இந்திய பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு- பிரேம சந்திரன்

 

பகுதி - 1

இரண்டாம் உலகயுத்தத்திற்கு பின்னர் ஏகாதிபத்தியங்களால் தங்களது நெருக்கடியை தீர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட கீன்சிய பொருளாதார கொள்கையும் 1970 களில் தோல்வியடைந்து மீண்டும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ஏகாதிபத்தியங்கள் தங்களது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக கீன்சிய கொள்கையை காட்டிலும் அதிகொடூரமான சுரண்டல் கொள்கையான தனியார்மய, தாராளமய மற்றும் உலகமய பொருளாதார கொள்கைகளை உலகில் செயல்படுத்த துவங்கியது. அத்துடன் கூடவே அதுவரை கடைபிடித்து வந்த முதலாளித்துவ சீர்திருத்த கொள்கையை கைவிட்டு பாசிசக் கொள்கைகளை செயல்படுத்தவும் பாசிச அமைப்புகளை கட்டியமைக்கவும் துவங்கியது. இன்று உலகம் முழுக்க 2008-ல் துவங்கிய உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு பிறகு அமெரிக்க ,ஐரோப்பா மற்றும் ஆசியகண்டங்களில் பாசிசகட்சிகளை நிறுவுவதும் மற்றும் பாசிசஆட்சிகளை கட்டி அமைக்கப்படுவதும் பொதுபோக்காக மாறிவருகிறது. இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா பாசிச இயக்கத்தின் அரசியல் பிரிவான பி.ஜே.பிகட்சிதான் கடந்த எட்டு ஆண்டுளாக ஆட்சியில் உள்ளது. இந்தியாவில் RSS துவங்கும் போதே இத்தாலிய பாசிஸ்டான முசோலினியுடனான தொடர்போடுதான் துவங்கப்பட்டது. அதன் துவக்கம் முதலே அதன் கொள்கை பாசிசமாகும். RSSன்பாசிசத்திற்கு அடிப்படை இந்துத்துவ கொள்கையாக இருந்தபோதும் அதன்நோக்கம் அன்றைய பிரிட்டீஷ்காலனி ஆதிக்கவாதிகளின் நலன்களை பாதுகாத்து வளர்ப்பதாகவே இருந்தது. பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்தபாசிச அமைப்பு தற்போதுபா... என்ற அரசியல் அமைப்பை உருவாக்கி ஆட்சியையைம்கைப் பற்றி உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்து இந்திய மக்களின் மீது பாசிச தாக்குதலை மிகவும் வெளிப்படையாகவே நடத்திவருகிறது. இன்றைய சூழலில் பாசிசம் பற்றியும் குறிப்பாக இந்தியாவில் பாசிசத்தின் வளர்ச்சியைப் பற்றியும் ஜனநாயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் அதற்காக பாடுபடுபவர்களும் ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கான விவாதத்திற்காக இந்த தொடர் கட்டுரையை இலக்கு முன்வைக்கிறது.

பாசிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான உறவு.:-

பாசிசம் குறித்த மிக முழுமையான விளக்கமானது மூன்றாவது கம்யூனிஸ்டு அகிலத்தில் விரிவான நிர்வாககுழுவின் 13 ஆவது கூட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டது. அது பின்வருமாறு கூறுகிறது.

"பாசிசம் என்பது நிதிமூலதனத்தின் (ஏகாதிபத்தியத்தின்) ஆகபடுமோசமான, படுபிற்போக்கான, ஆக அதிக இனவெறி கொண்ட ஏகாதிபத்தியவாதிகளின் பகிரங்கமான பயங்கரத்தன்மை கொண்ட சர்வாதிகாரம் ஆகும்."

ஏகாதிபத்தியமாக வளர்ந்துவிட்ட முதலாளிகள் இதுவரை கடைபிடித்து வந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை கைவிட்டு விட்டு பாசிசர்வாதிகார ஆட்சி முறைக்கு மாறுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய ஆய்வுகளை நாம் கற்ற வேண்டும்.

ஏகாதிபத்தியம் குறித்து நாம் அறிந்திருக்கவில்லை என்றால் பாசிசம் என்றால் என்ன என்பது குறித்து நாம் தெளிவாக தெரிந்து கொள்ளமுடியாது.

ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அம்சங்கள் குறித்து லெனின் கூறுவதாவது:

1) உற்பத்திமற்றும்மூலதனக்குவிப்பைத்தொடர்ந்து, பொருளாதார வாழ்வில் ஒரு தீர்மானகரமான பங்கை வகிக்கக்கூடிய ஏகபோகங்கள் உருவாகின்றன.

2) வங்கி மூலதனமும் தொழில்மூலதனமும் இணைக்கப்படுகிறது. இவ்வாறு இணைக்கப்பட்டு நிதிமூல தனம் உருவாக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பொருளாதாரத்துறையில் நிதிமூலதனக் கும்பல்கள் உருவாகின்றன.

3) இதுவரை பலநாடுகளுக்கு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்வதோடு கூடவே அங்கிருந்து மூலதனத்தையும் ஏற்மதி செய்வது என்றநிலை உருவாகியது.

4) இதன் மூலம் உலகில் சில நாடுகள் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளாகவும் பலநாடுகள் ஏழைநாடுகளாகவும் பிளவுபடும் நிலை உருவாகியது.

5) உலகிலுள்ள முதலாளித்துவ வளர்ச்சிபெறாதநாடுகளை வளர்ச்சிபெற்ற இந்த ஏகாதிபத்திய நாடுகள் கைப்பற்றிக் கொண்டுவிட்டன. இந்த ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான போட்டியானது கைப்பற்றபட்ட நாடுகளை மறுபங்கீடு செய்வதற்கான போட்டியாகவும் போராகவும் மாறிவிட்டது.

ஏகாதிபத்தியங்களின் இந்த ஆதிக்கப்போக்கின் காரணமாகவும், ஏகாதிபத்தியங்களின் கொடூரமான சுரண்டல் நோக்கத்தை நிறை வேற்றுவதற்கும் தற்போதைய ஆட்சி முறைக்கு மாறாக ஒரு பிற்போக்கான ஆட்சிமுறைக்கு மாறுவதற்கான போக்கு அனைத்து முதலாளித்துவ அரசியல் அமைப்புகளிலும் காணப்பட்டது. இந்தப்போக்குகள் பாசிசத்துடன் மிகவும் இணக்கமான வடிவங்களில்தோன்றியது.

இங்கு மார்க்சின் மேற்கோளை நினைவு கூறுவது சரியாக இருக்கும்.

மார்க்ஸ்கூறுவதாவது:

"தமது வாழ்க்கையில் சமூக உற்பத்தி நடத்துவதில் மனிதர்கள் திட்டவட்டமான உறவுகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த உறவுகள் அத்தியாவசியமானவை. மனிதனுடைய சித்தத்திற்கு, விருப்புவெறுப்பிற்கு அப்பாற்பட்டவை, இந்த உற்பத்திஉறவுகள் அவர்களுடைய பொருளாதாய உற்பத்திசக்திகள் வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்திற்கும் பொருத்தமாய் உள்ளன. இந்த உற்பத்திஉறவுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்த ஒரு முழுமைதான் சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக அமைகிறது. அதுதான் உண்மையான அடிப்படை. அதன்மீதுதான் சட்டம், அரசியல் என்கிற கட்டுக்கோப்பு நிர்மாணிக்கப்பட்டு நிற்கிறது. அந்த அஸ்திவாரத்திற்கு பொருத்தமாகத்தான் சமுதாய உணர்வின் திட்டவட்டமான வடிவங்கள் அமைகின்றன. அதாவது பொருளாதார வாழ்வின் அடிப்படையிலிருந்துதான், உற்பத்தி உறவுகளிலிருந்துதான் மக்கள் அவர்களது கருத்துக்களை உருவாக்குகின்றனர்.

"பொருளாயாத வாழ்வின் உற்பத்திமுறை தான் சமுதாய வாழ்க்கையின், அரசியல் வாழ்க்கையின், சிந்தனைப் போக்கின் ஓட்டத்தை அல்லது இயக்கத்தை பொதுவாக நிர்வகிக்கிறது. (அதாவது நமது பொருளாதார வாழ்நிலைதான் நமது சிந்தனையையும் அதனால் உருவாகும் கருத்துக்களையும் தீர்மானிக்கிறது. மாறாக நமது சிந்தனைகளும் கருத்துக்களும் நமது பொருளாதார வாழ்க்கையை தீர்மானிக்காது). இத்தகைய பொருளாதார அஸ்திவாரம் மாறுதல் அடைகிறபோது அதன்மீது எழுப்பப்பட்ட பிரமாண்டமான கட்டிடம் முழுவதும் அதாவதுசட்டம், அரசியல், கருத்துக்கள் போன்றவை அதிகவிரைவாகமாற்றப்படுகிறது. அதாவது மனிதர்கள் அவர்களது பொருளாதார வாழ்க்கைக்குப் பொறுத்தமான சட்டம், அரசியல் மற்றும் கருத்துக்களை மாற்றிக்கொள்வார்கள். இந்த மாறுதல்களை கவனிக்கும் காலத்தில் இரண்டையும் அதாவது உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பௌதீக மாறுதல்களையும் மற்றொருபுறத்தில்சட்டம், அரசியல், மதம், கலாச்சாரஞானம், தத்துவம் முதலான சுருக்கமாக சொல்வதானால் சித்தாந்தரீதியான வடிவங்களையும் எப்பொழுதும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இந்த சித்தாந்த வடிவங்களுக்கு உள்ளேதான் இந்த மோதல் பற்றிய உணர்வு மனிதர்களுக்கு ஏற்பட்டு ஒருமுடிவுகாணும் வரை போராடுகிறார்கள். ஆக இந்த அடிப்படை கோட்பாட்டு நிலையிலிருந்து பார்க்கையில் ஏகாதிபத்திய பொருளாதார அடித்தளத்திற்கும் அதாவது ஏகாதிபத்தியவாதிகளின் பொருளாதார நலன்களுக்கும் ஏகாதிபத்திய காலக்கட்டத்தில் தோன்றிய பாசிசக் கொள்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதைநாம் அனுமானிக்கலாம்…. தொடரும்

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்