என்னதான் நாற்காலிக்கு நாலுகால் இருந்தாலும் தானாக நடந்து சந்தைக்குப் போய் தன்னைத்தானே விற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம். இந்த நிதர்சனம் எல்லா பண்டங்களுக்கும் பொருந்தும். எனவே எல்லா பண்டங்களுக்கும் ஒரு உடைமையாளர் இருக்கிறார். பண்டங்கள் உயிரற்ற பொருட்கள் என்பதால் தங்கள் உடைமையாளர் யார் என்பதை அவற்றால் நிர்ணயம் செய்ய முடியாது. ஒரு நாற்காலி தன் மீது யார் ஏற வேண்டும் என்ற முடிவை எடுப்பதில்லை. ஆனால் யார் நாற்காலி ஏற வேண்டும் என்ற முடிவை மனிதர்கள் எடுக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அது இந்த பகுதிக்கு சம்பந்தமில்லாதது. ஆனால் ஒரு பண்டத்தின் உரிமை மனிதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நாற்காலி போன்ற மனித உழைப்பு தேவைப்படும் பண்டமாக இருந்தால், அல்லது பிற கைவினைப் பொருட்களாக இருந்தால் அதை உருவாக்கியவர் அதன் உரிமையாளராகிறார். அல்லது மாணிக்கம் மரகதம் போன்ற ஆபரணக் கற்கள் பண்டமாயிருந்தால் அதைக்கண்டெடுப்பவர் அதன் உரிமையாளராகிறார். எது எப்படியாயினும் தனது உடைமையாளரை பண்டம் தீர்மானிப்பதில்லை.
இப்படி இருக்கையில் ஒருபண்டம் இன்னொரு பண்டத்துடன் கொண்ட தொடர்பானது அதன் உரிமையாளர்கள் கொண்ட தொடர்பைப் பொறுத்தே யுள்ளது. ஒரு கிராம் தங்கத்துக்கும் ஒரு மூட்டை அரிசிக்கும் உள்ள தொடர்பு அதன் உரிமையாளர்கள் கையிலேயே உள்ளது. இப்போது கந்தசாமியிடம் ஒருமூட்டை அரிசியும், முனியசாமியிடம் ஒருகிராம் தங்கக்காசும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை முனியசாமியும், கந்தசாமியும் சந்திக்கவேயில்லை எனில் அந்த இரு பண்டங்களுக்கும் எந்த உறவுமின்றிபோகும் வாய்ப்புள்ளது. ஒரு வேளை சந்தித்தாலும், இருவருக்கு மிடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படாத வரையில் இவ்விருபண்டங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் ஏற்படவாய்ப்பில்லை. இது போன்ற ஒரு ஒப்பந்தத்தின் மூலமாகவே பரிவர்த்தனை நிகழ்கிறது. அந்த ஒப்பந்தம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பெரிய அளவில் இருந்தாலும், ‘ஏம்பா, நான் ஒரு கிராம் தங்கத்தை உனக்குதரேன், நீ ஒரு மூட்டை அரிசியை எனக்கு கொடு’ எனும் படி சிறியதாய் இருந்தாலும் ஒப்பந்தம் ஒப்பந்தம்தான்.
ஒருநாள் முல்லா சந்தைக்குப் போனார். அங்கே ஒரு ஏழை விவசாயி சோகமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தார். உடனே அவனிடம்சென்று ‘ஏனப்பா சோகமாய் இருக்கிறாய்?’ என்று கேட்டார்.
இந்த உதவாக் கரை கழுதையை விற்கலாம் என்றுவந்தேன். நோஞ்சானாய் இருக்கிறது என்று யாரும்வாங்கமாட்டேன் என்கிறார்கள்’என்று புலம்பினான் விவசாயி.
‘சரி வா நான் விற்றுத் தருகிறேன்’என்று அவனை கூட்டிக் கொண்டு சந்தைக்கு சென்றார் முல்லா.
சந்தைக்குப் போனதும் முல்லா கழுதையைப்பற்றி இல்லாத பொல்லாத கதைகளை அல்லிவிட்டார், ‘இந்தகழுதை மூணுமூட்டைபொதிசுமக்கும். காலையிலிருந்து இரவு வரை ஓய்வேயின்றி உழைக்கும். அதே நேரம் கொஞ்சமாகவே சாப்பிடும் அதனால்தான் இளைத்துப் போய் உள்ளது’ என்றெல்லாம் என்னென்னமோ சொன்னார்.
முல்லா சொன்னதைக் கேட்டதும் சந்தையில் கழுதைக்கு கிராக்கி அதிகமாகிவிட்டது. இரண்டு மடங்கு விலை கொடுத்து கழுதையை வாங்கக் கூட மக்கள் முன் வந்தனர்.
கழுதையை விற்க வந்த விவசாயி வேகமாய் முல்லாவிடம் வந்து கழுதையின் கயிற்றைப்பிடுங்கினான்.
இந்த கதை வேடிக்கையாய் சொல்லப்பட்டாலும், இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. எந்த ஒரு உரிமையாளரும் தனக்கு தேவையான பண்டத்தை விற்பதில்லை. தேவையில்லாத பண்டத்தையே விற்க முற்படுகிறார். நூறு ஆப்பிள் வைத்திருக்கும் ஒருவன், தனக்கு பத்து ஆப்பிள் தேவைப்படுகிற தென்றால் அதை எடுத்துக் கொண்டு மீதியுள்ள தொண்ணூறு ஆப்பிள்களையே விற்பான். நூறையும் விற்று விட்டு மீண்டும் தனக்கு தேவைப்படும் பத்து ஆப்பிள்களைத் தேடி அலையமாட்டான். வேறு வார்த்தையில் சொல்வ தென்றால் நூறு ஆப்பிள்களில் தொண்ணூறு ஆப்பிள்கள் அவனுக்கு தேவையில்லாதது. அதைத்தான் பரிவர்த்தனை செய்ய முன் வருவான். அதேபோல் வாங்குபவனும் தனது தேவைக்கு ஏற்பவே பரிவர்த்தனை செய்வான். தொண்ணூறுமாம் பழம் தேவைப்படும் ஒருவன் அதற்கு பதில் தொண்ணூறு ஆப்பிள்களை வாங்க ஒப்புக் கொள்ளமாட்டான். இதை வேறு மாதிரி சொல்வதென்றால், பண்டத்தை விற்பவருக்கு அந்த பண்டத்தால் நேரடி பயன்மதிப்பு இல்லை, அதே நேரம்பண்டத்தை வாங்குபவருக்கு அந்த பண்டத்தால் நேரடி பயன்மதிப்பு உள்ளது. பண்டத்தை விற்பவருக்கு பண்டத்தின் பயன்மதிப்பு அதன் பரிவர்த்தனை மதிப்பு மட்டுமே .அதாவது தொண்ணூறு ஆப்பிளை விற்பவருக்கு அந்த ஆப்பிள் தரும் பயன்மதிப்பு அதைபரிவர்த்தனை செய்து கிடைக்கும் பண்டமேயாகும். அதாவது கந்தசாமி தொண்ணூறு ஆப்பிளை ஒரு பேண்ட் சட்டைக்கு முனியசாமியிடம் விற்கிறார் என்று வைத்துக்கொண்டால், கந்தசாமியைப் பொறுத்தவரை தொண்ணூறு ஆப்பிள்களின் பயன்மதிப்பு ஒரு பேண்ட் சட்டைதான் . அதை தலைகீழாக முனியசாமிக்கும் கொள்ளலாம்.
பண்ட மாற்று முறை மிக எளிமையான ஒருசூத்திரத்தைக்கடைபிடிக்கிறது. நாம்ஆப்பிள்,மாம்பழம்ஆகியவற்றைஇரண்டுபண்டங்களாகக்கொண்டால் 100 ஆப்பிள்கள்=200 மாம்பழங்கள்என்றுபண்டமாற்றம்செய்கிறோம்என்றால்100 ஆப்பிள்களின்பயன்மதிப்பும் 200 மாம்பழங்களின் பயன்மதிப்பும் ஒன்று. அல்லது ஒரு ஆப்பிளின் பயன்மதிப்பு இருமாம்பழங்களின் பயன்மதிப்புக்கு இணையானது. அதே நேரம் பண்டமாற்றுமுறையில் எல்லா உரிமையாளர்களும் தங்கள் பண்டங்களை உயர்ந்த மதிப்பிற்கே பரிவர்த்தனை செய்யவேண்டும் என்று விழைகிறார்கள். இதனால் பண்டங்களின் பொதுவான மதிப்பு என்பது இல்லாமலே போகிறது. இந்த இடத்தில் தான் பணம் என்ற பண்டம் அறிமுகமாகிறது. பணத்தைப் பொறுத்தவரை எப்போதும் எல்லோரிடமும் செல்லக்கூடிய ஒருபொதுவான பண்டமாகவும் அதே நேரம் எந்த பண்டத்துடனும் பரிவர்த்தனைக்குப்பயன் படக்கூடிய பொதுவான மதிப்புடைய பண்டமாகவும் மாறுகிறது. மற்ற பண்டங்களில் இல்லாத சிறப்பம்சம் என்னவெனில் பணத்துக்கு எப்போதுமே பயன்மதிப்பு இருந்துகொண்டிருக்கும் என்பதும், பணத்துக்கு எல்லோரிடம் பயன்மதிப்பு இருக்கும் என்பதுதான்.
No comments:
Post a Comment