மார்க்சியம் செங்கொடியின் கீழ் நமது தொழிலாளர் இயக்கம் வளர்ந்தது. அது
தட்டுத்தடுமாறி முன்னேற வில்லை, கண்ணை முடிக்கொண்டு முன்னேறவில்லை. தமது லட்சியம்
தெளிவாக இருந்தது. அதன் பாதையும் அவ்வாறே.
“ஒரு தத்துவம் மக்களால் பற்றி கொள்ளப்பட்டு விட்டால் அது ஒரு பௌதிக சக்தியாகி விடுகிறது" என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளி வர்க்க சித்தாந்த்தால் மக்கள் திரளை ஆயுதபாணியாக்கும் இக் கடமைதான் எந்த ஒரு நேர்மையான பொதுவுடமைக் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய கடமை ஆகும். பரந்துபட்ட மக்கள் தமக்குச் சொந்தமான தத்துவத்தைப் பற்றிக் கொண்டு அதன்படி நடக்க துணியும் போது, தமது இரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சு கிருமிகளையும் சீறி எழுந்து ஒரே அடியாக அழித்தொழிப்பர். கட்சி மக்களிடம் இருந்து பிரிந்து தனிமைப் பட்டிருந்தால் இது சாத்தியமில்லை.
ஏனெனில் மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொள்ள முடியாது. மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களைப் பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பாக திரட்டுவதும் ஆன இந்த இமாலயப் பணியையே நாம் மக்களிடையேயான பணி என்கிறோம். அதனை பற்றி விரிவாக பின் பார்ப்போம்.
லெனினியம் கற்போம் லெனின் இடமிருந்தே கற்போம்
இன்று நம்மிடையே பல்வேறு மார்க்ச்சிய விரோத போக்குகளை நாம் கண்டுள்ளோம் அதனை புரிந்து கொள்ள மார்க்ஸ் முதல் இன்றைய மார்க்சிய ஆசான்கள் வரை நாம் கற்றிந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
“பல தவறுகள் இருப்பினும் மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர்களாக இருந்த பெபல், ரோசா லக்சம்பர்க் போன்றவர்களுடன் மார்க்சிய வாதிகளின் அணுகுமுறை இரண்டாவது அகிலத்தின் திரிபுவாதிகள் உடனான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்” என்று லெனின் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டினர். “மார்க்சியவாதிகள் இவர்களுடைய தவறுகளை மறைக்க வில்லை மாறாக அத்தகைய உதாரணங்கள் மூலமாக அவற்றை எவ்வாறு தவிர்ப்பது புரட்சிகர மார்க்சியத்தின் தேவைகளுக்கு எவ்வாறு ஈடு கொடுப்பது என்பதை கற்றுக் கொண்டார்கள்” என்பார் லெனின்.
கற்றலில் இருந்துதான் அனைத்துமே துவங்குகிறது. ஒரு புரட்சியை சாதிக்கவல்லவராக வளர்ந்த லெனின், முதலில் மார்க்சியத்தை எவ்வாறு கற்றறிந்தார் என்பதைப் புரிந்து கொண்டால்தானே அவர் புரட்சியை எவ்வாறு சாதித்தார் எனக் கற்றுக் கொள்ள முடியும். லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் என்பதை விளக்குகிறார் குரூப்ஸ்கையா.
“விளாதிமீர் இல்யீச் (லெனின்) இவற்றைத் (மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களை) தமது நூல்களில் பயன்படுத்தினார், இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தார், இவற்றில் தமது குறிப்புகளை எழுதினார். அவர் மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்கவில்லை; அவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் இருந்தார்.” என்கிறார் குரூப்ஸ்கையா.
ஏகாதிபத்தியங்களின் காலடியில் மண்டியிட்டு கிட்டத்தட்ட தம்மையே அவர்களிடம் அர்ப்பணித்த இரண்டாம் அகிலத் தலைவர்களை கடுமையாகச் சாடினார் லெனின். இந்தப் போராட்டத்தை நடத்தும் போது, மொத்த அகிலத்திலும் லெனின் சிறுபான்மையானவர்தான்.
உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன. நாம் லெனினிடம் கற்க்க நிறையவே உள்ளது. ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவினார் தோழர் லெனின்.
மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.
அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப் பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற ஒரு கட்சியையும் அதற்கான கோட்பாடுகளையும் வகுத்தார்.
லெனினுக்கு முன்னரே பிளக்கனோவ் உள்ளிட்ட பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் இருந்தாலும் லெனினால் மட்டும் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது? எது அவரை புரட்சியை சாதித்த மாபெரும் தலைவராக உயர்த்தியது? அவரது சமகாலத்திய பிற மார்க்சிய அறிஞர்களுக்கும் லெனினுக்கும் என்ன வித்தியாசம்?. இதனை தேடுவோம் நம் தேவையோடு.
(பொதுவுடமை சமூகமானது இலட்சக் கணக்கான மனிதர்களின் செயல் முனைப்பான உழைப்பின் பயனாக மக்கள் அனைவரின் இலட்சியத்திற்காக தோன்றுகிறது பொதுவுடைமை என்பது சாதாரண கட்டுமானம் அல்ல சாதாரண தொழிலாளர்கள் கைகள் மட்டும் இதற்கு போதாது).
பல நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கம் 1848 புரட்சியாலும் 1871 பாரிஸ் கம்யூன்
புரட்சியாலும் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ஏற்கனவே தீவிரமான புரட்சிப் போராட்டத்தை
நடத்திக் கொண்டிருந்தது; தொழிலாளி வர்க்கம் தன் செங்கொடியின்கீழ் தமது தொழிலாளர்
இயக்கம் வளர்த்தது. அது தட்டுத்தடுமாறி முன்னேற வில்லை, கண்ணை முடிக்கொண்டு
முன்னேறவில்லை. தமது லட்சியம் தெளிவாக இருந்தது. அதன் பாதையும் அவ்வாறே.
போராட்டத்தில் ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் பின்பற்ற வேண்டிய பாதையை மார்க்சியத்தின்
துணை கொண்டு லெனின் பெரும் பாடுபட்டு விளக்கினார். அன்று மார்க்ஸ் இறந்து ஐம்பது
ஆண்டுகளாகிறது. ஆனால் மார்க்சியம் கட்சிக்கு அதன் எல்லாச் செயல்களிலும் தொடர்ந்து
வழிகாட்டுகிறது. லெனினியம் மார்க்சியத்தின் வளர்ச்சி நிலையே. அதை ஆழமாக ஆராய்வோம் வரும் பகுதிகளில்.
1894 இல் சட்டவிரோதமாகப்
பதிப்பிடப்பட்ட “மக்களின் நண்பர்கள் எனப்படுவோர் யார், சமூக ஜனநாயகவாதிகளுக்கு
எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள்?” என்ற தமது முதல் பெரும் நூலில்
பொதுவுடைமை கட்சியின் அறிக்கை, அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கு ஒரு
முன்னுரை, மெய்யறிவின் வறுமை ஜெர்மன் கருத்து நிலை, 1843 இல் மார்க்ஸ் ரூகேயுக்கு
எழுதிய கடிதம், எங்கெல்ஸின் டூரிங்குக்கு மறுப்பு, குடும்பம், தனிச்சொத்து, அரசு
ஆகியவற்றின் தோற்றம் ஆகியவற்றிலிருந்து லெனின் மேற்கோள் காட்டுகிறார்.
அக்காலத்திலிருந்த பெரும்பாலான மார்க்சியர்கள் மார்க்ஸின் நூல்களைப் பற்றிக்
குறைந்த அறிவு கொண்டிருந்தனர். “மக்களின் நண்பர்கள்” என்ற நூல் பல பிரச்சினைகளைப்
புதிய முறையில் விளக்கியது. ஆகவே இந்நூல் மிகவும் செல்வாக்கு பெற்றது.
லெனினது “நரோதிஸத்தின் பொருளாதார உள்ளடக்கமும் அது திரு. ஸ்துருவேயின் நூலில்
விமர்சிக்கப்பட்டுள்ள முறையும்” என்ற அடுத்த கட்டுரையில் லுயீ போனபாட்டின்
பதினெட்டாவது புரூமேர், பிரான்ஸில் உள்நாட்டுப் போர், கோதா வேலைத் திட்டம் பற்றிய
விமர்சனம், மூலதனம் நூலின் இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் ஆகியவற்றிலிருந்து
மேற்கோள்கள் காட்டப்படுள்ளன.
லெனின் எப்பொழுதும் மார்க்சிடமிருந்து “ஆலோசனை” பெற்றார். புரட்சியின் மிகவும் கடினமான, திருப்பு முனையான கட்டங்களில் அவர் மார்க்சின் நூல்களைத் திரும்பத் திரும்பப் படித்தார்.
எந்த ஒரு சூழ்நிலையிலும், அதையொத்த சூழ்நிலை சம்பந்தப்பட்ட மார்க்சின் நூல்களை
எடுத்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து, அந்நூலில் காணப்பட்டுள்ள
சூழ்நிலைமையைத் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைமையுடன் ஒத்து நோக்கி, இவ்
விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிக்கொணருவதே லெனின்
கடைப்பிடித்த கற்றல்முறை. லெனின் இதை எப்படிச் செய்தார் என்பதற்கு 1905 - 07
புரட்சியில் இம் முறையை அவர் கடைப்பிடித்ததே ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
1902ஆம் ஆண்டில் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற
தமது நூலில் லெனின் கூறுகிறார்: “எந்த நாட்டிலுமுள்ள பாட்டாளி வர்க்கத்தை
எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் மிகவும் புரட்சிகரமானவற்றைச் சரித்திரம் நம்முன்
அவசரப் பிரச்சினையாக வைத்துள்ளது. இக்காரியத்தை நிறைவேற்றுவது, அதாவது ஐரோப்பாவில்
மட்டுமன்றி ஆசியாவிலும் உள்ள பிற்போக்கு ஆற்றல்களின் பலம் வாய்ந்த அரணைத்
தகர்த்தெறிவது, ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தை சர்வதேசப் புரட்சிப் பாட்டாளி
வர்க்கத்தின் முன்னணிப் படையில் கொண்டு நிறுத்தும்.”
1905ஆம் வருட புரட்சிப்
போராட்டம் ருஷ்யத் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசப் பங்கை உயர்த்தியது என்பதும்,
1917-இல் ஜாரிஸத்தைக் கவிழ்த்து ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தைச் சர்வ தேசப்
புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையில் கொண்டு நிறுத்தியது என்பதும்
நமக்குத் தெரிந்ததே. ஆனால் இது “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூல் எழுதப்பட்டதற்கு
15 ஆண்டுகள் கடந்து நிகழ்ந்தது.
1905 ஜனவரி 9 ஆம் தேதி
“அரண்மனைச் சதுக்கத்தில்” தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்துக் கிளம்பிய
புரட்சி அலை, கட்சி மக்கள்திரளை எங்கே இட்டுச் செல்ல வேண்டும், எவ்விதச்
செயல்தந்திரத்தைக் கையாள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. இங்கு லெனின்
மறுபடியும் மார்க்சிடமிருந்து “ஆலோசனை பெற்றார்”. 1848 ஆம் வருடத்திய பிரஞ்சு,
ஜெர்மன் முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சி பற்றி மார்க்ஸ் எழுதிய “பிரான்ஸில்
வர்க்கப் போராட்டங்கள், 1848 முதல் 1850 வரை” என்ற நூலையும், ஜெர்மன் புரட்சி
பற்றியதும், பி. மேரிங்க் பதிப்பித்தது மான மார்க்ஸ், எங்கெல்ஸின் Literary Heritage [“இலக்கியமரபு”] என்ற
நூலின் மூன்றாம் தொகுதியையும் லெனின் ஆழ்ந்து ஆராய்ந்தார்.
1905, ஜூன் - ஜூலை
மாதங்களில் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு செயல் தந்திரங்கள்”
என்ற அறிக்கையை லெனின் எழுதினார். இதில் அவர் முதலாளிகளுடன் சமரசம் செய்து
கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்த மென்ஷெவிக்குகளின் செயல்தந்திரத்துக்கு எதிராக,
எதேச்சாதிகாரத்தை எதிர்த்துத் திட்டமான, விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்து
மாறும், அவசிய மேற்பட்டால் ஆயுதமேந்தியும் போரிடுமாறும், அறைகூவி அழைத்த
போல்ஷெவிக்குகளின் செயல் தந்திரத்தை முன்வைத்தார்.
ஜாரிஸத்துக்கு முடிவு கட்டுவது அவசியம் என்று லெனின் இவ்வறிக்கையில் கூறினார். இதில் அவர் தொடர்ந்து எழுதியதாவது: “மாநாடு (புது இஸ்க்ராவாதிகளால் கூட்டப்பட்டது - குரூப்ஸ்காயா) மற்றொன்றை மறந்துவிட்டது. அதிகாரம் ஜாரின் கையில் இருக்கும் வரையில் எந்தப் பிரதிநிதி களால் நிறைவேற்றப் பட்ட எல்லாத் தீர்மானங்களும் சாரமற்றவை; அவை வெறும் வீண் பிதற்றல்கள்…
மார்க்ஸ் எழுதியவற்றை திரும்பத் திரும்பப் படித்தார், அவற்றிலிருந்து தமது
குறிப்புகளை எழுதினார். அவர் மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்க வில்லை;
அவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் இருந்தார். 1920-இல் பொதுஉடைமை
இளைஞர் சங்கத்தின் மூன்றாம் அகில ருஷ்ய மாநாட்டில் உரையாற்றும் போது, “மனிதகுலத்தின் அறிவு அனைத்
தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொது உடைமை முறையை ஏதோ குருட்டுப்
பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்;
நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி
பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது
அவசியம்” என்று லெனின் கூறினார்.
மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவ முகாமிலுள்ள
அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் எழுதியவற்றையும் படித்தார்.
அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறார்.
“நரோதிஸத்தின் பொருளாதார உள்ளடக்கமும்,
அது திரு. ஸ்துரூவேயின் நூலில் விமர்சிக்கப்பட்டுள்ள முறையும்” என்ற கட்டுரையில்
ஸ்துரூவேயின் கருத்துக்கள் மார்க்ஸின் கருத்துக்களிலிருந்து எவ்வாறு வேறு
படுகின்றன என்பதை லெனின் காண்பிக்கிறார்.
“விவசாயப் பிரச்சினையும் மார்க்ஸின் ‘விமர்சகர்களும்” என்ற படைப்பில் லெனின் விவசாயப் பிரச்சினையை அலசுகிறார். இதில் அவர் மார்க்ஸின் கருத்துக்களை ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளும் (டெவிட், ஹெர்ட்ஸ்) ருஷ்ய விமர்சகர்களும் (செல்னோவ், புல்காக்கோவ்) கொண்டிருந்த முதலாளிய கருத்துக்களுக்கு எதிராக வைக்கிறார்.
மேலும்
“இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு” நூலில் தோழர் வி.இ.லெனின் விமர்சனப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.
உலகமெங்கும் சோசலிசப் புரட்சியை நடத்தி முடிக்க “மாறா உருவகப்பட்ட, இயந்திரீகமாய் சமனமாக்கப்பட்ட“ ஒரு சூத்திரம் கிடையாது. தேசிய வேறுபாடுகளுக்கும், வகை வேறுபாடுகளுக்கும் உட்பட்டுத்தான் நாம் செயல்பட்டாக வேண்டும். நாம் ரஷ்யப் புரட்சியைப் பற்றி பேசுவதுஏனென்றால், அவர்கள் ஜார் மன்னனை மட்டும் எதிர்க்கவில்லை, மன்னனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஐரோப்பிய மூலதனத்தையும் எதிர்கொண்டார்கள். மூலதனத்தின் துணையோடு செயல்படும் ஆட்சியாளர்களை வீழ்த்தினார்கள். அங்கே நடந்தேறியது, “சர்வதேச அளவில் திரும்பவும் நடைபெறுவது வரலாற்று வழியில் தவிர்க்க இயலாததாகும்“. இந்தப் பொருளில்தான் ரஷ்யாவில் புரட்சிப் போராட்டத்தை வெற்றிகரமாக்கிய போல்ஷ்விக்குகளின் அனுபவத்தைப் பேசவும், கற்கவும் செய்கிறோம்.
1907-1910ஆண்டு காலகட்டத்தில் பிற்போக்கு அரசோச்சியது. புரட்சிகரக் கட்சிகள் ஒடுக்கக்கப்பட்டன.
தளர்வு, மனச் சோர்வு, பிளவுகள், பூசல்கள், ஓடுகாலித்தனம், ஆபாசம்”
என்று சூழலில் சரிவு ஏற்பட்டதையும், மக்களிடையே “கருத்து முதல்வாதத்தை நோக்கிய சரிவும்” காணப்பட்டது. இதைலெனின்”ஒழுங்குடன் தாக்குவதற்கும், ஒழுங்குடன் பின்வாங்குவதற்கும் தெரிந்துகொண்டால் ஒழிய வெற்றிபெற முடியாதென்பதை உணர வேண்டியிருந்தது” என்கிறார்.
“பாட்டாளி வர்க்கத்தினுள் குட்டி முதலாளித்துவ உறுதியின்மையையும், ஒற்றுமையின்மையையும், தனி நபர் மனப்பான்மையையும் மாறி மாறி மனவெழுச்சியையும் மனச்சோர்வையும் ஓயாமல் மீண்டும் மீண்டும் தலைதூக்கச் செய்கிறது. இதனை எதிர்த்துச் சமாளிக்கும் பொருட்டு, பாட்டாளி வர்க்கத்தின் ஒழுங்கமைப்புப் பாத்திரம் பிழையின்றியும், பயனுள்ள முறையிலும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்படும் பொருட்டு, பாட்டாளிவர்க்க அரசியல் கட்சியிலும் மிகவும் கண்டிப்பான மத்தியத்துவக் கட்டுப்பாடும் அவசியமாகும்” என்று லெனின் கட்டுப்பாடு மிக்க கட்சியின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
தொடரும்…..
………………. தொடரும்.