை) ஆறு தரிசனங்களையும் வைதீகமாக முயற்சிக்கிறது.
அதற்கான விளக்கங்கள் அனைத்திலும் புகுத்தப்பட்டுள்ளது.
சாங்கிய கலைச்சொற்களை வைதீகம் எடுத்துக் கொண்டு
அதை வைதீகமாக விளக்கும் போக்கு அதிக இடங்களில் காணப்படுகிறது. கீதையில் சாங்கியம் வைதீகமாக
விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கீதையின் பதினான்காவது அத்தியாயம் சாங்கிய கலைச்சொற்கள்
அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சத்காரியவாதத்தின் அடிப்படையில் சாங்கியம் காணப்படுகிறது
முக்குணங்களின் அடிப்படையில் படைப்பைப் பற்றி பேசுகிறது. வைதீக விளக்கத்தில்தான் சாங்கியத்தில்
இருபத்தைந்து தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது. புருஷனுக்கும் பிரகிருதிக்கும் வைதீக வழியிலான
விளக்கம் பிற்காலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
சங்கியத்தின் புருஷ், வைதீகத்தில் ஆத்மாவாக ஆக்கப்பட்டுள்ளது.
ஆத்மா என்பது உடல் தோன்றி அழிந்த பிறகும் தொடர்ந்து இருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு
மாறாக பிரகிருதியை பெண்ணாகவும் புருடனை ஆணாகவும் சாங்கியம் கூறுகிறது. இதனை புரிந்து
கொள்ளவதற்கு தாந்தரீகத்தை அறிந்திருக்க வேண்டும்.
சாங்கியம்
என்ற பெயரால் கிடைக்கிற நூல்கள் அனைத்தும் பிற்காலத்தவை என்று பார்த்தோம். மூல சாங்கியத்தை
அறிந்து கொள்வதற்கு நேரடிய நூல் எதுவும் கிடைக்கவில்லை. கலப்பட சாங்கிய நூலில் காணப்படும்
முரண்பாடுகளின் மூலம் ஆதி சாங்கியக் கருத்தை அறியலாம். அதாவது வைதீக சாங்கியத்தில்
வைதீகத்தோடு முரண்படுகிறவற்றை திரட்டுவதன் மூலம் இதை சாதிக்கலாம். சாங்கியத்தை எதிர்ப்பதற்கு-மறுப்பதற்கு
பிற தத்துவ நூல்களில் காணப்படும் சாங்கியக் கருத்துக்களைக் கொண்டு மூல சாங்கியத்தை
அறிய முயற்சிக்கலாம்.
அவ்வாறான முயற்சிக்கு பாதராயணர்
எழுதிய பிரம்ம சூத்திரம் என்கிற நூல் பயனுள்ளதாக
இருக்கிறது. பிரம்ம சூத்திரத்தில் சாங்கியம் பிரதான
காரண வாதம் பற்றி பேசுகிறது. பிரகிருதியை பிரதானம் என்று கூறப்பட்டுள்ளது. பிரம்மமே
முதல் என்று வேதாந்தம் கூறப்பட்டதற்கு மாறாக சாங்கியம் பிரகிருதியை பிரதானம் என்று
கூறப்படுவதாக பிரம்ம சூத்திரம் கூறியிருக்கிறது.
இயல் உலகுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக கருதும் பிரம்மத்தை முதன்மையாக கருதும் வேதாந்தம்
கருத்துமுதல்வாதத் தத்துவமாகும், பிரகிருதி என்கிற பொருளை முதன்மைப் படுத்துவதனால்
சாங்கியத் தத்துவம் பொருள்முதல்வாதமாகும். பிரம்ம சூத்திரம் சாங்கியத்தை எதிர்ப்பதற்கு
அதில் உள்ள பொருள்முதல்வாதக் கூறுகளே காரணமாகும்.
பிரகிருதி என்பதை மூலப்பிரகிருதி என்றும் வேர்ப்பிரகிருதி
என்றும் அழைக்கப்படுகிறது. பிரபஞ்சமாக தோன்றுவதற்கு முன்பு உள்ள பொருளாக பிரகிருதி
கருதப்படுகிறது. அதனால் தான் மூலப்பிரகிருதி என்றபெயரால் குறிப்பிடப்படுகிறது. சத்துவம்,
ராஜசம், தாமசம் ஆகியவை பிரகிருதியின் மூன்று குணங்களாகும். இந்த மூன்று குணங்களும்
சமநிலையில் இருப்பது மூலப்பிரகிருதி. இந்த மூன்று தன்மைகளின் மாறுதல்களே படைப்புக்குக்
காரணமாகும்.
கண்ணாடி பளிங்கு போன்று பிரதிபலிக்கும் சக்தியும்,
நெருப்பு, நீராவி, காற்று ஆகிய மேல்நோக்கி செல்வதும் ஒளி, பிரகாசம், இன்பம் ஆகியவையும்
சத்துவத்தின் குணங்களாகும். தானும் இயங்கி மற்றவற்றையும் இயக்குவதும் இயக்கம், சுறுசுறுப்பு,
துன்பம் ஆகியவையும் ராஜசம், ராஜசமே துக்கத்திற்குக் காரணமாகும். இயக்கத்தை தடுப்பதும்,
மந்தம், அயர்வு, மயக்கம், சோம்பேறித்தனம் ஆகியவ ஆகியவைகளை ஏற்படுத்துவது தாமசம்.
இந்த உலகம் சூனியத்தில்
இருந்து அதாவது இல்லாததில் இருந்து படைக்கப்படவில்லை. மூலப் பிரகிருதி என்கிற பொருளில்
இருந்தே உலகம் படைக்கப்படுகிறது.
“இல்லது வாராது உள்ளது போகாது” என்கிற மக்கள்
மொழியே சாங்கியத்தின் அடிப்படை. இந்த அடிப்படையை சத்காரியவாதம் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு காரியத்துக்கும்
காரணம் இருக்கிறது என்பது சத்காரியவாதம். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எள்ளில் இருந்தே
எண்ணெய் எடுக்க முடியும். எள் காரணம் எண்ணெய் காரியம். காரணத்திலேயே காரியம் அடங்கி
இருக்கிறது. அதே போலதான் அனைத்தும். மரம் காரணம் கட்டில் காரியம். இருப்பு காரணம் மேசை
காரியம். தங்கம் காரணம் நகை காரியம். காரணத்தில் உள்ளதே காரியத்தில் வெளிப்படும் என்பதே
சத்காரியவாதமாகும்.
கருவளர்ச்சி பற்றிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு
மூலப்பிரகிருதி பிரபஞ்சமாக, பரிணாமம் பெற்றதாக சாங்கியம் கருதியது. இந்த பரிணாமத்தை
இன்றைய விஞ்ஞான கால பரிணாமக் கொள்கையுடன் இணைத்துப் பார்க்க கூடாது. ஏன் என்றால் விஞ்ஞானம்
வளர்ச்சி அடையாத காலத்தில், படைப்புக்கு ஆன்மீக அடிப்படையை ஏற்காமல், பொருள்தான் படைப்புக்குக்
காரணம் என்று கூறுவது முதல்நிலைப் பொருள்முதல்வாதமாகும். இந்த முதல்நிலைப் பொருள்முதல்வாதம்
எப்படி இன்றைய விஞ்ஞான வழிப்பட்ட மார்க்சிய தத்துவமான பொருள்முதல்வாதத்தக்கு சமமாக
இருக்காதோ, அதே போல சாங்கிய பரிணாமத்தையும் இன்றைய நிலையில் வைத்துப் பார்க்கக்கூடாது.
சாங்கியத்தை இதற்கு முன்பு
உள்ள கோட்பாடான தாந்தரீகத்தை இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
சாங்கியம் தொடக்கநிலை பொருள்முதல்வாதமாகும்,
அதனால் உலகில் நடைபெறும் இயக்கம், மாறுதல் ஆகியவைகளின் நிகழ்வுக்கு இயற்கையை மீறிய
சக்தியை காரணமாகக் கூறவில்லை. இயக்கத்தையும் மாறுதலையும் சாங்கியர்கள் அந்தந்தப் பொருளின்
சுபாவம் அதாவது இயற்கை விதி என்று கூறினர்.
சுபாவவாதம் சாங்கியத்தின் முக்கியமான கோட்பாடாகும். இன்றைய விஞ்ஞான வழியில் அன்றைய
சாங்கியர்கள் இயற்கையின் விதிகளை விளக்க முடியாத நிலையில் அதனை சுபாவம் என்கிற விளக்கத்துக்குள்
அடக்கினர். இன்றைய விஞ்ஞானிகள் இந்த சுபாவத்தையே இயற்கையின் விதிகளாக கண்டுபிடித்து
வருகின்றனர்.
புல், இலைகள், நீர் போன்றவற்றை உண்ட விலங்கு
எவ்வாறு பாலைத் தருகிறது என்ற கேள்விக்கு, சாங்கியர்கள் அதன் சுபாவம் என்று பதிலளிப்பர். பிரபஞ்சப் படைப்பும் சுபாவக் கோட்பாட்டின்படியே
சாங்கியர் விளக்கினர். இயற்கைக்கு மீறிய சக்தியை படைப்புக்கு காரணமாக சாங்கியர் கூறவில்லை.
கன்றைக் கண்டதும் பசுவின் உடலில் பால் தானாக சுரப்பது போன்று வெளிப்புறச் சக்தியின்
உதவியின்றி இந்த பிரபஞ்சம் பரிணாமம் பெற்றது.
பிரகிருதிக்கு அடுத்தப்படியாக சாங்கியத்தில்
முக்கியமான கலைச்சொல் புருஷ் (புருடன்).
சாங்கியத்தின் தொடக்க காலத்தில் புருஷ் என்பது ஆணையே குறிக்கிறது. இந்தப் புருடன் பல
என்பதே தொடக்க கால சாங்கியத்தின் நிலை.
தொடக்க கால விவசயத்தையும் தாய்வழி சமூகத்தையும்
சார்ந்தது சாங்கியம். பிரகிருதியை பெண் என்றும் புருடனை ஆண் என்று கருதியது சாங்கியம்.
பிரகிருதிக்கு மற்றொரு பெயர் “அஜ”, இதற்குப் பொருள் பிறக்காத பெண் என்பதாகும். அதாவது
பிறப்பதற்கு தயாராக உள்ள பெண். தாய்வழி சமூகத்தில் சாங்கியம் தோன்றியதால், பெண்ணுக்கே
முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
சாங்கியத்தின் தத்துவ அடிப்படைகள்
மனித வாழ்க்கையின் நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆண் பெண் இணைவால் குழந்தை பிறப்பது
போல பிரகிருதி என்கிற பெண், புருஷ் என்கிற ஆண் ஆகியவற்றின் இணைப்பால் பிரபஞ்சம் தோன்றுவதாக
மூல சாங்கியம் கூறுகிறது.
வளமைக் கோட்பாடான தாந்தரீகத்தின் தொடர்ச்சியாக
இந்த சிந்தனை சாங்கியத்தில் வந்துள்ளதாக கொள்ளலாம். இதனை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
சுருக்கமாகக் கூறுவதைப் பார்ப்போம்.
“பிரகிருதி
என்ற சொல் ஆரம்பக்காலச் சாங்கியர்களது கண்டுபிடிப்பு அல்ல. ஏனென்றால் அது தாந்திரீகத்தில்
இருந்த அடிப்படையான கருத்து. இதன் வரலாறு மிகவும் பழமையானது. இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தில்
பிரகிருதி என்பது பெண்மைக் கோட்பாட்டினைக் குறித்தது என்பதனை மறுக்க முடியாது. இது
சக்தி என்பதற்கான மற்றொரு சொல். இதன் வெளிப்படையான வடிவம் தாய்க்கடவுள்; தாந்திரீகத்தில்
மனித உடல் குறிப்பாகப் பெண்ணின் உடல் உலகின் நுண்மாதிரியாக உள்ளது. எனவே பிரகிருதி
உலகின் அடிப்படையாக மாறியது. ஆகையினால் தாந்திரீகத்தில் உலகமானது பெண்ணிடமிருந்து வந்தது
என்று பொருள் தரும்படியாக வமொத்பூதம் என்று
அழைக்கப்படுகிறது.
உண்மையான
தாந்திரீகத்தில் பிரகிருதி என்பது ஒரு தொல்கதையாக விளக்கப்பட்டது. சாங்கியத் தத்துவவாதிகளின்
மிகப் பெரிய சாதனை இதனைப் பொதுமையான, புறவயமான கருத்துக்களாக மாற்றி வெளியிட்டதாகும்.
இந்த மாறுதல் முக்கியமானது. ஏனென்றால் தொல்பழங்கால சிந்தனையின் வடிவத்தினைப் புரட்சிகரமாக
மாற்றியதோடு மட்டுமல்லாமல் அதில் புதிய சிந்தனைக்கூறுகள் உள்ள உள்ளடக்கத்தினை அறிமுகப்படுத்தவும்
அவர்கள் முயன்றனர்.
ஆரம்பக்காலச்
சாங்கியத் தத்துவவாதிகள் இதனைப் பொதுமையாகவும் புறவயமாகவும் ஒரு கொள்கையாக உருவாக்கும்போது
கடவுள் அல்லது படைப்பாளி என்ற கருத்தை மறுக்க வேண்டியிருந்தது. பிரகிருதியை ஆன்மீகம்
அல்லாத அல்லது பொருள் சார்ந்த உலகத்தின் ஸ்தூலமான ஒன்றாக (அசேதனம்) வரையறுக்க வேண்டியிருந்தது.”
(உலகாயதம் பக்-525-526)
தாய்வழி சமூகத்தின் பிற்காலத்தில்
பெண் கரு உருவாவதற்கு ஆணின் பங்கை அவர்கள் அறிந்து கொண்டனர். இருந்தாலும் ஒரு தார மண
முறை இன்னும் அங்கே தோன்றவில்லை என்பதனால் அந்த கருவுக்கு உரிய ஆண் யார் என்பது தெரிந்து
கொள்ள முடியாது. அதனால் பெண்ணுக்கு அடுத்தபடியான இடம் தான் ஆணுக்குக் கொடுக்கப்பட்டது.
தாய் வழி சமூகம் தொடர்ந்தது.