உலகில் பழைமையான தத்துவம்
என்றால் அது உலகாயதமே ஆகும். பழங்குடி மக்களிடம் காணப்பட்ட தத்துவக் கூறுகள் உலகாயதமே.
இயற்கையைப் புரிந்து கொள்ள முடியாதப் போக்கு, பேய் பயம் போன்றவை காணப்பட்டாலும் பழங்குடிகளிடம்
காணப்படும் தத்துவக் கருத்துக்கள் உலகாயதமே ஆகும்.
உலகாயதம் என்றால் மக்களின்
தத்துவம் என்பதே பொருளாகும். அதாவது மக்களிடைய பரவியிருந்த தத்துவம் உலகாயதம். பொருட்களால்
ஆன இந்த உலகத்தின் நடைமுறையைச் சார்ந்த தத்துவமாகும். இந்த உலகத்தை – பிரபஞ்சத்தை
– மட்டும் ஏற்றுக் கொண்ட தத்துவம். இந்த உலகத்திற்கு அப்பால் இருக்கிற சக்தியைப் பற்றி
பேசுகிற அப்பாலைத் தத்துவத்தை மறுக்கும் தத்துவம் உலகாயதம்.
நவீனப் பொருள்முதல்வாதத்தின்
தொடக்கநிலையே உலகாயதம். இந்தியாவில் உள்ள பழைய பொருள்முதல்வாதத்தின் பெயர் உலகாயதம்.
இந்தியாவில் உள்ள தொடக்கநிலைப் பொருள்முதல்வாதம் பல போக்குகளைக் கொண்டுள்ளது, அதனால்
பல பெயர்களில் காணப்படுகிறது. உலகாயதம், சார்வாகம், பூதவாதம் என்ற பெயர்களில் தனித்து
பேசப்பட்ட தொடக்கநிலைப் பொருள்முதல்வாதத் தத்துவங்கள் பின்னால் உலகாயதம் என்ற ஒற்றைப்
பெயருக்குள் அடக்கப்பட்டுள்ளது. அனைத்து தத்துவங்களின் அடிப்படை இறை மறுப்பு, ஆத்ம
மறுப்பு, வினை மறுப்பு, உலக வாழ்க்கையை மட்டுமே ஏற்பு என்கிற அடிப்படைக் கருத்தில்
இவை அனைத்தும் ஒத்த தன்மையுடையதாக இருப்பதினால் உலகாயதம் என்ற பெயரிலேயே அனைத்தையும்
இணைத்துக் கூறப்படுகிறது. இந்த தத்துவங்கள் அனைத்தும் இயற்கைக்கு மீறிய சக்தி எதனையும்
ஏற்பதில்லை அதனால் உலகாயதம் என்று பெயரிடுவது பொருத்தமாக இருக்கிறது.
மேலே உலகாயதம் என்ற சொல்லுக்கான
விளக்கத்தைப் பார்த்தோம், அதேபோல சார்வாகம், பூதவாதம் ஆகிய சொற்களின் பொருளைப் பார்ப்போம்.
சார்வாக என்ற சொல்லுக்கு
“மெல்லுதல்” என்று பொருள் கொடுக்கப்படுகிறது. சார்வாகர்கள் இயற்கைக்கு மாறானவற்றில்
அக்கறை செலுத்தாமல், உலகியல் இன்பமான உண்ணுதல், உறங்குதல் மற்றும் அன்றைய நிலையில்
கள்ளுண்ணுதல் போன்றவற்றில் அக்கறை செலுத்தியதால் சார்வார் என்று இப்படிப்பட்டவர்களை
அழைத்திருக்கலாம்.
சார்வாகம் என்பதை சாரு வாக் என்று பிரித்து “கவர்ச்சியாக பேசுதல்”
என்பதாகவும் பொருள்கொள்வர். ஏன் சார்வாகர்களின் கருத்து கவர்ச்சிகரமானது என்று கூறப்படுகிறது
என்றால், மக்களால் ஏற்றுக்கொள்ளும்படியான கருத்துக்களை சார்வாகம் பேசுவதால் இவ்வாறு
கூறப்படுகிறது. மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ளும்படியான வாழ்க்கை பற்றியே சார்வாகம்
பேசுகிறது அதனால்தான் இதனை உலகாயதம் என்றும் கூறப்படுகிறது.
நிலம், நீர், காற்று, நெருப்பு,
விண்வெளி ஆகிய ஐந்து பூதங்களின் சேர்க்கையே இந்த உலகம் என்று கருதப்படுவதனால் இந்த
போக்குக்கு பூதவாதம் என்று பெயர் பெற்றுள்ளது.
உலகாயதம், சார்வாகம், பூதவாதம்
என்ற மூன்றுமட்டுமல்லாது பொருள்முதல்வாதக் கூறுகளைக் கொண்ட பல தத்துவங்கள் இந்தியத்
தத்துவங்களில் காணப்படுகிறது. சாங்கியம், வைசேசிகம், பூர்வமீமாம்சை என்ற மூன்றையும்
உலகாயதக் கூறுகளைக் கொண்ட தத்துவமாகக் கொள்ளலாம். பவுத்தமும் சமணமும் கூட கடவுளை மறுக்கும்
போக்கைக் கொண்டதே ஆகும்.
இதன் மூலம் இந்தியத் தத்துவங்களில்
உலகாயதக் கூறுகளைக் (பொருள்முதல்வாதக் கூறுகளைக்) கொண்ட தத்துவங்களே அதிகம் என்பதை
அறிந்து கொள்ள முடிகிறது..
உலகாயத தத்துவத்தைப் பேசும்
தனித்த நூல்கள் இருந்ததற்கு சான்று இருக்கிறது, ஆனால் அவை எதுவும் கிடைக்கவில்லை. உலகாயத
தத்துவத்தின் எதிரிகள், உலகாயதத்தை மறுத்துரைப்பதற்கு கூறியதைக் கொண்டே, உலகாயத தத்துவத்தின்
கருத்துக்களை அறிய முடிகிறது. எதிரிகளால் கூறப்படும் கருத்திக்கள் திரிக்கப்பட்டும்
சிதைக்கப்பட்டும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் அப்படித் திரட்டப்பட்ட
கருத்துக்களை கொண்டே உலகாயத தத்துவத்தை தொகுத்துப் பார்க்க வேண்டியுள்ளது. திரட்டப்பட்ட
கருத்துக்களில் காணப்படும் முரணைத் தீர்ப்பதன் மூலம் உலகாயதத் தத்துவத்தின் உண்மை போக்கை
அறிந்து கொள்ளலாம்.
தமிழ் நூல்களிலும் உலகாயதக்
கருத்துக்கள் சுட்டப்பட்டுள்ளது. மணிமேகலைக் காப்பியத்தில் பூதவாதியின் கருத்தாகவும்,
சிவஞான சித்தியார் என்னும் சைவ சித்தாந்த நூலில் உலகாயதன் கருத்தாகவும், நீலகேசியில்
பூதவாதியின் கருத்தாகவும் உலகயாதக் கருத்துக காணப்படுகிறது.
உலகாயதர்கள் உடலை மட்டமே
ஒப்புக் கொள்கின்றனர், உடலில் ஆத்மா இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆன்மீகவாதிகள்
பிறப்புக்கு முன்பும் இறப்புக்குப் பின்பும் உடலோடு தொடர்பு படுத்துகிற ஆத்மாவை உலகாயதர்கள்
மறுக்கின்றனர். உடலில் உயிர் செயற்படுவதற்கும், மனிதனிடம் உணர்வுகள் ஏற்படுத்துவதற்கும்
ஆத்மா தேவையில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
இந்த உலகில் உள்ள அனைத்தும்
பொருட்களால் ஆனவை, இங்குள்ள பொருட்களின் சேர்ப்பினால் தான் அனைத்தும் தோன்றுகின்றன,
மறைகின்றன, உயிரும் அப்படியே. பொருட்களின் முறையான சேர்ப்பில்தான் உயிர் தோன்றுகிறது.
அதில் உள்ள முறைகளை நீங்கும்போது அல்லது விலகும் போது உயிர் மறைகிறது.
பண்பு என்பது பொருளின்
வெளிப்பாடுதான், அதனால் பொருள் இல்லாமல் பண்புகிடையாது. இதற்கு உலகாயதர் விஞ்ஞான வளர்ச்சி
இல்லாத காலத்தில் கீழ் காணும் வகையில் விளக்கம் கொடுத்தனர்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
ஆகியவற்றை சேர்த்துச சாப்பிடுவதினால் சிவப்பு நிறம் எப்படி உண்டாகிறதோ அதே போல சில
பொருட்களின் சேர்க்கையினால் உயிர் உண்டாகிறது, மனிதனது உணர்வும் அப்படியே, இதுவே உலகாயதர்களின்
கருத்து. இவ்விதம் உடலுக்கு தொடர்பற்ற ஆத்மாவை அவர்கள் ஏற்பதில்லை.
மனிதர்களின் இன்றைய நிலைக்கு,
போன பிறவியில் செய்த செயலே காரணம், இந்த பிறவியில் தீராதப் பிரச்சினை அடுத்தப் பிறவியில்
நீங்கும் என்று கூறுகிற வினைக் கோட்பாட்டையும் உலகாயதர்கள் ஏற்பதில்லை.
நெருப்பு எரியும் போது
அதில் இருந்து ஒளி ஏற்படும், நெரும்பு அணைந்த பிறகு ஒளி வருவதில்லை, அதேபோல உடல் அழிந்த
பின்ன ஆத்மா என்ற ஒன்று இல்லை. ஆத்மாவே இல்லாத போது மறுபிறப்பு பற்றிய பேச்சுக்கு இடமில்லை.
உலகாயதம் உலகில் வாழ்வதற்கு
வழிகாட்டுகிறது.