மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும், அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும், அல்லது சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் பொருள்முதல் வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல் வாதம் என்ற தத்துவம் ஆகும். மார்க்சிய சித்தாந்தமானது மனிதசமூகம் என்றால் என்ன? அது ஏன் மாறுகிறது? இதற்கு மேலும் என்னென்னமாற்றங்கள் மனிதகுலத்திற்கு ஏற்படப்போகிறது என்பதை தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும் சித்தாந்தமாகும். இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவை அல்ல. அவை சில நுண்ணியவிதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொது உண்மையை, பொதுவான வழிகாட்டுதலையை, பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இந்தபொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்துகிறது. ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூகமாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம்மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வு செய்து எடுக்க விரும்புபவர்கள் அதாவது பொதுவுடமை இயக்கத் தலைவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக்கொள்ளக்கூடாது, மேலும் அங்குள்ள மதங்களையோ, மதத்தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக்கூடாது மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையே தான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார் நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனித சமூகம் உயிர் வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.
மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது உற்பத்திச்சாதனங்களின் துணைகொண்டே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஆரம்பகாலங்களில் இந்த உற்பத்திச் சாதனங்கள் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருந்தது. அதனால் மக்களிடையே வர்க்கப் பிரிவுகளோ ஏற்றத் தாழ்வுகளோ இல்லை. உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறு வேலைப் பிரிவினைகள் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடமையுள்ளவர்கள் மற்றும் உடமையற்றவர்கள் உருவாகிறார்கள் மேலும் சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்தது. இந்த உபரியையும் உற்பத்திச்சாதனங்களையும் திறமையானவர்கள் தனியுடமையாககைப்பற்றிக் கொண்டு பலரை உடமையற்றவர்களாக மாற்றி அவர்களை சுரண்டி வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின. இதன் பின்பு சமூக உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதனைத்தான் உற்பத்திஉறவு என்கிறோம். இந்த உற்பத்தி உறவுதான் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து மாற்றியமைப்பதன் மூலமே சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.
வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை வர்க்கங்கள்
இருக்கிறது. உதாரணமாக இந்தியாவில் பெருமுதலாளிகள், தேசிய முதலாளிகள், நடுத்தர முதலாளிகள்,
சிறு உடமையாளர்கள், நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், சிறுவிவசாயிகள்
போன்றோர் உடமை வர்க்கங்களாக இருக்கின்றனர். இந்த அனைத்து வர்க்கங்களுக்கும் அரசியல்
அதிகாரம் இருப்பதில்லை. ஆகவே இங்கே அரசியல் அதிகாரம் என்றால் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடே அரசியல் அதிகாரம் என்றால் என்ன? என்பதை விளக்கிவிடுகிறது.
அதாவது அரசு என்பது ஒரு வர்க்கம் பிற வர்க்கங்களை அடக்கி ஆளுவதற்கான கருவியாகும். ஆகவே
அரசியல் அதிகாரம் என்பது இந்த அரசின் பலாத்கார கருவியை உதாரணமாக போலீஸ் இராணுவம் போன்ற
வன்முறை கருவி எந்த வர்க்கம் கைப்பற்றி வைத்துக்கொள்ளவதன் மூலமே தனது அரசியல் அதிகாரத்தை
செயல்படுத்த முடியும். இந்த வன்முறை கருவியை கைப்பற்றுவதற்காகவே சுரண்டும் வர்க்கங்கள்
வரலாற்றில் போட்டியிட்டன. ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கும் வன்முறை கருவியான அரசு தேவை
என்றும் அந்த அரசு நிலவுகின்ற அரசாக இருக்க முடியாது என்றும், நிலவுகின்ற அரசை தகர்த்துவிட்டு
தனக்கான பாட்டாளிவர்க்க அரசை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிய ஆசான்கள் விளக்கியுள்ளனர்.
இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே சமூகத்திலுள்ள
பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தியை நடத்துகிறது. இந்த
வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி
அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி மத நிறுவனங்களையும்
கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள். இவ்வாறு
அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி உறவை பாதுகாக்கவும் பலப்படுத்தவுமான இந்த அமைப்புகளையும்
சித்தாந்த நிறுவனங்களையும் மேல்தளம் என்கிறோம்.
சமூகத்தை அடித்தளம், மேற்தளம் என்று இரண்டாக மார்க்சிய சித்தாந்தம் பிரிக்கிறது. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள், உற்பத்திக்கருவிகள், தொழிற்கூடங்கள், தொழில்நுட்பம், போக்குவரத்துச்சாதனங்கள், மனித உழைப்புசக்தி போன்றவைகள் உற்பத்திசக்திகள் எனவும், உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்கள் தமக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளை உற்பத்தி உறவு என்றும் மார்க்சியம் குறிப்பிடுகிறது. இதில் உற்பத்தி உறவு சமூகத்திலுள்ள வர்க்கங்களுக்கு இடையிலான உறவாகவும், சொத்துடமை உறவாகவும் வெளிப்படுகிறது. இத்தகைய உற்பத்திசக்திகளும் உற்பத்தி உறவுகளும்தான் சமுதாயத்தின் அடித்தளமாக அமைகிறது என்றும், இந்த அடித்தளத்தின் மீது இந்த அடித்தளத்தம் பற்றிய கருத்துக்களும், கொள்கைகளும், கலைஇலக்கியம், சாதி, மதம், அரசு போன்ற கருத்தாக்கங்களும் நிறுவனங்களும் மேல்தளமாக உருவாகிறது என்றும், இந்த மேற்தளமானது அடித்தளத்திற்கு பொருத்தமாகவும் அதனை பாதுகாக்கும் பணியை செய்கிறது என்றும் சமூகத்தின் அடித்தளம் மேற்தளம் பற்றி மார்க்சியம் வரையறுக்கிறது.
உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்கள், உற்பத்தியை விரைவுபடுத்தவும், எளிமையாக்கவும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் அவர்கள் உற்பத்திக்கருவிகளில் நவீனமாற்றங்களை கொண்டு வருவார்கள், நவீன தொழில் நுட்பத்தை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள். அதன் விளைவாக மனிதர்களின் தொழில் நுட்ப அறிவையும் வளர்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆகவே உற்பத்தி சக்தியானது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். ஆகவே பொருளுற்பத்தியில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த மாற்றங்களுக்கு தகுந்தவாறு உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள் அவசியமாகிறது. ஆகவே உற்பத்தி உறவுகளில் பங்கு பெறும் வர்க்கங்கள் உற்பத்தி உறவுகளில் ஏற்பட வேண்டிய மாற்றங்களைப் பற்றிய கருத்துக்களை மேல்தளத்தில் உருவாக்குகின்றன. இங்கு உற்பத்தியில் பங்கு பெறும் வர்க்கங்களில் இரண்டு எதிர் எதிரான வர்க்கங்கள் உண்டு ஒன்று உழைக்கும் வர்க்கம், மற்றொன்று உழைப்பின் பலனை அபகரித்து வாழும் சுரண்டும் வர்க்கம் உதாரணமாக முதலாளிவர்க்கம் ஆகியவை இருப்பதால் இந்த வர்க்கங்கள் இந்த மாறுதலுக்கு ஏற்ப புதிய உற்பத்தி உறவுகளை தங்களது வர்க்க நலன்களிலிருந்து உருவாக்குவதற்கான கருத்துக்களை உருவாக்கும். இந்த கருத்துக்கள் எதிர் எதிரான வர்க்க நலன்களைக் கொண்டிருப்பதால் இந்தகருத்துக்கள் எதிர் எதிரானவைகளாகவே இருக்கும் என்றும் இந்த கருத்துகளுக்கு இடையில் மோதல்கள் மேற்தளத்தில் நடக்கும் என்றும் மார்க்சியம் கூறுகிறது. இதனையே சமூகத்திலுள்ள கருத்துக்களுக்குப் பின்னால் ஒரு வர்க்கம் இருக்கிறது என்ற கோட்பாட்டை மார்க்சியம் முன் வைக்கிறது.
உற்பத்தியில் ஈடுபடும் வர்க்கங்களில் ஒருபிரிவு வர்க்கமானது அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது, உதாரணமாக முதலாளிவர்க்கம். இந்த வர்க்கத்தின் கையில் அதிகாரம் இருப்பதால் இதனால் உருவாக்கபடும் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை நடைமுறையில் செயல்படுத்தி ஆட்சி முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் புதிய சட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்தவும் முடிகிறது. உதாரணமாக பா.ஜ.க. அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த முடிகிறது. இதற்கு எதிராக உழைக்கும் மக்களின் நலன் காக்கும் கருத்துக்களையும் கொள்கைகளையும் உழைக்கும் மக்களின் நலன் காக்கபாடுபடும் அரசியல் தலைவர்களும், அரசியல் அமைப்புகளும் உருவாக்கி மேற்தளத்தில் போராட வேண்டியுள்ளது. இந்தப் போராட்டமானது உழைக்கும் வர்க்கங்களின் நலனை அடையும் வரை நீடிக்கும் என்று மார்க்சியம் சொல்லுகிறது. இதனையே சித்தாந்தப் போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய சித்தாந்தப் போராட்டத்தை நடத்தும் போது கருத்தியல்தளத்தில் இரண்டு எதிர் எதிர் வகையான கருத்துப்போக்குகள் இருப்பதைக்காணலாம். ஒன்று ஆளும் முதலாளிகளின் நலனுக்கான கருத்து, இரண்டாவது உழைக்கும் மக்களுக்கான கருத்து, உழைக்கும் மக்களுக்காக பாடுபடுபவர்கள் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிரான முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ சீர்திருத்தவாத கருத்துக்களை முறியடித்து உழைக்கும் மக்களின் நலன்களுக்கான கருத்துக்களையும் கொள்கைகளையும் கண்டு பிடிக்க வேண்டியது அவர்களின் முதற்பணியாகும்.
இவ்வாறு உழைக்கும் மக்களுக்கான கொள்கையை உருவாக்கி அதனை ஏற்றுக்கொண்ட முன்னணிகளை அமைப்பாக்கி பாட்டாளி வர்க்க கட்சியை கட்டியமைத்து மக்களை வெகுஜன அமைப்புகளில் அணிதிரட்டி உழைக்கும் மக்களின் நலனுக்கான கொள்கைகளை செயல்படுத்த மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி மக்களின் நலனுக்கான உற்பத்தி உறவை ஏற்படுத்துவதன் மூலமே சமூகத்தில் மாற்றம் அல்லது வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று மார்க்சியம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது சமூகமாற்றம் அல்லது சமூகவளர்ச்சி என்பது உற்பத்திஉறவில் உழைக்கும்மக்களின் நலன்களிலிருந்து உருவாக்கப்படும் மாற்றத்தின் மூலமாகவே அடையமுடியும். அதற்கு வர்க்கப்போராட்டமே ஒரேவழியாகும் என்று மார்க்சியம் கூறுகிறது. இத்தகைய வர்க்கப் போராட்டத்தின் மூலமே அரசு அமைப்பில் அதாவது உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரமாற்றத்தை மேற்தளத்தில் ஏற்படுத்தமுடியும் என்றும் அந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் உற்பத்திஉறவுகளை மாற்றியமைக்க முடியும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. மேலும் இத்தகைய அரசியல் அதிகாரத்தின் மூலமே மேற்தளத்திலுள்ள சாதி, மதப் பிரச்சனைகளையும், மற்றும் தேசிய இனப்பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று மார்க்சியம் அறுதியிட்டு கூறுகிறது.