அக்டோபர் புரட்சியின் நான்காவது ஆண்டுவிழா அக்டோபர் 25 இன் (நவம்பர் 7) நான்காவது ஆண்டு விழா நெருங்கிவருகிறது. அம்மாபெரும் நாள் நம்மிடமிருந்து எவ்வளவுக்கு எவ்வளவு தொலைவில் செல்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய் நாம் ரஷ்யாவில் நடைபெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முக்கியத்துவத்தை தெளிவாகக் காண்கிறோம்; அவ்வளவுக்கு அவ்வளவு ஆழமாய் நமது ஒட்டுமொத்தப் பணியின் நடைமுறை அனுபவம் குறித்து சிந்தித்துப் பார்க்கிறோம். மிகவும் சுருக்கமாய், சிறிதும் நிறைவு பெறாத பெரும் போக்கான உருவரையில், இந்த முக்கியத்துவத்தையும் அனுபவத்தையும் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.
ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் நேரடியான உடனடிக் குறிக்கோள் முதலாளித்துவ-ஜனநாயகக் குறிக்கோள் தான். அதாவது மத்திய கால முறைமையின் மீத மிச்சங்களை அழித்து அவற்றை அறவே துடைத்தெறிவதும், இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, இந்த அவக்கேட்டை ரஷ்யாவிடமிருந்து களைந்தெறிவதும், நமது நாட்டில் அனைத்துக் கலாச்சாரத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பிரம்மாண்டத் தடையாய் அமைந்த இதனை அகற்றி விடுவதும் தான்.
125 ஆண்டுகளுக்கு அதிகமான காலத்துக்கு முன்பு நடைபெற்ற மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியைக் காட்டிலும் அதிக வைராக்கியத்தோடும், மிக விரைவாகவும் துணிவாகவும் வெற்றிகரமாகவும், மற்றும் பெருந்திரள் மக்களிடத்தே ஏற்பட்ட பலனைக் கொண்டு பார்க்கையில் பன்மடங்கு விரிவாகவும் ஆழமாகவும் இந்தக் களையெடுப்பினை நடத்தினோமென நாம் நியாயமாகவே பெருமை கொள்ளலாம். (லெனின் தேர்வு நூல்கள்தொகுதி -12, பக்கம் 43)
விளக்கம்:- ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி மாபெரும் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்தது. அந்தப் புரட்சி நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றை திருப்பிப் பார்க்கும் பொழுது, 1917 க்கு முன்பு அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக உழைக்கும் மக்கள் வறுமையிலும் பசி பட்டினியிலும் அடக்குமுறைக்கு உட்பட்டும் அடிமையாய் வாழ்ந்த நிலை தற்பொழுது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு உழைக்கும் மக்கள் மிக மகிழ்ச்சியாகவாழ்ந்து கொண்டிருப்பதைநாம் பார்க்க முடிகிறது என்றார் லெனின்.
அப்போது நடந்த புரட்சியின் முக்கியத்துவத்தை தற்பொழுது சுருக்கமாக நாம் பார்க்கும் பொழுது, அன்றைய காலத்தில் நமது நோக்கம் ரஷ்யாவில் மத்திய காலத்தில் இருந்த பிற்போக்கு நடைமுறைகள், மூடத்தனம், காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை கள் போன்றவற்றை ஒழித்துக் கட்டி, ரஷ்யாவில் ஒரு முழுமையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே நமது நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை நாம் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் நிறைவு செய்தோம். சமூகத்தின் முற்போக்கான வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பிற்போக்கு கலாச்சாரம், சிந்தனை முறை ஆகியவற்றை களைந்தறிந்தோம். 125 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பிரெஞ்சுப் புரட்சி சாதித்ததைக் காட்டிலும் மிக அதிகமான சாதனையை நாம் நடத்திக் காட்டினோம். தற்பொழுது ரஷ்ய மக்கள் அனுபவித்துவரும் பலன்களை நாம் பார்க்கும் பொழுது நாம் எவ்வளவு பன்மடங்கு விரிவாகவும் ஆழமாகவும் அந்த பிற்போக்குகளை களையெடுத்தோம் என்று நாம் உண்மையாகவே பெருமை கொள்ளலாம் என்றார் லெனின். இதன் மூலம், லெனின் ரஷ்யாவில் நடந்த முதலாளித்துவப் புரட்சியைப் புகழ்ந்து பேசுகிறார். அந்தப் புரட்சியின் மிக முக்கியமான நோக்கம், சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருந்த, மிச்ச மீதியாக இருந்த பிற்போக்கு தன்மைகளை களைந்து எறிவது அவசியமாக இருந்தது என்றார்.
ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்துகொண்டிருந்த போதும், அந்த முதலாளித்துவமானது பிற்போக்குத் தன்மைகளை முழுவதுமாக களையாமல் மிச்சம் மீதமாக வைத்திருந்தது; மேலும் ரஷ்யாவில் ஆட்சி அதிகாரத்தில் ஜார் மன்னன் ஆட்சியில் இருந்தான்; அந்த மன்னர் ஆட்சியை ஒழிக்கவும், எஞ்சியிருந்த பிற்போக்குத்தனங்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டவும் சோசலிசப் புரட்சியை நடத்தும் செயல் போக்கில் முதலாளித்துவ புரட்சியை ரஷ்ய போல்ஷ்விக்குகள் நடத்தி முடித்தார்கள்.
ஆகவே ஒரு சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்பட, நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் நிச்சயமாக தடையாக இருக்கும், அத்தகைய தடைகளை முழுவதுமாக துடைத்தெறிவது மிக மிகஅவசியமாகும். இதனை செய்யாமல் சமுதாயத்தை அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் செல்ல இயலாது என்பதை நாம் ரஷ்யப் புரட்சியின் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தைப் புரிந்துகொள்ள ஒரு நாட்டில் முதலாளித்துவ பொருள் உற்பத்தி நடக்கிறதா? என்ற பொருளாதார அம்சங்களை மட்டும் நாம் பார்த்தால் போதாது. அந்த நாட்டிலுள்ள பழக்க வழக்கங்கள் கலாச்சாரம், மக்களின் சிந்தனைமுறை போன்றவற்றையும் நாம் பார்க்க வேண்டும் என்பதே ரஷ்யப் புரட்சியின் அனுபவம் என்றே லெனின் நமக்குப் போதிக்கிறார். ஜனநாயகப் புரட்சியானது எஞ்சியிருக்கும் நிலப் பிரபுத்துவ கலாச்சாரம், சிந்தனைமுறை பழக்க வழக்கங்களையும் முற்றிலும் துடைத்தெறியும் நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது என்பதை யே லெனின் வலியுறுத்தினார்.
சோசலிஸ்டு (அதாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியிடம்) முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கு உள்ள உறவு குறித்து அராஜவாதிகளும் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் (அதாவது மென்ஷ்விக்குகளும் சோசலிஸ்டு - புரட்சியாளர்களும் இவர்களே அந்தசர்வதேச சமூக வகையினரது ரஷ்யப் பிரதிநிதிகள்) நம்ப முடியாத அளவுக்கு அபத்தம் பேசி வந்துள்ளனர். இனியும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த விவாகரத்தில் மார்க்சிய ஆய்வு குறித்து நாங்கள் அளித்த விளக்கமும், முந்திய புரட்சிகளது அனுபவம் குறித்து நாம் செய்த மதிப்பீடும் பிழையற்றவை என்பதை கடந்த நான்கு ஆண்டுகள் முழு அளவுக்கு நிரூபித்துக் காட்டியிருக் கின்றன. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை இதன் முன் வேறு யாருமே செய்திராதபடி நாம் நிறைவு பெறச் செய்துள்ளோம்.
சோசலிசப் புரட்சியை நோக்கி நாம் உணர்வுப் பூர்வமாகவும் உறுதியாகவும் இம்மியும் பிறழாமலும் முன்னேறிச் செல்கிறோம். இப்புரட்சி முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியிலிருந்து எந்தச் சீன மதிலாலும் பிரிக்கப்பட்டு இருக்க வில்லை என்பது நமக்குத் தெரியும். நாம் எவ்வளவு தூரம் முன்னேறுவோம், இந்த பிரம்மாண்டமான, மகத்தான பணியில் எப்பகுதியை நாம் சித்திபெறச் செய்வோம், நமது வெற்றிகளை திண்மைபெறச் செய்வதில் எந்த அளவுக்கு வெற்றியடைவோம் என்பது (இறுதியாகப் பார்க்குமிடத்து) போராட்டத் தால் மட்டுமே நிர்ணயிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியும். காலம் இதனைத் தெளிவுபடுத்தும். ஆயினும் சமுதாயத்தைச் சோசலிச திசையிலே மாற்றியமைத்திடுவதில் ஏற்கனவே பிரமாண்ட அளவில் அழிவுற்று, பலமிழந்து ஓய்ந்து போயுள்ள இந்த பிற்பட்ட நாட்டுக்கு இது பிரம்மாண்ட அளவுதான் சாதிக்கப்பெற்றுள்ளதை இங்கே காண்கிறோம். (லெனின் தேர்வு நூல், தொகுதி - 12. பக்கம் - 43, 44)
விளக்கம்:- ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு பாட்டாளிவர்க்க சோசலிசப்புரட்சி நடந்ததை நாம் அறிவோம். அந்தப் புரட்சியை நடத்தும் வேளையில் ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஜார் மன்னராட்சிதான் நடந்து கொண்டிருந் தது. கிராமங்களில் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை நீடித்திருந்தது.ஆகவே அங்கு நிலவிய பிற்போக்கு களை துடைத்தெறிவதற்காக ஜனநாயகப் புரட்சியை போல்ஷ்விக் குகள் நடத்தினார்கள். அங்கிருந்த அராஜகவாதிகளும், மென்ஷ்விக்குகள் போன்ற குட்டிமுதலாளித்துவ ஜனநாயக வாதிகளும் சோசலிசப்புரட்சிக்கும் முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சிக்கும் இடையிலான உறவுகளைப் புரிந்து கொள்ளாமல் அபத்தமான கருத்துக் களையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். இந்தியாவில் இந்த இரண்டுவகையான புரட்சிகளுக்கு இடையிலான உறவுகளைப் புரிந்து கொள்ளாமல் இங்குள்ள சிலர் சோசலிசப் புரட்சிக்கும் முதலாளித்துவப் புரட்சிக்கும் இடையில் எவ்விதமான உறவும் இல்லை என்றும் அதனை தனித்தனியானதாகப் பிரித்துப் பார்க்கிறார்கள். இந்த விசயத்தில் மார்க்சிய ஆசான்களது விளக்கங் களையும், இதற்கு முன்பு நடந்த புரட்சிகளின் அனுபவத்தையும் இங்குள்ளவர்கள் கணக்கிலெடுக்காமல் அன்றைய ரஷ்ய மென்ஷ்விக்குகளைப் போலவே அபத்தமான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சி நடக்கும்முன்பே ஐரோப்பாவில் சில நாடுகளில் ஜனநாயகப் புரட்சிகள் நடந்துவிட்டது. அங்கு நடந்த ஜனநாயகப் புரட்சிக்கும் ரஷ்யாவில் நடந்த ஜனநாயகப் புரட்சிக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை இங்குள்ளவர்கள் பார்க்கத் தவறுகிறார்கள். ஐரோப்பாவில் நடந்த ஜனநாயகப் புரட்சி முதலாளிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதோடு மட்டுமல்லாமல் முதலாளிகளின் நலன்காக்கும் முதலாளித்துவ அரசை உருவாக்குவதோடு முடிந்துவிட்டது. ஆனால் ரஷ்யாவில் நடந்த ஜனநாயகப் புரட்சியானது முதலாளிகளின் அரச அமைப்போடு முடிந்துவிடவில்லை, அந்த முதலாளித்துவ கெரென்ஸ்கியின் அரசையும் தூக்கியெறிந்துவிட்டு பாட்டாளி வர்க்க அரசமைப்பதற்குரிய சோசலிசப் புரட்சியையும் நடத்தி முடிக்கப்பட்டது. முதலாளித்துவஜனநாயகப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்குமான இயங்கியல் உறவை நன்கு புரிந்துகொண்ட ரஷ்ய போல்ஷ்விக்களால்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ஆகவே இந்த அனுபவத்திலிருந்து முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை சோசலிச அரசமைக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து நாம் நடத்திட வேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்ளாமல் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையில் ஒரு பெரிய சீனச்சுவற்றை எழுப்புகிறார்கள். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை சோசலிசப் புரட்சிக்கு எதிராகப் பார்க்கிறார்கள். ரஷ்யாவில் நடத்தப்பட்ட ஜனநாயகப்புரட்சியானது ஐரோப்பாவில் நடந்த ஜனநாயகப் புரட்சியைக்காட்டிலும் பலமடங்கு சாதனை படைத்ததை இங்குள்ளவர்கள் பார்க்கத் தவறுகிறார்கள்.
இதனையே லெனின் அபத்தம் என்றார். சோசலிசப் புரட்சியை நடத்துவதுதான் கம்யூனிஸ்டுகளின் லட்சியமாகும். அந்தப் புரட்சியை நடத்தும்போது முதலாளித்துவத்திற்கு முந்திய பிற்போக்கு கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் அரசியல்களை நாம் எதிர்த்துப் போராடி துடைத் தெறிவது அவசியமாகிறது. அதற்காக நாம் நடத்தவேண்டிய புரட்சிதான் ஜனநாயகப் புரட்சியாகும். ஆகவே கம்யூனிஸ்டுகளின் பணியானது பிரமாண்டமானதாகும். இதில் நாம் சாதனை படைப்பது இதனை சரியாகப் புரிந்துகொண்டு நாம் போராடுவதன் மூலமே கிடைக்கும் என்றார் லெனின். ஆகவே இங்கு நாம் சோசலிசப் புரட்சியை நடத்தி பாட்டாளிவர்க்க அரசை உருவாக்குவதற்காகவே போராடுவோம். அப்பொழு நாம் எதிர்கொள்ளும் ஜனநாயகப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இவ்விரண்டு கடமைகளுக்கு இடையில் சீனச்சுவர் எழுப்பிட வேண்டாம்.
ஆனால் நமது புரட்சியின் முதலாளித்துவ ஜனநாயக உள்ளடக்கம் குறித்து சொல்லி முடிப்போம். மார்க்சியவாதிகள் இதன் பொருளைப் புரிந்து கொண்டாக வேண்டும். இதை விளக்கும் பொருட்டு, பழிச்சென தெரியும் சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்.
புரட்சியின் முதலாளித்துவ ஜனநாயக உள்ளடக்கம் என்பது ,நாட்டின் சமூக உறவுகளிலிருந்து (அமைப்பு, நிறுவன ஏற்பாடுகளிலிருந்து) மத்திய கால வாழ்வினை,பண்ணையடிமை முறையை, நிலப்பிரபுத்துவத்தை களைந்து அகற்றுவதைக் குறிப்பதாகும்.
ரஷ்யாவில் 1917 வரை பண்ணை அடிமை முறையின் பிரதான வெளிப்பாடு களாகவும் மீதமிச்சங்களாகவும் இருந்தவை எவை? முடியரசும், குலப்படிநிலை ஆதீனங்களும், நிலவுடமைமுறையும், நிலத்தைப் பயன் படுத்துவதற்கான முறையும், பெண் களின் நிலையும், மதமும், தேசிய இன ஒடுக்குமுறையும் ஆகியவையே. இந்த “அவுகியஸ்லாயங்களில்” அதாவது குதிரை லாயங்களில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் அதிகம் முன்னேறிய அரசுகள் யாவும் அவற்றில் முதலாளித் துவ ஜனநாயகப் புரட்சிகளை 125 ஆண்டுகளுக்கும் 250 ஆண்டுகளுக்கும் அதற்கும் அதிகமான காலத்துக்கும் முன்பு சித்தி பெறச் செய்து கொண்ட போது (இங்கிலாந்தில் 1649) இந்த லாயாயங்களை அவை பெருமளவுக்கு சுத்தம் செய்யாமலே விட்டு வைத்திருந்தன என்பதை இடைக் குறிப்பாய் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த குதிரை லாயங்களில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங் கள், இவற்றை நாம் துப்புரவாய் சுத்தம் செய்து இருப்பதை காண்பீர்கள். இத்துறையில் முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் மிதவாதிகளும் (காடேட்டுகள்) குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும் (மென்ஷ்விக்கு களும் சோசலிஸ்ட் புரட்சியாளர்களும்) அவர்கள் அதிகாரத்தில் இருந்த எட்டுமாத காலத்தில் சாதித்ததைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாய் நாம் பத்தே வாரங்களில் 1917, அக்டோபர் 25, (நவம்பர் 7)க்கும் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்ட 1918 ஜனவரி ஐந்துக்கும் இடையிலான காலத்தில் சாதித்தோம்.
இந்தத் தொடை நடுங்கிகளும் வாய்வீச்சாளர்களும் தற்பெருமையாளர் களான நார்ஸீஸ்களும் குட்டி ஹம்லெட்டுகளும் தமது அட்டைக் கத்திகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் முடியரசைக் கூட அழித்திட வில்லை. யாரும் என்றும் செய்திராத முறையில் நாம் முடியரசு அசிங்கம் அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்தோம். குலப் படிநிலை ஆதீனங்கள் என்னும் அந்த பழங்கால அமைப்பில் ஒரு கல்லையும் விட்டு வைக்காமல் நாம் அதனை ஒழித்திட்டோம். (மிகவும் முன்னேறிய பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் கூட அந்த அமைப்பின் மீத மிச்சங்களை இதுநாள் வரை அறவே அகற்றவில்லை). குலப்படி நிலை ஆதீனங்களது ஆணி வேர்களாகிய நில உடமையிலான பிரபத்துவ மீதமிச்சங்களையும் பண்ணை அடிமை முறை மீதமிச்சங் களையும் நாம் அடியோடு கெல்லியெறிந்து விட்டோம். மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியால் செய்யப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் “இறுதியான” விளைவு எப்படிப்பட்டதாய் இருக்குமென “விவாதம் நடத்தலாம்” (இம்மாதிரியான விவாதங்களில் மூழ்கியுள்ள எழுதுகோலர்களும் காடேட்டுகளும் மென்ஷ்விக்குகளும் சோசலிசப் புரட்சியாளர்களும் நாட்டுக்கு வெளியே ஏராளமாய் இருக்கிறார்கள்), இம்மாதிரியான விவாதங்களில் தற்போது நேரத்தை விரயமாக்க நாம் விரும்பவில்லை. ஏனெனில் இந்த விவாதத்துக்கும் இதனையொட்டிய ஏராளமான ஏனைய விவாதங்களுக்கும் போராட்டத்தின் வாயிலாய் நாம் முடிவு கட்டி வருகிறோம். ஆனால் குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் பண்ணை அடிமை முறை மரபுகளின்காவலர்களாகிய நிலப்பிரப்புகளுடன் தொடர்ந்து எட்டு மாதங்களாய் “சமரசம் செய்து” வந்திருக்க, நாம் ஒரு சில வாரங்களுக்குள் அந்த நிலப்பிரபுக் களையும் அவர்களது மரபுகள் யாவற்றையும் ரஷ்ய மண்ணிலிருந்து அறவே துடைத்தெறிந்தோம் என்பது எந்த விவாதத்தாலும் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். (லெனின் தேர்வு நால், தொகுதி - 12, பக்கம் - 44, 45)
விளக்கம்:- ரஷ்யாவில் நடத்தப்பட்ட முதல் ஜனநாயகப் புரட்சியானது, முதலாளித்துவ ஜனநாயக உள்ளடக்கம் கொண்டதாகும். சமூக வாழ்க்கைமுறை, சிந்தனைமுறை பண்ணையடிமைத்தனம் போன்றவற்றிற்கான நிறுவனங்கள் போன்றவை முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றி வளர்வதற்கு முன்பு இருந்த நிலையிலேயே மீதமிச்சங்களாக இருப்பனவற்றை துடைத்தெறிவதற்கான போராட்டங்களை குறிக்கிறது. நிலப்பிரபுத்துவ காலத்தில் தோன்றி ஏகாதிபத்தியத்தால் காலனி யாக்கப்பட்ட இந்தியாவில் நிலவிய சாதிப்பிரச்சனை, மதப்பிரச்சனை, தேசிய இனப்பிரச்சனை, மத நிறுவனங்கள் சுரண்டலுக்கான நிறுவனங்களாக குறிப்பாக நிலங்களை உடமையாகக் கொண்டுள்ள நிறுவனங் களாக நீடிப்பது, அரசியலில் மதம் கலப்பது,பெண்ணடிமைத்தனம் போன்ற பிற்போக்குகள் இந்தியாவில் இப்போதும் நீடிக்கின்றது. இந்தப் பிற்போக்குகளை துடைத்தெறிவதுதான் நமது ஜனநாயகப் பணியாக இப்போதும் உள்ளது. இந்த ஜனநாயகப் பணியை மட்டும் செய்துவிட்டால் போதுமா? இல்லை. இந்திய சமூகத்தை பொதுவுடமை சமூகமாக மாற்ற வேண்டும், அதுதான் நமது நீண்டகால லட்சியமாகும். ஆகவே தற்போது உடனடியாகச் செய்யவேண்டிய ஜனநாயகப் பணியின்போது சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்கும் சோசலிச அரசை உருவாக்கும் நமது லட்சியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும், மேலும் அதற்காக மக்களைத் தயார்படுத்த வேண்டும்.ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சியின் மூலம் மென்ஷ்விக்குகளும் சோசலிசப் புரட்சியாளர்களின் தலைமையில் கெரென்ஸ்கியின் முதலாளித்துவ அரசு தான் உருவாகியது. அந்த அரசு முதலாளித்துவ ஜனநாயகப் பணியைக் கூட ஒழுங்காகச் செய்யவில்லை. இதனையே லெனின் ஒரு உவமானம் மூலம் விளக்கினார். குதிரைலாயத்தை முழுமையாக சுத்தம்செய்யாமல் பெருமளவு குப்பைகளை விட்டுவிட்டா ர்கள்.
அதுபோலவே இந்தியாவில் சாதி, மதம், தேசிய இனப்பிரச்சனை மற்றும் மத ஆதீனங்களின் பிற்போக்குகளையும், பிரிட்டீஷ் ஆட்சி வெறியேறி பின்பு ஆட்சிக்குவந்த முதலாளித்துவ கூட்டம் தீர்க்காமல் விட்டுவிட்டது மட்டுமல்லாமல் இந்த பிற்போக்குகளை ஊட்டி வளர்ப்பதையும் நாம் பார்க்கிறோம். பிரிட்டீஷை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தின் போதே சோசலிசப் புரட்சிக்கான திட்டம் வகுத்து அந்தத் திட்டத்தில் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதையும் இணைத்து செயல் பட்டிருந்தால் பிரிட்டீஷார் வெறியேறி பின்பு சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறியிருக்கலாம். எனினும் இன்றைய கட்டத்திலும் சோசலிசப் புரட்சியை நடத்துவதே நமது நோக்க மாகக்கொண்டு செயல்பட்டுக்கொண்டே நமது ஜனநாயகக் கடமையையும் செய்திட வேண்டும். நமது உடனடியான கடமை ஜனநாயகம்தான். எனினும் சோசலிசத்தை முன்வைக்காமல் ஜனநாயகப் புரட்சி என்பது சோசலிசப் புரட்சிக்குப் பயன்படாது. ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சியைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோசலிசப் புரட்சியின் மூலம்தான் தொடைநடுங்கிகளான முதலாளித்துவவாதிகளால் தீர்க்கப் படாத பல பிரச்சனைகளை தீர்த்து உலகில் எங்கும் சாதிக்காத சாதனை களை ரஷ்ய போல்ஷ்விக்குகளின் தலைமையில் தொழிலாளர்களும், விவசாயிகளும் சாதித்தார்கள். அந்த அனுபத்தை பின்பற்றி இந்தியாவிலும் சோசலிசத்தை முன்வைத்து ஜனநாயகப்புரட்சியை நடத்துவதும் அதனைத் தொடர்ந்து சோசலிசப் புரட்சியையும் நடத்துவது என்ற அரசியல் வழியைப் பின்பற்றிச் செல்லவேண்டியதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். சோசலிசத்தைப் புறக்கணித்த ஜனநாயகப் புரட்சியும், ஜனநாயகத்தைப் புறக்கணித்த சோசலிசப் புரட்சியும் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத் துக்கு எதிரானது என்பதை ரஷ்யப் புரட்சியின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மதத்தையோ, பெண்களது உரிமையின் மையையோ, ரஷ்யர்கள் அல்லாததேசிய இனத்தோர் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்குச் சமத்துவ உரிமைகள் இல்லாமையுமோ எடுத்துக்கொள்ளுங் கள். இவையாவும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குரிய பிரச்சனை கள். அற்ப புத்திகொண்ட குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் தொடர்ந்து எட்டு மாதங்களாய் இவை குறித்து வாய்ப்பேச்சு பேசினார்கள். உலகில் மிகவும் முன்னேறிய நாடுகளில் ஒன்றிலேனும் இந்தப் பிரச்சனை களுக்கு முதலாளித்துவ ஜனநாயக வழியில் முடிவான தீர்வு காணப் படவில்லை. நமது நாட்டில் அக்டோபர் புரட்சியின் சட்டங்களால் முடிவாக இவை தீர்க்கப்பட்டிருக்கின்றன. மதத்துக்கு எதிராய் நாங்கள் மெய்யான போராட்டம் நடத்தினோம். தொடர்ந்து நடத்தி வருகிறோம். ரஷ்யர்களல்லாத எல்லா தேசிய இனத்தோர்க்கும் அவர்களது சொந்தக் குடியரசுகள் அல்லது தன்னாட்சிப் பிராந்தியங்களை வழங்கியுள்ளோம். பெண்களை உரிமையற்றோராய் அல்லது முழுவுரிமை இல்லோதாராய் இருத்தி வைத்தல் - இந்த இழிவார்ந்த படுமோசமான அவக்கேடு–பண்ணையடிமை முறையின், மத்தியகாலத்தில் இந்த அருவருக்கத் தக்க மீதமிச்சம் -இலாபவெறி கொண்ட முதலாளித்துவ வர்க்கத்தாலும் மந்த புத்தியனரும் தொடைநடுக்கம் கொண்டோருமான குட்டிமுதலாளித்துவப் பகுதியோராலும் உலகில் விதிவிலக் கின்றி ஏனைய ஒவ்வொரு நாட்டிலும்புதுப்பிக்கப்பட்டு வரும் இது - இங்கு ரஷ்யாவிலும் நம்மிடம் இல்லாது ஒழிந்துவிட்டது.(லெனின் தேர்வுநூல் பக்கம் - 46)
விளக்கம்:- மத அடிப்படையிலான பிற்போக்குத்தனமும், பெண்ணடிமைத் தனமும், தேசிய இன ஒடுக்குமுறை போன்றவை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவுபெறாத நாட்டில் மிச்சசொச்சமாக நிலவும் என்கிறார் லெனின். ரஷ்யாவில் நிலவிய இந்த பிற்போக்குத்தனத்தை பிப்ரவரி புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த அற்ப
புத்தியுள்ள குட்டிமுதலாளித்துவ வாதிகளான மென்ஷ்விக்கள் அவர்களது
எட்டுமாத ஆட்சியில் இந்தப் பிரச்சனை களைத் தீர்ப்பதாக வாய்ப்பேச்சாளர் களாக இருந்தார்கள் ஆனால் இவர்கள் இப்பிரச்சனைகளை தீர்க்கவே இல்லை. இதோடு இந்திய வரலாற்றை ஒப்பிடுங்கள், வெள்ளையர்கள் வெளியேறிய பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் இதுபோன்ற பிரச்சனை களை ஒழிப்போம் என்று தொடர்ந்து வாக்குறிது கொடுத்தார்கள், பல ஆண்டுகள் ஆனபோதும் இங்கு சாதி, மதம், தேசிய இனம், பெண்ணடிமைத் தனம் போன்ற பல பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த லெனின் தலைமையில் வந்த அரசு சில வாரங்களுக்குள் இந்தப் பிரச்சனைகளைத் தீர்த்தது. ஆகவே ரஷ்ய போல்ஷ்விக்குகளின் அனுபவத்தைப் பின்பற்றி இங்குள்ள கம்யூனிஸ்டுகள் சோசலிசப் புரட்சிக் கான திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் சாதித்ததைப் போன்ற சாதனையை இங்கும் சாதித்திருக்க முடியும். ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தை கணக்கிலெடுத்து இங்குள்ள குறிப்பான சூழ்நிலைகளையும் புரிந்துகொண்டு இங்கு சோசலிச அரசை உருவாக்கு வதற்கான குறிப்பான அரசியல் வழியில் செயல்படுவதன் மூலமே இங்கேயுள்ள சாதிப்பிரச்சனையிலிருந்து பல்வேறுபிரச்சனைகளையும் தீர்த்து சோசலிச அரசை உருவாக்க முடியும். இறுதியில் இந்தியாவில் ஒரு சோசலிச அரசை உருவாக்குவதன் மூலமே இங்குள்ள சாதி, மதப் பிரச்சனையையும் தேசிய இனப் பிரச்சனையையும் முழுமையாகத் தீர்க்க முடியும் என்பதே ரஷ்யப் புரட்சியின் அனுபமாகும். இதனை விடுத்து சாதிப்பிரச்சனையையும், மதப்பிரச்சனையையும் தேசிய இனப் பிரச்சனையையும் பெண்ணடிமைத் தனைத்தையும் தனித்தனியாகத் தீர்க்கப் போகிறோம் என்று சொல்லி செயல்படுபவர்கள் வெறும் வாய்வீச்சாளர்களே ஆவார்கள். இந்த வாய்வீச்சாளர்களால் எந்தப் பிரச்சனை யையும் தீர்க்கமுடியாது. ஆகவே போல்ஷ்விசத்தை பின்பற்றுபவர்களே பிரச்சனைகளை தீர்ப்பார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகளுக்குத் தேவையான திட்டம் சோசலிசப் புரட்சிக்கான திட்டமாகவே இருக்கவேண்டும். அந்தத் திட்டத்தில் சாதிப்பிரச்சனை, மதப் பிரச்சனை, தேசியினப்பிரச்சனை மற்றும் பெண்ணடிமைப் பிரச்சனை போன்றவைகளுக்கான தீர்வையும் திட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் அது இல்லை, இது இல்லை, இந்தக் குறை இருக்கிறது என்ற நொண்டிச்சாக்கைச் சொல்லி சோசலிசத் திட்டத்தை புறக்கணிப்பது தவறாகும். வரலாற்றில் பிற்போக்கான இதுபோன்ற பிரச்சனைகளை முதலாளித்துவ அரசியல்வாதிகள் முழுமையாக தீர்த்ததில்லை. இதற்கு மாறாக இந்தப் பிரச்சனைகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளை சோசலிசப் புரட்சியை நடத்துவதை நோக்கமாகக் கொண்டவர்கள்தான் தீர்த்துள்ளார்கள் என்பதுதான் வரலாறாகும். இவையாவும் சேர்ந்ததுதான் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கம்.
நூற்றம்பது, இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் புரட்சியின் (அல்லது ஒரு பொது வகையின் ஒவ்வொரு தேசியத் திரிபுருவையும் கருதுவோமாயின்,அந்தப் புரட்சிகளின்) முற்போக்கான தலைவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்: மத்தியகாலத் தனியுரிமைகளிலிருந்தும், ஆண்களுடன் பெண்களுக்குச் சமத்துவம் இல்லாமையிலிருந்தும், அரசியல் அந்த அல்லது இந்த மதத்துக்கான (அல்லது “மதக்கருத்துக் கான” பொதுவில் மதச்சார்புடைமைக் கான) தனிவுரிமையிலிருந்தும், தேசிய இனச் சமவுரிமை இன்மையிலிருந்தும் மக்களை விடுவிப்போம் என்றார்கள். வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் நிறைவேற்றவில்லை. அளித்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் புனித உரிமையாகிய தனியார் சொத்துரிமையிடம் அவர்களுக்கு இருந்த “மரியாதை உணர்வால்” அவர்கள் தடுக்கப்பட்டனர். நமது பாட்டாளிவர்க்கப் புரட்சி இந்த கேடுகெட்ட “மரியாதை உணர்வால்” கொடுங்கேடு கெட்ட இந்த மத்தியகால முறைமை யிடத்தும் “புனித உரிமையான தனிச் சொத்துரிமை” யிடத்துமான இந்த உணர்வால் - பீடிக்கப்பட்டிருக்கவில்லை. (லெனின் தேர்வு நூல்-12, பக்கம் 46, 47)
விளக்கம்:- உலகில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்திய தலைவர்கள், மத்திய கால தனி உரிமைகள் அதாவது மன்னர் ஆட்சி காலத்தில் சில தனிப்பட்ட நபர்களுக்கு இருந்த சிறப்பு உரிமைகள், ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் உரிமைகள் இல்லாத நிலை, மத அடிப்படையில் உருவாக்கப்பட்ட தனி உரிமைகள், தேசிய இனங்களுக்கு இடையில் சம உரிமை இல்லாத நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மக்களை விடுவிப்போம் என்று இந்த தலைவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இவர்கள் அளித்த வாக்குறுதிகளை இவர்கள் நிறைவேற்றவில்லை என்பதே வரலாறாகும். அதாவது இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்கு காரணம் இவர்கள் தனியார் சொத்துரிமை அவசியம் என்றே கருதினார்கள். இந்த தனியார்சொத்துரிமையை பாதுகாப்பதே இவர்களுடைய லட்சியமாக இருந்த காரணத்தால் இவர்களால் சமூகத்தில் நிலவிய பிற்போக்கு அரசியல் உரிமை களை எதிர்த்து போராடி முறியடிக்க முடியவில்லை. இந்தப் பிற்போக்கு உரிமைகளுக்குப் பின்னணியில் இருப்பது தனி உடமை தான். இந்த தனி உடமையை ஒழிப்பதற்கு முயற்சி செய்யாமல் சமூகத்தில் உள்ள பிற்போக்குகள் எவற்றையும் ஒழிக்க முடியாது என்ற உண்மையை இவர்கள் உணர்வதே இல்லை. ஆனால், பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் இந்த தனி உடமை உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை, இந்த தனி உடமையை ஒழிப்பதே அவர்களது லட்சியமாக இருந்தது; ஆகவே அவர்களால் மட்டுமே பிற்போக்கு கொள்கைகள் கருத்துக்கள் நடைமுறை பழக்க வழக்கங்கள் அனைத்தையும் ஒரு புரட்சிகரமான பாட்டாளி வர்க்க அரசை உருவாக்கி ஒழிக்க முடிந்தது. (உதாரணம் சோவியத்து ரஷ்யா) ஆகவே சமூகத்தில் நிலவும் எந்த வகையான பிற்போகையும் ஒழிப்பதற்கு நாம் முயற்சி செய்யும் பொழுது தனி உடமையை ஒழிக்கும் சோசலிச உணர்வை வளர்க்கும் முறையை நாம் பின்பற்றி போராட வேண்டும்.
தனிவுடமையை ஒழிப்பதற்கும் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடைவதற்கு வெகுகாலம் ஆகும் என்பது உண்மையே. எனினும், இந்த நீண்டகால லட்சியத்தை நாம் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். அந்த லட்சியத்தை அடையும்வரை நமது வாழ்க்கையில் விடிவு இல்லை என்பதை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. இந்த உணர்வை உழைக்கும் மக்களிடம் எப்போதும் தொடர்ந்து மக்களுக்கு ஊட்டவேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். நாம் நடத்தும் ஒவ்வொரு போராட்டமும் சோசலிச லட்சியத்தை நோக்கிய உணர்வோடு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் ரஷ்யாவில் மக்களுக்கு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் சாதனைகளை உறுதியாய் நிலைபெறச்செய்யும் பொருட்டு நாம் மேலும் முன் செல்ல வேண்டி இருந்தது. அவ்வாறே நாம் முன் செல்லவும் செய்தோம். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக் குரிய பிரச்சனைகளுக்கு நாம் போகிற போக்கில், நமது பிரதானமான, மெய்யான, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர, சோசலிச செயல்பாடுகளின் “உடன் விளைவாய்த்” தீர்வு கண்டோம். சீர்திருத்தங்கள் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் உடன் விளைவுகள் ஆகும் என்றே நாம் எப்போதுமே கூறி வந்திருக்கிறோம். முதலாளித்துவ ஜனநாயக சீர்திருத்தங்கள் பாட்டாளி வர்க்க, அதாவது சோசலிசப் புரட்சியின் உடன் விளைவுகள் ஆகும் என்று கூறினோம். செயல்கள் மூலம் அதை நிரூபித்தும் காட்டினோம். இடைக் குறிப்பாய் இங்கு இதனை குறிப்பிட வேண்டும்: காவுத்ஸ்கிகளும், ஹில்ஃபர்டிங்குகளும், மாரத்தவ்களும், செர்னோவ்களும், ஹில்குவித்துக்களும், லொங்கேக்களும் மாக்டொனால்டு களும், டுராட்டிகளும் மற்றும் “இரண்டரையாவது” மார்க்சியத்தின் ஏனைய எல்லாச் சூரர்களும் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கும் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிக்கும் இடையில் உள்ள இந்த உறவினைப் புரிந்து கொள்ளும் திராணியற்றோராய் இருந்தனர். முதலாவது இரண்டாவதாக வளர்கிறது, இரண்டாவது, போகிற போக்கில், முதலாவதற்குரியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது. இரண்டாவது முதலாவதன் செயலைத் திண்மை பெறச் செய்கிறது. முதலாவதைக் கடந்து வளர்வதில் இரண்டாவது எவ்வளவு தூரம் வெற்றி அடைகிறது என்பதை நிர்ணயிப்பது போராட்டம் தான் போராட்டம் மட்டுமே தான். (லெனின் தேர்வுநூல்-12, பக்கம் - 47)
விளக்கம்:- ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 1917 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது. அந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையான சாதனை படைக்கவில்லை.ஆகவே அந்த ஜனநாயகப் புரட்சியின் சாதனைகளை முழுமைப்படுத்துவதற் காக நாம் மேலும் முன் செல்ல வேண்டி இருந்தது என்று லெனின் கூறினார். அதற்காகவே போல்ஷ்விக் கட்சி மக்களுக்கு சோசலிசப் புரட்சியின் அவசியத்தை போதித்து செயல்படுத்தி யது. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவேற்ற வேண்டிய பல வேலைகளை போல்ஷ்விக் கட்சி நடத்திய பாட்டாளி வர்க்க சோசலிச புரட்சிக்காக நடத்தப்பட்ட போராட்டங் களின் போக்கில் முதலாளித்துவ ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி யது. பாட்டாளி வர்க்க சோசலிச செயல்பாடுகளின் உடன் விளைவாய் முதலாளித்துவப் புரட்சிக்கான பிரச்சினைகளை தீர்த்து வைத்தது. சீர்திருத்தங்கள் என்பது புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் உடன் விளைவுகள் ஆகும் என்று லெனின் எப்பொழுதும் கூறி வந்தார். அதாவது பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் உடன் விளைவுகளாகவே சீர்திருத்தங் களை லெனின் விளக்கினார். அதாவது சோசலிசப் புரட்சி என்ற கருத்தை முன் வைக்காமல் சீர்திருத்தங்கள் என்பது முதலாளித்துவ வகைப்பட்ட ஏமாற்று வேலைகளே என்பதை லெனின் வலியுறுத்தினார்.
ஆகவே ஜனநாநகப் புரட்சி என்றாலும், முதலாளித்துவ சீர்திருத்தங்கள் என்றாலும் சோசலிசத்தை முன்னிறுத்தாமல், சோசலிசத்திற்காகப் போராடாமல் செயல்படுத்துவது என்பது அந்த சீர்திருத்தமே முழுமையடையாது. மக்களின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்காது. இந்த உண்மையை ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் நடைமுறையில் செயல்படுத்திக் காட்டினார்கள். முதலாளித்துவப் புரட்சி முடிந்த பின்பும் ரஷ்யாவில் அந்த முதலாளித்துவபுரட்சிக்கானகடமைகளை ஆட்சிக்கு வந்த கெரன்சி அரசாங்கம் செய்யவில்லை.
போல்ஷ்விக்குகள்தான் சோசலிசத்துக் கான போராட்டத்தை நடத்தி இந்தக்கடமைகளை முழுமையாக நிறைவேற்றினார்கள். இதன் மூலம் முதலாளித்துவப் புரட்சிக்கும் முதலாளிய சீர்திருத்தங்களுக்கும் சோசலிசப் புரட்சிக்கும், சோசலிச நடைமுறைக்கும் இடையிலான இயங்கியல் உறவை உழைக்கும் மக்களுக்கு போல்ஷ்விக்கு கள் புரிய வைத்தார்கள். இந்த உண்மையைத்தான் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் இருந்த காவுஸ்கி, மாரத்தா போன்ற கம்யூனிசம் பேசும் சூரர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றார் லெனின். அதேபோலவே இந்தியாவிலும் கம்யூனிசம் பேசும் சூரர்கள் முதலாளித்துவ புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான இயங்கியல் உறவை புரிந்து கொள்ளவே இல்லை. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியானது ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியாக வளர்ந்தது, சோசலிசப் புரட்சி நடத்தப்படும் பொழுது அதன் போக்கில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகுரிய பிரச்சனைகளுக்கு ரஷ்யப் புரட்சியாளர் கள் தீர்வு கண்டார்கள். அங்கு நடந்த சோசலிசப் புரட்சியானது ஜனநாயக புரட்சியை உறுதிப்படுத்தி திடப்படுத்தி யது. இதன்மூலம் சோசலிசப் புரட்சியானது எந்த அளவுக்கு வெற்றி அடைகிறதோ, எந்த அளவுக்கு சாதனை புரிகிறதோ, அந்த அளவுக்குத்தான் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் மூலம் செய்யப்பட வேண்டிய பணிகள் முழுமை பெறும். இதற்கு சோசலிசப் புரட்சிக்காக நாம் எந்த அளவுக்கு போராடுகிறோமோ அந்த அளவுக்குத் தான் ஜனநாயகப் புரட்சி முழுமைபெற்று முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியும், சோசலிசப் புரட்சியும் வளர்ந்து சாதனை புரிய முடியும். ஆகவே முதலாளித்துவ சீர்திருத்தமாக இருந்தாலும் சரி ஜனநாயகத்திற்கான போராட்டமாக இருந்தாலும் சரி சோசலிசத்தை முன்னிறுத்தி, சோசலிசத்தை வெற்றி யடை செய்ய வேண்டும் என்ற உணர்வோடு செயல்பட்டால் மட்டுமே முதலாளித்துவ சீர்திருத்தம் கூட உறுதி பெற முடியும். இந்த உண்மையை முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளும்,பொதுவுடமை இயக்கத்தில் இருக்கும் திருத்தல்வாதிகளும் கலைப்புவாதி களும் குறுங்குழுவாதிகளும் புரிந்து கொள்ள தவறுகிறார்கள். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்று சொல்லிக்கொண்டு சீர்திருத்தங் களுக்காக முதலாளிகளின் பின்னால் இருந்துகொண்டு முதலாளித்துவத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறா ர்கள். ஒரு புரட்சி எப்படி மற்றொன்றாக வளர்ச்சியுறுகிறது என்பதற்கு மிகவும் கண்கூடான நிரூபணங்கள் அல்லது வெளிப்பாடுகளில் ஒன்றே சோவியத் அமைப்பு. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சோவியத் அமைப்பானது அதிகபட்ச அளவிலான ஜனநாயகத்தைக் கிடைக்கச் செய்கிறது; அதே போது முதலாளித்துவ ஜனநாயகத்திடமிருந்தான முறிவையும், ஜனநாயகத்தின் ஒரு புதிய, சகாப்த முக்கியத்துவம் வாய்ந்த வகையின், அதாவது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின், அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் உதயத்தையும் அது குறிக்கின்றது. நமது சோவியத் அமைப்பினை கட்டியமைத்திடும் பணியில் நமது பின்னடைவுகள் குறித்தும் தவறுகள் குறித்தும் அந்திமக் காலத்திய முதலாளித்துவ வர்க்கத்தாரையும் அவர்களுக்கு வால் பிடித்துச் செல்லும் குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளையும் சேர்ந்த கோட்டான்களும் காட்டேரிகளும் நம் மீது சாபங்களையும் வசவுகளையும் ஏளனத்தையும் பொழியட்டும். நிறைய தவறுகள் புரிந்துள்ளோம், புரிந்தும் வருகிறோம் என்பதையும், மிகப் பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் நாம் கணமும் மறந்து விடவில்லை. முன் பின் கண்டிராத வகையிலான ஓர் அரசு அமைப்பினைக் கட்டி அமைத்திடுவதைப் போன்ற ஒரு புதிய பணியில், உலக வரலாற்றிலேயே முற்றிலும் புதுமையான இதில் பின்னடைவுகளையும் தவறுகளையும் தவிர்க்கவும் முடியுமோ! நமது பின்னடைவுகளையும் தவறுகளையும் சரி செய்வதற்கும், சோவியத்கோட்பாடுகளை நடைமுறையில் நாம் செயல்படுத்துவதை குற்றம் குறையற்ற நிலையில் இருந்து இன்னமும் நெடுந்தொலைவில், மிக நெடுந் தொலைவில் இருந்து வரும் இதனை மேம்படுத்துவதற்கும் இடையராது பாடுபடுவோம். சோவியத் அரசு ஒன்றை கட்டியமைக்க முற்படும் நற்பேறு, இவ்விதம் உலக வரலாற்றில் ஒரு புது யுகத்தை முதலாளித்துவ நாடு ஒவ்வொன்றிலும் ஒடுக்கப்பட்ட வர்க்கமாய் இருப்பதும், ஆனால் புது வாழ்வினை நோக்கி, முதலாளித்துவ வர்க்கத்தின் மீதான வெற்றியை நோக்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கி, மூலதனத்தின் ஒடுக்குமுறையில் இருந்தும் ஏகாதிபத்திய யுத்தங்களில் இருந்தும் மனித குலத்தை விடுதலை பெறச் செய்வதை நோக்கி எங்கும் முன்னேற்ற நடை போடும் வர்க்கமாய் இருப்பதுமாகிய ஒரு புதிய வர்க்கத்தின் ஆட்சிக்கான புது யுகத்தை துவக்கி வைக்கும் நற்பேறு நமக்கு கிட்டியுள்ளது குறித்துப் பெருமை கொள்ள நமக்கு உரிமை உண்டு, நாம் பெருமை கொள்ளவும் செய்கிறோம். (லெனின் தேர்வுநூல் 12, பக்கம்- 47, 48)
விளக்கம்:- ஒரு புரட்சி எப்படி மற்றொரு புரட்சியாக வளர்கிறது என்பதற்கு உதாரணமாக ரஷ்யாவில் நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோசலிசப் புரட்சியும் சிறந்த உதாரணமாகும். இவ்வாறு ஒரு ஜனநாயக புரட்சியை சோசலிச புரட்சியாக வளர்த்த பெருமை ரஷ்யாவில் லெனின் தலைமையில் அமைந்த போல்ஷ்விக் கட்சிக்கே உரியது. போல்ஷ்விக் கட்சியானது ஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமூக அமைப்பை உருவாக்கும் நோக்கம் கொண்டே இயங்கியது. அதற்காகவே முதலாளித்துவ ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அது பாடுபட்டது. அதன் மூலம் ஒரு ஒரு புரட்சி மற்றொரு புரட்சியாக வளருவதற்குதிட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது. தானாகவே ஒரு புரட்சி மற்றொரு புரட்சியாக வளராது என்பதை ரஷ்ய போல்ஷ்விக்குகள் நிரூபித்தார் கள். ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட சோவியத்து அரசமைப்பானது அந்த நாட்டில் உள்ள மக்களுக்கு அதிகபட்சமான ஜனநாயக உரிமையை வழங்கியது. மேலும் முதலாளித்துவ ஜனநாயக உரிமை, அதாவது போலியான ஜனநாயக உரிமைகளை அது முற்றிலுமாக ஒழித்துக் கட்டியது.
சோவியத்து அரசமைப்பின் அடிப்படை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகும். இந்த சர்வாதிகாரமானது உண்மையில் பாட்டாளி வர்க்கத்திற்குஜனநாயகத்தை வழங்கக் கூடிய, பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகும். இது முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
இத்தகைய சோவியத் அரசமைப்பை உருவாக்கி வளர்க்கும் முயற்சியில் ரஷ்ய போல்ஷ்விக்குகள் பல பின்னடைவு களையும் சந்தித்தார்கள் மேலும் அவர்கள் பல தவறுகளையும் செய்தார்கள் என்று அந்த நாட்டில் உள்ள அழிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு வால் பிடித்த பிழைப்புவாதிகள், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்தவர்கள், மற்றும் கோட்டான்களும் காட்டேரிகளும் போல்ஷ்விக்குகள் மீது குற்றம் சுமத்தி வசைபாடினார்கள். எனினும் பல தவறுகளை போல்ஷ்விக்குகள் செய்தார்கள் என்றும் அந்த அந்தத் தவறுகளின் காரணமாக போல்ஷ்விக்குகள் பின்னடைவை சந்தித்தார்கள் என்றும் வெளிப்படையாக போல்ஷ்விக் கட்சியின் தலைவரான லெனின் ஏற்றுக்கொண்டார். ஒரு புதிய வகையான சோவியத் ஆட்சி அமைப்பை உருவாக்கி வளர்ப்பதில் நமக்கு பல சிரமங்கள் இருந்தது என்றும் அதைப் பற்றிய புரிதல்கள் நமக்கு இல்லை என்றும் இது ஒரு புதிய விஷயம் ஆகையால் இந்த அரசமைப்பை உருவாக்கி வளர்ப்பதில் நாம் பலதவறுகள் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் அவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு களைய முடியுமோ அவ்வளவுக் அவ்வளவு களைவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றார் லெனின். சோவியத் ஆட்சியை நாம் இப்பொழுது அமைத்து விட்டோம் எனினும் நமது பயணம் முடிந்து விடவில்லை, இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றார் லெனின்.
ஆகவே சோவியத் அமைப்பை வளர்ப்பதற்கும் அதை மேம்படுத்து வதற்கும் நாம் இடையறாது தொடர்ந்து பாடுபடுவோம் என்றார் லெனின். எனினும் இத்தகைய சோவியத் அமைப்பை ஒரு புது யுகத்தை நாம் தான் முதன் முதலில் துவக்கி வைத்திருக்கிறோம் என்றார் லெனின். முதலாளித்துவ நாடுகளில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களாய் இருக்கின்ற பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ அமைப்பை எதிர்த்துப் போராடி முதலாளி வர்க்கத்தை வீழ்த்தி வெற்றி பெற்று பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை உருவாக்குவதை நோக்கி முன்னேற வேண்டும் என்றார் லெனின். இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் மூலதனத்தின் ஒடுக்குமுறையும் ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்பு யுத்தங்களும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மூலதனத்தின் ஆதிக்கத்தையும் ஏகாதிபத்தியவாதி களின் ஆக்கிரமிப்பு யுத்தங்களையும் முடிவுக்கு கொண்டு வரக்கூடிய ஒரே வர்க்கம் பாட்டாளி வர்க்கமே, அத்தகைய பாட்டாளி வர்க்கமானது ரஷ்யாவில் ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி ஒரு புது யுகத்தை துவக்கி வைத்துள்ளது. அந்தப் புரட்சியின் தொடர்ச்சியாக இந்தியாவிலும் அத்தகைய ஒரு புரட்சியை நடத்துவதற்கு கம்யூனிஸ்டு களாகிய நாம் முன்வர வேண்டும் அதற்காக பாடுபட வேண்டும் அதுவே பாட்டாளி மக்களுக்கு நாம் செய்யும் கடமையாகும். ஆகவே நாம் இதுவரைசெய்ய தவறுகளையும் இப்போது செய்துகொண்டிருக்கும் தவறுகளையும் முதலில் களைந்திடவேண்டும். நாம் தவறே செய்யாத புனிதமானவர்கள் என்று கருதக்கூடாது. நம்மிடத்திலுள்ள தலைகணத்தை ஒழிக்கவேண்டும். மார்க்சிய ஆசான்களது போதனைகளின் அடிப்படையிலும் இதுவரை நடைபெற்ற புரட்சியிலிருந்தும் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்ட அனுபவங்களில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொண்டு கம்யூனிச அமைப்பை மேம்படுத்தவேண்டும். நமது லட்சியம் சோசலிசம், மற்றும் சோசலிச அரசு ஆகும். அதனை அடைவதற்கான நமது லட்சியப் பயணத்தின் போக்கில் சாதிய ஒடுக்குமுறை, தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை, பெண்களின் மீதான ஒடுக்குமுறை போன்ற ஜனநாயகத்துக்கு எதிரான ஒடுக்குமுறைகளை எதிர்த்து ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராட வேண்டும். ஆகவே நமது கடமையானது ஜனநாயக, சோசலிசப் புரட்சியாகும். ஜனநாயக சோசலிசப் புரட்சிகர இயக்கத்தை கட்டியமைத்து ரஷ்ய சோசலிசப் புரட்சியை தொடர்வதே நமது கடமையாகும்.
ஏகாதிபத்திய யுத்தங்களைப் பற்றிய பிரச்சனை, இன்று அனைத்து உலகின் மீதும் ஆதிக்கம் புரியும் நிதி மூலதனத்தின் சர்வதேச கொள்கையைப் பற்றிய பிரச்சனை - புதிய ஏகாதிபத்திய யுத்தங்களைத் தவிர்க்க முடியாதவாறு தோற்றுவிக்க செய்வதாகிய ஒரு கொள்கையைப் பற்றிய பிரச்சனை - தேசிய ஒடுக்குமுறையும் பலவீனமான பின்தங்கிய, சிறிய தேசிய இனங்களை விரல்விட்டு எண்ணி விடக் கூடிய ஒரு சில “முன்னோறிய” அரசுகள் கொள்ளையடித்தலையும் சூறையாடு தலையும் மென்னியை நெரித்தலையும் தவிர்க்க வொண்ணாத முறையில் அளவு கடந்து கடுமையாக்குவதாகிய ஒரு கொள்கையைப் பற்றிய பிரச்சனை 1914 முதல்லாய் உலகின் எல்லா நாடுகளிலும் இப்பிரச்சனை தான் கொள்கை மிகவும்அனைத்துக்குமான உயிர் நாடியாக இருந்துள்ளது. கோடானு கோடியான மக்களுக்கு இது ஜீவ மரணப் பிரச்சனையாகும். (1914- 18) ஆம் ஆண்டுகளின் யுத்தத்திலும் அதனுடன் சேர்க்கப்பட்டு இனியும் தொடர்ந்து நடைபெறும் “சிறு” யுத்தங்களிலும் கொல்லப்பட்ட ஒரு கோடி பேருடன் கூட முதலாளித்துவ வர்க்கம் தயாரித்து வருவதும் நம் கண்ணெதிரே முதலாளித்துவத்தில் இருந்து மூன்டெழுவதுமாகிய அடுத்த ஏகாதிபத்திய யுத்தத்தில் இரண்டு கோடி மக்கள் கொல்லப்பட போகிறார்களா என்கின்ற பிரச்சனையாகும் இது. (1914- 18 ல் முடமாக்கப்பட்ட 3 கோடி பேருடன் கூட) வரப்போகும் எதிர்கால யுத்தத்தில் முதலாளித்துவம் தொடர்ந்து இருந்து வருமாயின் இந்த யுத்தம் தவிர்க்க முடியாததே - ஆறு கோடி பேர் முடமாக்கப்படப் போகிறார்களா என்கிற பிரச்சனையாகும் இது. இந்தப் பிரச்சனையிலும் நமது அக்டோபர் புரட்சி உலக வரலாற்றிலே ஒரு புது யுகத்தின் துவக்கத்தை குறித்தது. “ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றிடுக” என்ற நமது கோஷத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடிகளும் இவ்வர்க்கத்தின் ஆமாம் சாமிகளும், சோசலிஸ்ட் புரட்சியாளர் களும்,மென்ஷ்விக்குகளும்உலகெங்கும் உள்ள குட்டிமுதலாளித்துவாதிகளும் (சோசலிஸ்ட்கள் என்பதாய்க் கூறிக் கொள்ளும்) ஜனநாயகவாதிகளும் ஏளனம் புரிந்தனர். ஆனால் அந்த கோஷம்தான் உண்மை என்பது மெய்ப்பிக்கப்பட்டது – கசப்பாகவும் நயமற்றதாகவும் அப்பட்டமாகவும் முரடாகவும் இருப்பினும், நுண்ணியம் வாய்ந்த பகட்டான தேசிய வெறி கொண்ட எண்ணிலடங்கா அமைதி வாதப் பொய்களைப் போலல்லாமல் அது மட்டும் தான் உண்மை அந்தப் பொய்கள் தகர்க்கப்பட்டுவருகின்றன. பிரேஸ்த் சமாதானம் (குறிப்பு – பிரேஸ்த் சமாதான உடன்படிக்கை சோவியத் ரஷ்யாவுக்கும் ஜெர்மன் கூட்டணி நாடுகளுக்கும் அதாவது ஜெர்மன், ஆஸ்திரோ-ஹங்கேரியா, பல்கேரியா, துருக்கி ஆகியநாடுகளுக்குஇடையே1918, மார்ச்3 ஆம் தேதி சோவியத் ரஷ்யாவுக்கும் மிகவும் கடுமையான நிபந்தனைகளின் கீழ்பிரேஸ்த்-லித்தோவ்ஸ்கில் செய்து கொள்ளப்பட்டது) அம்பலமாகிவிட்டது. பிரேஸ்த் சமாதானத்தை விடவும் மோசமான வெர்சேய் சமாதானத்தின் (குறிப்பு-வெர்சேய் சமாதான ஒப்பந்தம் 1914- 18 இல் நடைபெற்ற முதல் ஏகாதிபத்திய உலகப் போருக்கு முடிவு கட்டிய இந்த ஒப்பந்தம் ஒருபுறம் அமெரிக்க ஐக்கியநாடுகள், பிரிட்டீஷ் சாம்ராஜ்யம், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் இவற்றுக்கும் போரின்போது இவற்றுடன் கூட்டுக் கொண்ட அரசுகளுக்கும், மறுபுறம் ஜெர்மனிக்கும் இடையே 1919 ஜூன்28 இல் கையொப்பமிடப் பட்டது. வெர்சேய் சமாதான ஒப்பந்தம் முதலாளித்துவ உலகு வெற்றி பெற்ற நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதற்கு சட்ட அந்தஸ்து அளிப்பதாகவும் சோவியத் ரஷ்யாவை நசுக்குவதற்கும் உலகெங்கும் புரட்சிகர இயக்கத்தை தோற்கடிப்பதர்க்கும் ஏற்றவாறு சர்வதேச உறவுகளின் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்காகவும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே ஆகும் இது) உட்பொருளும் விளைவுகளும் நாள் தோறும் மேலும் அதிக உக்கிரத்துடன் அம்பலமா கிவருகின்றன. நேற்றைய யுத்தத்திற்கும் நெருங்கி வரும் நாளைய யுத்தத்துக்குமான காரணங்கள் குறித்து சிந்திக்கின்ற கோடான கோடியோரின் கண் முன்னால் முற்றும் தெளிவாகவும் அம்மணமாகவும் தவிர்க்கவொண்ணா தவாறும் காட்சியளிக்கும் கொடிய உண்மை என்னவெனில் ஏகாதிபத்திய யுத்தத்திடமிருந்தும் தவிர்க்க முடியாதபடி அதனை தோற்றுவிக்கும் ஏகாதிபத்திய மீரிடமிருந்தும் தப்ப இயலாது என்பது பழைய எழுத்திணக்கம் வழக்கில் இருக்குமாயின் இங்கே நான்"மீர்" என்னும் சொல்லை அதன் இரண்டு அர்த்தங்களையும் குறிக்கும் படி இரண்டு தரம் எழுதியிருப்பேன். போல்ஷ்விக்குப் போராட்டமும் போல்ஷ்விக்குப் புரட்சியும்இல்லையேல் இந்த நரகத்திலிருந்து தப்ப இயலாது என்பதுதான். (குறிப்பு- ரஷ்ய சொல்லான மீர் என்பதற்கு உலகம் சமாதானம் என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. பழைய எழுத்து இலக்கணத்தின்படி இச்சொல் இருவேறு எழுத்து அமைப்புகளில் எழுதப்பட்டது) லெனின் தேர்வுநூல்கள்12 பக்கம்-48, 49, 50)
விளக்கம்:-தற்போது உலகில் நடைபெறும் யுத்தங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் பின்புலத்தில் இருந்தே நடக்கின்றது. இது பற்றி லெனின் 100 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களை நிதிமூலதனம் ஆதிக்கம்செய்கிறது. இதுதான் உலகில் நடந்து கொண்டிருக்கும் மிகமிக முக்கியமான பிரச்சினையாகும் என்றார் லெனின். இது வரை வரலாற்றில் இரண்டு ஏகாதிபத்திய உலக யுத்தங்கள் நடந்துவிட்டது. ஆனாலும், யுத்தங்கள் உலகில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்பொழுதும் காசாவின் மீது யூதஇன வெறியர்கள் நடத்தும் யுத்தம், அதற்குப் பின்புலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது. அதைப் போலவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த யுத்தம் இதற்குப் பின்புலமும் அமெரிக்க ஏகாதிபத்தியமே இருக்கிறது. ஏகாதிபத்தியங்கள் தனது நிதிமூலதன செல்வாக்கின் காரணமாக உலகம் முழுவதும் இருக்கின்ற பின்தங்கிய நாடுகளையும் பின்தங்கிய தேசங்களையும் சுரண்டிக் கொண்டிருக் கிறது. அத்தகைய சுரண்டலுக்கு பின்தங்கிய நாட்டின் ஆட்சியாளர்கள் அடிபணிந்து அனுமதித்துவிட்டால் அங்கு யுத்தம் இல்லை. அதற்கு மாறாக பின்தங்கிய தேசங்களின் ஆட்சியாளர்கள் நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தால் அவர்கள் ஒருபோரை நடத்தி அந்த நாட்டையே அடிமைப்படுத்துவார்கள், உதாரணமாக சதாம் உசேனது ஈராக். ஆனால் முன்பு போல அடிமைப்படுத்திய நாட்டை நேரடியாக இவர்கள் ஆள்வதில்லை.மாறாக இவர்கள் ஒருபொம்மையை உருவாக்கி அந்த பொம்மையின் மூலமாகவே ஆட்சி செய்கிறார்கள். தற்போது உலகில் நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒவ்வொரு தேசங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதும் சாதாரணமான ஒரு விஷயமாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் முன்னேறிய நாடுகள் அல்லது முன்னேறிய அரசுகள் பின்தங்கிய அல்லது வளர்ந்து வரும் நாடுகளை கொள்ளை அடிப்பது சூறையாடுவது போன்றவற்றை மிகவும் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை எதிர்த்த போராட்டமானது உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களின் ஜீவமரணப் போராட்டமாகவே இருந்து வருகிறது. இது போன்ற யுத்தங்களற்ற சமாதான உலகத்தை படைப்பது என்பது ஒரு பெரிய போராட்டமே. ரத்தம்சிந்தாமல், போர்க்குணத்தோடு போராடாமல் இந்த யுத்தங்களை ஒழிக்கவோ சமாதானத்தை நிலைநாட்டவோ முடியவே முடியாது என்பதை லெனின் பல ஆண்டுகளுக்கு முன் நமக்கு எடுத்துரைதார். ஆனாலும் அவரது இந்த அறிவுரையை உலகில் உள்ள கம்யூனிஸ்டுகள் பின்பற்ற தவறினார்கள் அதன் காரணமாக இரண்டாம் ஏகாதிபத்திய உலகப் போருக்கு பின் நடைபெற்ற யுத்தங்களில் அந்த ஏகாதிபத்திய உலகயுத்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் மிக அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் இந்தப் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும், அதற்கு ஏகாதிபத்தியங்கள் ஒழிக்கப்பட வேண்டும். முதல் ஏகாதிபத்திய உலக யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்தியவாதிகள் அதற்கு தயார் செய்து கொண்டிருக்கும் பொழுது கம்யூனிஸ்ட் அகிலமானது இந்த யுத்தத்துக்கு எதிராக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் போராட வேண்டும் என்றும் அதையும் மீறி யுத்தம் வந்துவிட்டால் உள்நாட்டு யுத்தமாகஅதை மாற்றி யுத்தத்தில் ஈடுபடும் சொந்தநாட்டு ஆட்சியாளர்களை வீழ்த்தி தொழிலாளி வர்க்கத்தின் அரசை உருவாக்க வேண்டும் என்று ரஷ்ய கம்யூனிஸ்டுகள் சொன்னார்கள். அதனைப் பின்பற்றிய அவர்கள் அவர்களது நாட்டில் புரட்சி நடத்தி ஒருதொழிலாளி வர்க்க ஆட்சியை உருவாக்கினார்கள். ரஷ்ய போல்ஷ்விக்குகளின் இந்தக் கொள்கையை அன்றைய காலத்தில் திருத்தல்வாதிகளும் சந்தர்ப்பவாதி களும் குட்டிமுதலாளித்துவ வாதிகளும் கேலிசெய்தார்கள். ஆனால் ரஷ்ய கம்யூனிஸ்களாகிய போல்ஷ்விக்கு களின் கொள்கைதான் உண்மையானது சரியானது என்று நிரூபணம் ஆனது. அதேபோலவே இரண்டாம் உலக யுத்த காலத்தில், யுத்தத்துக்கு காரணமான பாசிஸ்டுகளான, ஜெர்மன், இத்தாலி, ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி ஜோசப்ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியானது பாசிஸ்டுகளை வீழ்த்தி உலகையே பாதுகாத்தது. இதற்கெல்லாம் காரணம், லெனினும் சரி, ஸ்டாலினும் சரி ஏகாதிபத்தியம் பற்றி சரியான கண்ணோட்டம் கொண்டிருந்ததால் ஏகாதிபத்தியத்தை அவர்கள் வீழ்த்தினார்கள். ஆனால் அவர்களுக்கு பிறகு வந்த குருச்சேவும், குருச்சேவை பின்பற்றிய சர்வதேச கம்யூனிஸ்டுகளும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தை கைவிட்டார்கள். சமாதான வழியிலே ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும் என்ற கொள்கை கடைபிடித்தார்கள். அதன் காரணமாக ஏகாதிபத்தியவாதிகள் அவர்களுக்கு எந்த விதமான எதிர்ப்பும் இல்லாத நிலையில் தங்களுடைய பொருளாதார, அரசியல், இராணுவ பலத்தை பெருக்கிக் கொண்டார்கள். அந்த பலத்தின் அடிப்படையில் இன்று உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார் கள். அன்று சோவியத் ரஷ்யாவுக்கும் ஜெர்மன் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம்ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தம் சோவியத்து ரஷ்யாவுக்கு பல கடுமையான நிபந்தனைகளை விதித்து சோவியத் ரஷ்யாவை அடிமைப்படுத்து வதற்கான ஒப்பந்தமாகவே அமைந்தது. ஆனாலும் அந்த ஒப்பந்தத்தை லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. ஏனெனில் அப்பொழுது சோவியத் ரஷ்யா பொருளாதாரம் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பலவீனமாக இருந்தது, இந்த பலவீனத்தைப் போக்கி சோவியத் ரஷ்யா தனது பலத்தை பெருக்கிக் கொள்ள முயற்சி செய்வதற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனாலும் இது ஒரு அநியாயமான ஒப்பந்தமே. இதற்கு பின்பு சோவியத் ரஷ்யா தனது பலத்தை பெருக்கிக் கொண்டது அதன் காரணமாக இந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. இது போன்ற ஒப்பந்தங்களை போட்டு ஏகாதிபத்தியவாதிகள் பிற நாட்டு அரசுகளை அடிமைப்படுத்தி ஒடுக்கும் வேலையை இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு உதாரணம் தான் வெர்சேய் ஒப்பந்தம் ஆகும் இப்பொழுதும் இந்தியா போன்ற பின்தங்கிய ஏழை நாடுகளில் தொழில் துவங்கவும் மற்றும் பல விஷயங் களுக்காகவும் ஏகாதிபத்தியவாதிகள் இந்திய அரசோடு ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தங்கள் பெரும்பாலும் சமத்துவ அடிப்படையில் போடப்படுவதில்லை. இந்திய அரசை ,அதன் மீது கடுமையான நிபந்தனைகள் விதித்தே ஒப்பந்தங்கள் போடப்படுகிறது. அதன் மூலம் இந்திய ஆட்சியாளர்களையும் இந்திய மக்களையும் இவர்கள் ஒடுக்குகிறார்கள். ஆனாலும், இந்திய ஆட்சியாளர்கள் இந்த ஏகாதிபத்தியவாதிகளிடம் சரணடைந்து கொத்தடிமைகளாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அன்று ஏகாதிபத்தியவாதிகள் வெர்சேய் சமாதான ஒப்பந்தம் போட்டு முதலாளித்துவ உலகை வெற்றி பெற்ற நாடுகள் பங்கு போட்டுக் கொள்வதற்காகவும் சோவியத் ரஷ்யாவை நசுக்குவதற்காகவும் உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்க இயக்கத்தை வளர விடாமல் தடுத்து சீரழிப்பதற்காகவும் இந்த ஒப்பந்தங் களை போட்டனர். அதேபோலவே இப்பொழுதும் இந்தியா போன்ற நாடுகளில் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களை கொடூரமாக சுரண்டுவதற் கும் அடக்கி ஆள்வதற்கும் இந்த ஒப்பந்தங்களை இந்திய ஆட்சியாளர்கள் மீது திணிக்கின்றனர். இதன் காரணமாகவே இங்கு தொழிலாளர் களின் விடுதலைக்கான போராட்டம் நடக்கும் அதே வேளையில் தேசிய இனங்களில் உரிமைக்கான போராட்டங் களும் நடக்கின்றன. ஆனாலும் இந்தப் போராட்டங்கள் அனைத்தும் மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படாததன் காரணமாக அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. மாறாக ஏகாதிபத்திய வாதிகள் மற்றும் அவர்களின் அடிவருடிகள் இவர்களின் பலமே பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பலம் பெற்றுக் கொண்டே போகிறது. இத்தகைய பலத்தை ஏகாதிபத்திய வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும் அடைந்து விட்டதால், பலமான இந்த எதிரியை எதிர்த்து யாராலும் போராட முடியாது என்ற அவநம்பிக்கையை இங்குள்ள பிற்போக்கு அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வரலாறு உழைக்கும் மக்களால் எழுதப்படுகிறது, ஏகாதிபத்தியவாதி களால் அவர்களது அழிவை தடுக்க முடியாது. கட்டாயமாக உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் ஏகாதிபத்தியவாதிகள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சுரண்டல் ராஜ்யம் அழிக்கப்படும். அதற்கு காலங்கள் ஆகலாம். ஆனால் நிச்சயமாக இது நடக்கும். உழைக்கும் மக்கள் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். தேன்மொழி
இலக்கு 74 இணைய இதழ் இந்த இணைப்பை அழுத்தி பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் தோழர்களே