மார்க்சியத்தின் தோற்றம் வளர்ச்சி-சிபி

 


இத்தொடரின் மூன்றாம் பகுதி இது இதற்க்கு முன் நாம் கண்டவை சுருக்கமாக:- தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம். மாவோ சொன்னது போல, “மார்க்சிய-லெனினியம் என்பது அம்பு போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது”.ஆகவே, தத்துவத்தையும் நடைமுறையையும் இயந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது.

லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரனும் கூட, மார்க்சியக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதிய ரகக் கட்சி யொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும். இதன் அடிப்படையில் அவர் உருவாக்கிய போல்ஷ்விக் கட்சி, அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது, இது உருக்குப்போன்ற கட்டுப்பாடுடைய, புரட்சிகர மார்க்சிய உண்மைகளால் ஆயுதபாணியாகிய, சந்தர்ப்பவாதத்திலிருந்து விடுதலை பெற்ற, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்ட பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும்.

முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, பாதுகாப்பது சம்பந்தமான பல பிரச்சினை களுக்கும் தீர்வு கண்டார். இருந்தும் முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சியத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார். அது முதல்மார்க்சியம் என்பது மார்க்சிய-லெனினியம் என அழைக்கப்படுகிறது.

உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன, இருந்தும் நாம் லெனினிடம் கற்க்க நிறையவே உள்ளது. லெனின் வழிகாட்டுதலில் சரியான அடிப்படை மார்க்சிய புரிதலுக்கு வந்தடைய வேண்டும் என்பதே நமது இலக்கு.

ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவினார் தோழர் லெனின் இதன் மூலம் உலகிற்க்கு கலங்கரை விளக்கா வழிகாட்டினார்.

மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.

1905, ஜூன் - ஜூலை மாதங்களில் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு செயல் தந்திரங்கள்” என்ற அறிக்கையை லெனின் எழுதினார். இதில் அவர் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்த மென்ஷெவிக்குகளின் செயல்தந்திரத்துக்கு எதிராக, எதேச்சாதிகாரத்தை எதிர்த்துத் திட்டமான, விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்து மாறும், அவசிய மேற்பட்டால் ஆயுதமேந்தியும் போரிடுமாறும், அறைகூவி அழைத்த போல்ஷெவிக்குகளின் செயல் தந்திரத்தை முன்வைத்தார்.

“மனிதகுலத்தின் அறிவு அனைத்தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொது உடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்” என்று லெனின் கூறினார்.

மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவ முகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறார் ஆக நாம் நமது நாட்டின் நிலைமையோடு மார்க்சியத்தை பொறுத்தி புரிந்துக் கொள்ள வேண்டும்.

இனி இந்த பகுதிக்கு வருவோம்.

மார்க்சியத்தை திருத்தும் பல்வேறு போக்குகள்

மார்க்சியம்அது உருவான காலத்திலிருந்தே அதை எதிர்க்கும் கோட்பாடுகளோடு மட்டுமின்றி, அதை திரித்து புரட்டும் சக்திகளோடும் தொடர்ந்த போராட்டங்களின் மூலமாகவே தனது உயிர்த்துடிப்பான பொருத்தப்பாட்டை நிரூபித்து வருகிறது.

ரசியாவில் 1905 புரட்சிக்குப் பிந்தைய நிலைமையில், மார்க்சியத்தை திரித்து புரட்டும் முயற்சிகளை முறியடிக்கவும், அன்றைய அரசியல், பொருளாதார சூழலை ஆய்வு செய்யவும் மார்க்சிய கோட்பாடுகளை எப்படி சரியாக பிரயோகிப்பது என்பது குறித்து லெனின் மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற கட்டுரைகளில் விளக்குகிறார்.

இந்தக் கட்டுரைகள் கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் போதனையின் விதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை காட்டுகின்றன. “மார்க்சின் போதனை மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலும் மூட நம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது.

மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப் படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.

"திருத்தல்வாதம் என்பது என்ன?

"திருத்தல்வாதம் என்பது தொழிலாளர் வர்க்க இயக்கத்துள் இருக்கும் முதலாளித்துவ போக்கேயாகும். திருத்தல்வாதம் முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவமாகும்" என்று நமது மூலவர்கள் சொல்லியுள்ளனர் .

சரி நவீனதிருத்தல்வாதம் என்றால் என்ன ?

1960 களில் குருசேவ் கும்பலின் 3 சமாதான கோட்பாடுகள்  ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 பேராயத்தில் கொண்டு வரப்பட்டவை, அவையே சோசலிச சோவியத்தை சிதைக்கும் மார்க்சிய லெனினிய விரோத நிலைப்பாட்டை கையில் எடுத்தது . இவை தனது நாட்டில் மட்டுமல்லாமல் உலக கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாதத்தைப் புகுத்தி; உலகில் உள்ள. எல்லா நாட்டு கம்யூனிச இயக்கங்களையும் புரட்சி நடவடிக்கையை கைவிட்டு முதலாளித்துவதுடன் கைகோர்க்கும் சமரசப் பாதையை வகுத்துக் கொடுத்தது.  இவை பெரும் சிதைவை உருவாக்கியது. இவைதான் இன்றுள்ள பல்வேறு நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை சொல்லில் சோசலிசம் செயலில் முதலாளித்துவம். ஆக மார்க்சியத்தை கைவிட்டு விட்டு மார்க்சியத்தை போதிக்கும் மார்க்சிய கட்சி எப்படி மார்க்சியத்தை வளர்க்கும். ஆக நவீன திருத்தல்வாதம் என்பது தன் நாட்டில் சோசலிசத்தை ஒழித்துக் கட்டியதோடு உலக கம்யூனிச இயக்கங்களையும் மார்க்சியம் அல்லாத திருத்தல்வாத கட்சிகளாக வழிகாட்டியதே.

லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகளையும் மாவோ ரசிய குருசேவ் புரட்டல்வாதிகளையும் 'முதலாளி வர்க்கத்தினர்' என்றும் 'வர்க்க விரோதிகள்' என்றும் அடையாளம் காட்டினார்கள்.

"சோஷலிச நாடுகளில் திருத்தல்வாதிகள் முதலாளித்துவ பாதைக்காக போராடுகிறார்கள் மீண்டும் முதலாளித்துவத்தின் மீட்டெடுக்க முயல்கிறார்கள்" என்றார் மாவோ.

மாவோ குருசேவ் திருத்தல்வாத கும்பலுக்கு எதிரான போராட்டத்தின் போது குட்டி முதலாளித்துவ சூழ்நிலைகளில் புதிய முதலாளித்துவ மூல காரணங்கள் இடைவிடாது தாமாகவே உற்பத்தியாவது பற்றியும் முதலாளிய செல்வாக்கின் விளைவாகவும் குட்டி முதலாளிகளின் பரவலாக தீங்கு பயக்கும் சூழ்நிலைகளின் விளைவாகவும் அரசியல் சீரழிவுவாதிகளும் புதிய முதலாளித்துவ கர்த்தாகளும் தொழிலாளி அணிகளிலும் அரசு நிர்வாகிகள் மத்தியிலும் தோன்றுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

"கட்சி உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து புரட்சியை நடத்த விரும்பவில்லை” என்பதை சுட்டிக்காட்டிய மாவோ,அவர்கள் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள், தமது அதிகார காத்துக் கொள்ள விரும்புகிறார்கள்" என்றார். 

இன்னொரு புறம் மாவோ" நீங்கள் சோசலிசப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் முதலாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லை, அவர்கள் கட்சிக்குள்ளாகவே இருக்கும் வலதுசாரிகள் அவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவப் பாதையை மேற்கொண்டிருக்கிறார்கள்" என்றார் கலாச்சாரப் புரட்சியின் போது .

ரஷ்யாவின் குருசேவ் கும்பல் போல சீனாவின் டெங் கும்பல் உள்நாட்டில் வர்க்கப்போராட்டம் இனி தேவையில்லை என்றும் புரட்சிகர பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அனைத்துலக சீர்திருத்தவாத திருத்தல் வாத கட்சிகளுடன் நட்பும் சகோதரத்துவமும்,  புரட்சிகர இயக்கங்களை கைவிட்டும் தனது உறவை துண்டித்துக் கொண்டும் முதலாளித்துவ பாதையில்  சீரழிந்து புதிய முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப்  படுத்துகிறது.

அதாவது காவுட்ஸ்கி  தொடங்கி குருசேவ் டெங் வரையிலான திருத்தல் வாதிகள் சாராம்சத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிடுவதன் மூலம் முதலாளி வர்க்கத்துடன் அணி சேர்ந்து கொள்ளும் தொழிலாளி வர்க்கத்துக்குள் இருக்கும் முதலாளி வர்க்கமே என்பது எந்த வேறுபாடும் இல்லை.

இவ்வாறு ரசிய சீன திருத்தல்வாதத்தால் மார்க்சியத்திற்கு ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவை மீள முடியாத நிரந்தரமானது என்ற காட்டிக் கொள்வதற்கு ஏகாதிபத்தியப் பிரசாரம் பல முனைகளில் இருந்தும் ஏவப்படுகின்றது; அதனூடே உலகமயமாதல் திட்டங்களை முன்தள்ளியும் தனது சுரண்டலை நியாயப் படுத்த பல வகையான மூளைச் சலவை செய்யப் படுகின்றன.

இராட்சத பல்தேசியக் கம்பனிகள் மூலமான பாரிய மூலதன ஊடுருவல் நடத்தப்படுகின்றது. முதலாளித்துவ நிலைப்புக்கான கருத்தியல்களும் கலாசாரச் சீரழிவுகளும் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. சமூகநலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவற்றுக்குச் சார்பான பொதுவுடைமை எண்ணங்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றன. போராட்டங்கள், எழுச்சிகள், சமூகமாற்றம் என்பன மறுக்கப்பட்டு பிற்போக்குதனமான பழைமைவாதம், முந்தை சமுக அம்சங்களான மத சாதிய இழிவுகளை  மீட்டெடுத்து நிலை நிறுத்தப்படும் போக்கு வலுவடைகின்றது. இவை நமது நாடு உட்பட மூன்றாம் உலக நாடுகளில் முனைப் படைந்திருக்கும் நிகழ்வுப் போக்குகளாகும். இன்றைய உலக மயமாக்கல் உலகை ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே.

இன்று உலக மயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் எதிர்புரட்சிகர கருத்துகளை திணிப்பதையும்; தங்களை மார்க்சியவாதி என்று கூறிக்கொள்வோரே மார்க்சிய விரோத போக்கில் செயல்படுவதை நடைமுறையிலிருந்தே புரிந்துக் கொள்ள முடியும்.


இன்று இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய- நிலவுடமை கலாச்சாரமாகும். அதில் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் எப்படி மார்க்சிய விரோத போக்குகளை விதைக்கிறது என்று முதலில் பார்ப்போம். தன் சுரண்டலை நீட்டிக்க அமெரிக்கர்களாக வாழ நிர்பந்தித்து அடிமைகளை உருவாக்கும் போக்கே இவை, அவையான

 (1). தனி நபர்வாதத்தை தூக்கி நிறுத்துகிறது.

(2). வரைமுறையற்ற ஆபாசத்தை பரப்புகிறது.

(3). விரக்தியை தூண்டும் நடவடிக்கைகள்.

(4). உதிரிதனமாக வன்முறையை பரப்புகிறது.

(5). அறிவியல் கலந்த மூட நம்பிக்கையை பரப்புவது.

(6).  மேட்டிமைதனத்தை பரப்புதல்.

(7). புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனின்யத்தைச் சிதைத்தல்.

(இந்த கருத்துகளை தன் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், உலக்கில் முதலாளிகளாக உயர முடியும் என்று மேல்தட்டு மக்களை வளைத்து போடும் அதே வேளையில் எல்லா மக்கள் மத்தியிலும் உள்ள குட்டிமுதலாளித்துவ பண்பை தூண்டிவிடும் செயலே மேல் உள்ளவை இவை நமது இன்றைய சமூக பொருத்தப்பாடோ ஊன்றி கவனித்தால் புலப்படும் இவை).

 மற்றொரு பக்கம் முன்னால் சோசலிச நாடுகளான  ரசியா, சீன ஏகாதிபத்தியமாக இன்று உருவெடுத்துள்ள நிலையில் அவைகள் தனது சுரண்டலை மூடிமறைக்க கம்யூனிச முகமூடி அணிந்து சிலகாலம் மார்க்சிய லெனின்யத்தை திரித்ததுஇன்றைய அறிவியலையும், தொழிற் நுட்ப வளர்ச்சியை (இன்றைய அதி நவீன) மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பது இவர்களின் வேலையாக இருந்து வருகிறது. இந்த திருத்தல்வாதிகளை இன்று கம்யூனிஸ்டுகள் என்று நம்பி வாழும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளது. அவர்களை புரிய வைப்பதே இந்த தொடர் கட்டுரையின் நோக்கம்.  ( இவை குறிப்பான விசியங்களோடு விரிவாக விவாதிக்கப் பட வேண்டியவை அதனை பின்னர் எழுதுவேன் இப்பொழுது தேவைக் கருதி சுருக்கமாக பார்ப்போம்).

அதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்; புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் இந்த ஏகாதிபத்தியங்கள் இந்தச் சமூகத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து கொண்டுள்ளது அவை மார்க்சியம் அல்லாத போக்கை மார்க்சியமாக போதிக்கிறது.

அதனை எதிர் கொள்ள திறன் அற்று அதில் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது இதிலிருந்து மாறுபட்டு நிற்க்கும் அந்தச் சொற்பர்கள் இங்கே பிரதிபலிப்பதில்லை அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.

 சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும் பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது என்பதும் வெறும் மாயாவாதமே. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவது ஆகியவைதான் முக்கிய பிரச்சினையாகும். அதாவது அரசு அதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கிய பிரச்சினையாகும்.அரசு அதிகாரத்தின் முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள் உள்ளன. புரட்சிகர வன்முறையின்றி சுரண்டும் வர்க்கங்களின் ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது. சுரண்டும் வர்க்கங்கள் தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை.இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்.” மார்க்சின் பிரபலமான சொற்களை மேற்கோள் காட்டுவது எனில், “பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழைய சமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்.” லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பதுமார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச்செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதி களாகவே செயல்படுகின்றனர்.

ஆக இன்று நம் முன்னுள்ள மார்க்சியம் அல்லாத போக்குகளை புரிந்துக் கொள்வதோடு சரியான வகையில் மார்க்சியத்தை கற்று தேறுவதே ஒரு மார்க்சியவாதியின் இலட்சியமாக இருக்க வேண்டும்.

நமது ஆசான் லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் பேசியுள்ள வாசகத்தை கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள் நமது நிலை புரியும், “1890-களின் இறுதியில் மட்டுமின்றி மத்தியிலுங்கூட சிறு கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தவிர வேறு வேலை செய்வதற்கான எல்லா நிலைமைகளும்தலைவர்களின் போதிய பயிற்சி நீங்கலாக மற்றெல்லா நிலைமைகளும் இருந்தன, சித்தாந்திகளும் தலைவர்களுமாகிய நமக்குப் போதிய பயிற்சி இருக்கவில்லை என்று மனந்திறந்து ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக – “நிலைமைகள் இல்லைஎன்பதின் மீது, எந்தச் சித்தாந்தியாலும் இயக்கத்தைத் திசை திருப்பிவிட முடியாத பாதையை நிர்ணயிக்கிற பொருளாயத சூழ்நிலையின் பாதிப்பின் மீது, முற்றாகப் பழி சுமத்திவிடபொருளாதாரவாதிகள் முயல்கிறார்கள். இது தன்னியல்பின் முன் அடிமைபோல் பணிந்து கெஞ்சுவது தவிர வேறென்ன”, சித்தாந்திகள் தமது சொந்த குறைபாடுகளின் மீது மோகம் கொண்டிருப்பது தவிர வேறென்ன? ஆக மார்க்சியத்தை மார்க்சிய ஆசான்களிடமிருந்து தெளிவாக சரியாக கற்று தேறுவது ஒவ்வொரு மார்க்சியவாதியின் தேவை என்பதே எனது வாதம்.

தொடரும்……

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்