அரசியல் பொருளாதாரம் ஒரு அறிமுகம்- சிபி

 


மார்க்சிய அறிஞர்கள் பொருளாதாரத்தை அதன் வரலாற்று வளர்ச்சியில் வைத்து உள்ளது உள்ளபடி விளக்குகிறார்கள். இன்றைய முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படையை ஆய்ந்து கண்டவர் மார்க்ஸ். பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் சோசலிசம் எனும் யதார்த்தமாக மாறுவதற்கு உதவின. இன்றைக்கும் முதலாளித்துவம் ஒழிக எனும் முழக்கம் அதன் கருவறையில் ஒலிப்பதைக் கேட்கிறோம். சோசலிச நாடுகளின் வீழ்ச்சிக்கு பிறகும் மார்க்சை தேடிப்பிடித்து படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய பொருளாதார நெருக்கடிகளை புரிந்து கொள்வதற்கே மார்க்ஸ் பலருக்கும் தேவைப்படுகிறார்.

அரசியல் பொருளாதாரம் என்பது உலர்ந்துபோன, சுவையற்ற பாடம் என்று நினைப்பது சிலருக்கு வழக்கம். எனினும் கவர்ச்சியான பிரச்சினைகளையும் இரகசியங்களையும் பொறுத்தவரை, இயற்கையோடு ஒப்பிடும்பொழுது சமூகத்தின் பொருளாதார அமைப்பு குறைந்த முக்கியத்துவத்தை கொண்டிருக்கவில்லை. மக்களின் வாழ்க்கை எப்போதுமே பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே இயங்கியிருக்கிறது. இன்று இது குறிப்பிடத்தக்க அளவுக்கு உண்மையாகும்.பண்டைக்கால மக்கள் அரசியலையும் மத்தியகால மக்கள் கத்தோலிக்க சமயத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார்கள் என்று கூறுவது எவ்வளவு பொருளற்றது என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். மனிதகுலம் எப்பொழுதுமே “பொருளாதாரத்தில் வாழ்ந்திருக்கிறது”; அரசியல், மதம், விஞ்ஞானம் மற்றும் கலை ஆகியவை பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ முடிந்திருக்கிறது. கடந்த காலத்தில் பொருளாதாரம் வளர்ச்சி இல்லா மலிருந்ததனால்தான் இந்தக் காலங்களைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நவீன பொருளாதாரம் இன்றியமையாத பங்கு வகிக்கிறது.

மார்க்ஸ்க்குமுந்தியபொருளாதார்அறிஞர்கள்

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச் சிறப்புடைய நூல்கள் -குறிப்பாக ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ எழுதிய நூல்கள் – பொருளாதாரம் என்பது புறவய விதிகளால் இயங்குகின்ற அமைப்பு என்ற கோட்பாட்டை முதலாவதாக உருவாக்கி வளர்த்தன. இந்த விதிகள் மனித எண்ணத்திலிருந்து சுதந்திரமானதாக, ஆனால் மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றன. அரசின் பொருளாதாரக் கொள்கை இந்த விதிகளுக்கு விரோதமாக இல்லாமல் இவற்றைச் சார்ந்திருக்க வேண்டும் என்று இவர்கள் நம்பினார்கள்.வில்லியம் பெட்டி, பிரான்சுவா கெனே, இன்னும் மற்ற அறிஞர்கள் பொருளாதார நிகழ்வுப் போக்குகளைப் பற்றி அளவுரீதியாக ஆராய்வதற்குரிய அடிப்படையை அமைத்தார்கள். அவர்கள் இந்த நிகழ்வுப் போக்குகளை ஒருவகையான வளர்சிதைவு மாற்றம் என்ற ரீதியில் ஆராய்ந்து அவற்றின் திசையையும் செயல் எல்லையையும் சுட்டிக்கூற முயன்றார்கள். மார்க்ஸ் சமூக உற்பத்திப் பொருளின் புனருற்பத்தி என்ற தனது கோட்பாட்டில் அவர்களுடைய விஞ்ஞான சாதனைகளைப் பயன்படுத்தினார்.நுகர்வுப் பண்டங்களுக்கும் உற்பத்திச் சாதனங்களுக்கும் இடையே உள்ள சமநிலை, குவித்தல் மற்றும் நுகர்வுக்கிடையே உள்ள அளவு வீதங்கள், வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே உள்ள உறவுகள் நவீன பொருளாதாரத்திலும் பொருளாதார ஆராய்ச்சிகளிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இவர்கள் பொருளாதார விஞ்ஞானத்தின் முன்னோடிகள். இவர்கள் எழுதிய நூல்கள், நவீன பொருளாதாரப் புள்ளியியலைத் தோற்றுவித்தன; அதன் முக்கியத்துவத்தைப் பற்றி எவ்வளவு சொன்னபோதிலும் அது மிகையானதல்ல.

வில்லியம்பெட்டி.பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் பொருளாதார ஆராய்ச்சி கணிதவியல் முறைகளை உபயோகிக்க முயற்சி செய்தது. இந்த முறைகள் இல்லையென்றால் இன்று பொருளாதார விஞ்ஞானத்தின் பல பிரிவுகளின் வளர்ச்சியை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.பிரெஞ்சுப் பொருளாதார நிபுணரான அன்டுவான் குர்னோ இந்தத் துறையின் முன்னோடிகளில் ஒருவர்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலவர்களும் குட்டி முதலாளித்துவ மற்றும் கற்பனாவாத சோஷலிசத்தைப் பேசியவர்களும் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உள்ள முரண்பாடுகள் பலவற்றை ஆராய்ந்தார்கள். முதலாளித்துவ சமூகத்துக்குப் பெருந்தீங்கு விளைவிக்கின்ற பொருளாதார நெருக்கடிகளின் காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு முதன்முதலாக முயற்சி செய்தவர்களில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஸிஸ்மான்டியும் ஒருவர். மாபெரும் கற்பனாவாத சோஷலிஸ்டுகளான சான்-சிமோன், ஃபூரியே, ஓவன் மற்றும் அவர்களைப் பின்பற்றியவர்கள் முதலாளித்துவத்தை மிக ஆழமான விமர்சனத்திற்கு உட்படுத்தினார்கள்; சமூகத்தை சோஷலிச ரீதியில் புனரமைப்புதற்குரிய திட்டங்களைத் தயாரித்தார்கள்.

வி.இ.லெனின் எழுதியது போல, ”மனித குலத்தின் மிகச்சிறந்த அறிஞர்கள் முன்னர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில்களைக் கொடுத்ததில்தான் மார்க்சின் மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் மாபெரும் பிரதிநிதிகளின் போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகவே அவருடைய தத்துவம் தோன்றியது.”

மூலச் சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மார்க்சியத்தின் தோற்று வாய்களில் ஒன்றாக இருந்தது. எனினும் மார்க்சின் போதனை அரசியல் பொருளாதாரத்தில் புரட்சிகரமான திருப்பு முனையாக இருந்தது. மூலதனம் என்பது ஒரு சமூக உறவு; விலைக்குப் பெறப்பட்ட பாட்டாளி வர்க்கத்தினரின் உழைப்பைச் சுரண்டுவதே அதன் சாராம்சம் என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். அவர் உபரிமதிப்பு பற்றிய தன்னுடைய கோட்பாட்டில் இந்தச் சுரண்டலின் தன்மையை விளக்கிக் கூறி முதலாளித்து வத்தின் வரலாற்று ரீதியான போக்கை – அதன் பகைமையான வர்க்க முரண்பாடுகள் தீவிரமடைந்து இறுதியில் மூலதனத்தின் மீது உழைப்பு வெற்றியடைவதைஎடுத்துக்காட்டினார். எனவே மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் இயக்கவியல் ரீதியான ஒருமையைக் கொண்டிருக்கிறது; அது அவருக்கு முன்பிருந்தவர்களின் முதலாளித்துவக் கருதுகோள்களை நிராகரிக்கிறது; அவர்கள் உருவாக்கியவற்றில் சரியானவையாக இருக்கும் ஒவ்வொன்றையும் படைப்பாற்றலோடு வளர்த்துச் சென்றது.

விஞ்ஞான சோஷலிசம் மார்க்சிய-லெனினியத்தின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் படைப்பாற்றலோடு வளர்த்துச் செல்வதற்கும் அவற்றின் தோற்றுவாய்களையும் மூலவேர்களையும் விளக்குவது மிகுந்த முக்கியத்துவமுடையதாகும். ஐரோப்பியர்கள் இந்தியாவின் வாசனைத் திரவியங்களைத் தேடிப்புறப்பட்டதன் விளைவாக அமெரிக்காவில் கால் பதித்தனர். அவர்கள் தங்கம், வெள்ளியின் மீது வைத்திருந்த அடக்க முடியாத ஆசையினால் அமெரிக்கா பழங் குடிகளை கொன்றொழித்தனர்; அந்த நாட்டின் எல்லாப் பகுதிகளையும் நன்கு ஆராய்ந்தனர். பூகோள ரீதியான மாபெரும் கண்டு பிடிப்புகள் வர்த்தக மூலதனத்தின் வளர்ச்சியோடு இணைக்கப்பட்டிருந்தன; அவை தம் பங்குக்கு இந்த மூலதனத்தின் எதிர்கால வளர்ச்சியை அதிகமாக ஊக்குவித்தன. வரலாற்றுரீதியாக வர்த்தக மூலதனமே மூலதனத்தின் ஆரம்ப வடிவம். இந்த வடிவத்திலிருந்துதான் தொழில்துறை மூலதனம் வளர்ச்சியடைந்தது.

அதைச் சுருக்கிப் பின்வருமாறு சொல்லலாம்: பொருளாதாரக் கொள்கை – விலையுயர்ந்த உலோகங்களை மிகவும் அதிகமான அளவுக்குத் திரட்டி நாட்டிலும் அரசாங்கக் கருவூலத்திலும் குவித்து வைப்பது; தத்துவம் – செலாவணியின் (வர்த்தகம் மற்றும் பணப் புழக்கத்தின்) செயல் எல்லையில் பொருளாதார விதிகளைத் தேடுதல்.

இப்படி செல்லும் இந்தப் பகுதியில் தேடுதல் பல... அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன? என்ற அடிப்படையில் தேடுவோம் தொடர்ந்து .தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசம் ஆகியவை மார்க்சியத்தின் மூன்று உட்கூறுகளாகும். மார்க்சியத் தத்துவம் என்பது இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதமாகும். சமூக வளர்ச்சி அதன் பொருளாதார அடுக்கமைவில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் முக்கியமான கோட்பாடாகும்.அரசியல் பொருளாதாரம் இந்த அடுக்கமைவை ஆராய்ந்து, சமூக பொருளாதார உருவமைப்புகளின் இயக்கத்தின் விதிகளையும் ஒரு உருவமைப்பிலிருந்து மற்றொரு உருவமைப்புக்கு மாறுகின்ற விதிகளையும் வெளிக்காட்டுகிறது.

மார்க்சியத்தின் மூன்று உட்கூறுகளில் ஒவ்வொன்றும் முந்திய சிந்தனையாளர்களின் முற்போக்கான கருத்துக்களின் வளர்ச்சியாகவும் ஒரு உலக விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த மூன்று உட்கூறுகளும் மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களோடு பொருந்துகின்றன. வி.இ.லெனின் எழுதியதுபோல, ”பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்று முக்கியமான தத்துவப் போக்குகள் இருந்தன. அவை மனிதகுலத்தின் மிக முன்னேற்றமடைந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவையாகும். அவை, மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம், மூலச்சிறப்புள்ள ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பொதுவாக பிரெஞ்சு புரட்சிப் போதனைகளுடன் இணைந்த பிரெஞ்சு சோஷலிசம் என்பவையாகும். இந்த மூன்று தத்துவப் போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றிற்கு முழு நிறைவை அளித்த மேதை மார்க்ஸ் .”

இந்தப் பிரபலமான கருத்துரை – அதன் சகலவிதமான ஆழத்திலும் ஸ்தூலத்தன்மையிலும் – பிரதானமாக மார்க்ஸ் எழுதிய புத்தகங்களிலேயே வெளிப்படுகிறது. ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹ், ஸ்மித் மற்றும் ரிக்கார்டோ, சான் – சிமோன் மற்றும் ஃபூரியே ஆகியோரிடமிருந்து தான் பெற்றிருக்கும் ஒவ்வொரு கருத்தையும் மார்க்ஸ் சிறந்த ஆராய்ச்சி நுட்பத்தோடு விவரமாகஎழுதியிருக்கிறார். மார்க்சிடம் இருந்த பல குணங்களில் ஆராய்ச்சி நேர்மை குறிப்பிடத்தக்க அளவுக்கு முக்கியமான தாகும். குறிப்பாக, பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற் பாதியிலும் வெளிவந்திருந்த எல்லாப் பொருளாதார நூல்களையுமே அவர் நன்கு படித்திருந்தார்.

மார்க்ஸ் எழுதிய முக்கியமான விஞ்ஞான நூலாகிய மூலதனம் ”அரசியல் பொருளாதாரத்துக்கு ஒரு விமரிசனம்” என்ற துணைத் தலைப்பைக் கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் நான்காவது பகுதிக்கு ”உபரி மதிப்புத் தத்துவங்கள்” என்று பெயர்; இதில் முந்திய அரசியல் பொருளாதாரம் அனைத்துமே விமரிசன ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. இங்கே ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்தும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் முக்கியமான கடமையைத் – முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயக்க விதியை வெளிப்படுத்துவது – தீர்ப்பதற்கு ஏதாவதொரு அளவுக்கு உதவி செய்கின்ற விஞ்ஞானக் கூறுகளைப் பிரித்தெடுப்பது மார்க்சின் முக்கியமான முறையாக இருந்தது. அதே சமயத்தில் சென்ற காலத்தைச் சேர்ந்த இந்த அரசியல் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களில் இருந்த முதலாளித்துவக் குறைபாடு களையும் மாறுபாடுகளையும் அவர் விளக்கினார்.மார்க்ஸ் ஒரு வகையான அரசியல் பொருளாதார விமரிசனத்துக்குக் கணிசமான இடம் ஒதுக்கினார்; ஏனென்றால் அதன் நோக்கம் உண்மையான விஞ்ஞானப் பகுப்பாய்வு அல்ல; முதலாளித்துவ அமைப்பை நியாயப்படுத்துவதும் பகிரங்கமாக ஆதரிப்பதுமே. அவர் அதைக் கொச்சையானது என்று குறிப்பிட்டார். முதலாளித்துவ அரசியல் பொருளா தாரத்தின் இந்தப் போக்கின் முக்கியமான பிரதிநிதிகளுக்கு இந்த நூலில் கணிசமாக இடம் கொடுக்கப்பட்டிருப்பது இயற்கையானதே. முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் முதலாளித்துவ சமூகத்தைப் பற்றிப் பறைசாற்றிய கருத்துக்களை விமரிசனம் செய்யும்பொழுது மார்க்ஸ் பாட்டாளி வர்க்க அரசியல் பொருளாதாரத்தை வளர்த்துச் சென்றார்.மார்க்ஸ் எழுதிய மூலதனத்தையும் மற்ற பொருளாதார நூல்களையும் படிக்கின்ற வாசகருக்கு சென்ற காலத்திய விஞ்ஞானப் பிரமுகர்களின் காட்சிக்கூடம் முழுவதுமே காட்டப்படுகிறது. மற்ற விஞ்ஞானங்கள் ஒவ்வொன்றையும் போல, அங்கீகரிக்கப்பட்ட தலைவர்கள் மட்டுமல்லாமல், அதிகமாக வெளியே தெரிந்திராத பல அறிஞர்களின் முயற்சிகளும் அரசியல் பொருளாதாரத்தை வளர்த்தன் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரம் என்பது ஒன்றரை நூற்றாண்டுக் காலத்துக்கு மிக விரிவான ஒரு போக்காக இருந்தது; அதனுள் அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட பல அறிஞர்கள் ஆராய்ச்சிகளைச் செய்தார்கள்; தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை எழுதினார்கள். உதாரணமாக, ஆடம் ஸ்மித்துக்கு முன்பிருந்த பல தலைமுறைகளைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள்தான் அவருக்குத் தளத்தை நன்றாகத் தயாரித்துக் கொடுத்தார்கள். எனவே இந்த நூலின் ஆசிரியர் மிகச் சிறப்புடைய அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் கருத்துக்களில் முக்கியமாக கவனம் செலுத்துவதோடு, அதிகமாக வெளியில் தெரியாத ஆனால் முக்கியத்துவமுடைய பல சிந்தனையாளர்களின் பங்கையும் குறிப்பிட்ட அளவுக்காவது எடுத்துக் கூற முயன்றிருக்கிறார்.

ஒரு விஞ்ஞானம் என்ற வகையில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் உருவரையை இன்னும் முழுமையாகக் கொடுப்பதே அதன் நோக்கம். இந்த அறிஞர்கள் வாழ்ந்து பாடுபட்டு உழைத்த காலத்தையும், சமூக மற்றும் அறிவுத்துறைச் சூழலையும் விளக்குவது அவசியமாகும்.

அரசியல் பொருளாதார வரலாற்றை ஸ்மித், கெனே, ரிக்கார்டோ ஆகியோரின் நூல்களோடு நிறுத்திவிடுவது கணிதத்தின் மொத்த வரலாறுமே டெகார்ட், நியூட்டன், லப்ளாஸ் ஆகியோரது கண்டுபிடிப்புகளில் அடங்கியிருக்கிறது என்று சொல்லுவதைப் போன்று தவறுடையதாகும். பதினேழாம் நூற்றாண்டின் ஓவியக் கலை வரலாற்றை எழுதுபவர்கள் மாபெரும் ஓவியரான ரெம்பிரான்ட்டைப் பற்றி எழுதுவதோடு “சிறிய டச்சுக்காரர்கள்” எனப்படும் ஓவியர்களின் பங்கையும் அங்கீகரிக்கிறார்கள்.முதலாளித்துவ விஞ்ஞானமும் பிரச்சாரமும் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் அதிகமாகவே விஞ்ஞானி என்ற முறையில் மார்க்சின் வரலாற்றுச் சிறப்பான பாத்திரத்தைச் சிதைப்பதற்கு முயன்று வந்திருக்கிறது. இங்கே இரண்டுவிதமான அணுகுமுறைகளை ஒருவர் தெளிவாக வேறுபடுத்திக்காண முடியும். முதல் அணுகுமுறை மார்க்சையும் அவருடைய புரட்சிகரமான போதனையையும் புறக்கணிக்கிறது; அவர் மிகக் குறைவான விஞ்ஞான முக்கியத்துவம் கொண்டவர் அல்லது “மேற்கத்திய கலாச்சார மரபுக்கு” வெளியே உள்ளவர், எனவே “உண்மையான” விஞ்ஞானத்துக்கு வெளியே இருப்பவர் என்று எடுத்துக் காட்டுகிறது. இங்கே மார்க்சுக்கும் அவருக்கு முந்தியவர்களுக்கும், குறிப்பாக மூலச்சிறப்புடைய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களுக்கும் இடையே உள்ள இணைப்பு அலட்சியப் படுத்தப்படுகிறது, குறைவாக மதிப்பிடப்படுகிறது.

எனினும் சமீபகாலங்களில் இரண்டாவது அணுகுமுறையே அதிகம் பின்பற்றப்படுகிறது. இதன்படி மார்க்ஸ் ஒரு சாதாரணமான (அல்லது அசாதரணமானவராகக் கூட) ஹெகல் ஆதரவாளராக அல்லது ரிக்கார்டோவாதியாகக் காட்டப்படுகிறார். ரிக்கார்டோவுடனும் மொத்த மூலச்சிறப்பு மரபோடும் மார்க்ஸ் கொண்டிருந்த நெருக்கம் வன்மையான அழுத்தத்தோடு எடுத்துக் கூறப்படுகிறது; அரசியல் பொருளாதாரத்தில் மார்க்ஸ் ஏற்படுத்திய திருப்புமுனையின் புரட்சிகரமான தன்மை மழுப்பப்படுகிறது. ஜே.ஏ.ஷும்பீட்டர் இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறார்; இவர் பொருளாதாரச் சிந்தனையின் வரலாறு பற்றி இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்திருக்கும் முதலாளித்துவப் புத்தகங்களில் மிகப் பெரியதொரு புத்தகத்தை எழுதியவர். இவர் மார்க்சை ரிக்கார்டோவாதி என்று கூறுகிறார்; மார்க்சின் பொருளாதார போதனை ரிக்கார்டோவின் போதனையிலிருந்து சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை; எனவே அதிலுள்ள அத்தனை குறைபாடுகளும் இதிலும் உள்ளன என்று குறிப்பிடுகிறார்.ஆனால் அவர்கூட மார்க்ஸ் “இந்த (ரிக்கார்டோவின் – ஆசிரியர்) வடிவங்களை மாற்றியமைத்துக் கொண்டார்; கடைசியில் மிக அதிகமாக வேறுபடக் கூடிய முடிவுகளுக்கு வந்தார்” என்று எழுதுகிறார்.

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சீர்திருத்தவாதமும் அதனோடு தொடர்புடைய வலதுசாரி சந்தர்ப்பவாதமும் மார்க்சியத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூகச் சிந்தனையின் மனிதாபிமான, மிதவாத மரபில் மட்டுமே வேரூன்றியிருக்கின்ற போக்காகக் கருதுவதற்கு முற்படுகின்றது. மார்க்சியம் பிரதானமாகத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான சித்தாந்தம் என்பதும் மிதவாதத்தின் எந்த வடிவத்திலிருந்தும் கோட்பாட்டளவில் முற்றிலும் வேறாக இருப்பது என்பதும் மழுப்பப்படுகிறது. மார்க்சியத் தத்துவம் அதன் புரட்சிகரமான நடவடிக்கையிலிருந்து அடிக்கடி பிரிக்கப்படுகிறது.

பெருந்திரளான மக்களிடம் மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகளைப் பரப்புவதில் “இடதுசாரி” திருத்தல்வாதத்தையும் வறட்டுச் சூத்திரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது அதிக முக்கியமானது. இந்தப் போக்குகளின் பிரதிநிதிகள் மார்க்சியத்துக்கு முந்தியவர் களின் கொள்கைகளையும் கருத்துக் களையும் புறக்கணிக்க முயல்கிறார்கள். சமூக வளர்ச்சி என்பது புறவயமான விதிகளுக்கு ஏற்ப நடைபெறுகின்ற நிகழ்வுப் போக்கு என்ற மார்க்சியக் கருத்தை, அதன் விஞ்ஞான ஆராய்ச்சிப் பகுதியின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டு வதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். பொருளாதாரத்தில் மனம்போனவாதமும் அரசியலில் வீரசாகசமும் “இடதுசாரி” திருத்தல் வாதத்தின் குறியடையாளங் களாகும். மார்க்சியத்தை புரூதோன், கிரொபோட்கின் ஆகியோரது – இவர்களுக்கும் மார்க்சுக்கும் பல அம்சங்கள் ஒத்துவருவதாகச் சொல்லப்படுகிறது – அராஜகவாதக் கருத்துக்களோடு இணைப் பவர்களைப் ”புதிய இடது” அணியினரிடம் பார்க்கிறோம். ஆனால் மார்க்சும் எங்கெல்சும் புரூதோனையும் அவருடைய போதனையையும்எதிர்த்துப்பல வருடங் களுக்கு மேல் உக்கிரமான போர் நடத்தியது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் முதலாளித்துவ அமைப்பு சரியானதே என்று காட்டும் நோக்கத்தைக் கொண்ட முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவங்களை அம்பலப்படுத்தி விமரிசனம் செய்தார்கள்; அவற்றின் சமூகத் தோற்றுவாய்களையும் நோக்கங்களையும், பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய விதிகளையும் நிகழ்வுப் போக்குகளையும் பற்றி அவர்களுடைய மேலெழுந்தவாரியான, விஞ்ஞானத்துக்குப் புறம்பான கருத்துக்களை வெளியே கொண்டு வந்தார்கள்.

தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு ஆபத்தேற்படுத்துகின்ற, அதன் புரட்சிகரமான கடமைகளிலிருந்து அதைத் திசை திருப்புகின்ற சித்தாந்தத்தின் மீது அவர்களுடைய தாக்குதல் எத்தகைய சமரசத்துக்கும் இடமில்லாத வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் முதலாளித்துவப் பொருளாதாரக் கருது கோள்களிலிருந்து புறவய யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்ற பகுத்தறிவுக்கு ஏற்ற கூறுகளைத் தேர்ந்தெடுப்பதை மார்க்சிய மூலவர்கள் தங்களுடைய விமரிசனத்தின் நோக்கமாகக் கொண்டிருந்தனர். முதலாளித்துவ அறிஞர்களின் ஸ்தூலமான பொருளாதார எழுத்துக்களைப் படிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்ட விதத்தில் வற்புறுத்தினார்கள்.

ஆதாரம்:-அரசியல் பொருளாதரத்தின் இளமைகாலம் நூல்.

இன்று நாம் அறிந்துள்ள மார்க்சிய சித்தாந்தங்கள் அன்றே பலவிதங்களில் முதலாளித்துவ வாதிகளால் திரித்தும் புரட்டியும் பேசப்பட்டதோடில்லாமல் மார்க்ஸின் போதனைகளையே எப்படியெல்லாம் காக்க போராடியுள்ளனர் என்பதனையும் நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

ஆக தோழர்களே மார்க்சிய ஆசான்கள் இங்குள்ள ஒடுக்கும் சமூக கருத்தாக்கங்களை எதிர்த்து உழைக்கும் வர்க்க விடுதலைக்கான அரசியல் பொருளாதார தத்துங்களை நிலை நாட்டியுள்ளனர். அதனை தெளிவாக புரிந்துக் கொள்வதோடு நடைமுறையில் காண்பது நமது கடமை அன்றோ?... 

தொடரும்..................

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்