32) சமூகம் பற்றி மார்க்சியத் தத்துவம் என்ன கூறுகிறது?
சமூகம் பற்றிய மார்க்சியத் தத்துவம் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று அழைக்கப்படுகிறது. இக்கண்ணோட்டம் விஞ்ஞானத் தன்மை பெற்றதாகும். சமூகம் பற்றிய கண்ணோட்டத்தில் மார்க்சுக்கு முன்பான கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டுமே கருத்துமுதல்வாத தன்மையினதாகவே இருந்தது.
33) சமூகத்தைக் கருத்துமுதல்வாத கண்ணோட்டம் எப்படிப் பார்த்தது?
சமூகப் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தின் குறைபாடாக இரண்டை மார்க்ஸ் குறிப்பிடுகிறது. முதல்குறை என்னவென்றால், அது மனிதர்களின் சித்தாந்தத்தின் நோக்கங்களை மட்டுமே ஆராய்கிறது. இந்த நோக்கங்கள் தோன்றுவதற்கான சமூகப் பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டாவதாக மக்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கவேயில்லை. மக்களின் செயற்பாடுகளை நிர்ணயிப்பது எது? சமூகத்தில் கருத்துகளும் விருப்பங்களும் மோதுவதற்கான அடிப்படைக் காரணங்கள் எது? என்பதைப் பழைய வரலாற்றுக் கண்ணோட்டங்கள் அறிந்திருக்கவில்லை.
34) சமூகத்தை மார்க்சிய பொருள்முதல்வாதம் எப்படிப் பார்க்கிறது.
இயற்கையின் விதிகளைப் போன்றே சமூகமும் விதிகளின்படி செயல்படுகிறது, இந்த விதி மனிதனுடைய உணர்வுகளைச் சார்ந்திராமல் புறநிலையாக இருக்கிறது. அந்தப் புறநிலை உற்பத்தி முறையில் தோன்றுகிற உற்பத்தி உறவுகளில் அடங்கியிருக்கிறது. புறநிலை விதி மனித நடவடிக்கை மூலம் நடைபெறுகிறது. இதனை மார்க்சியம் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்ற கோட்பாட்டால் விவரிக்கிறது.
35) அடித்தளமும் மேற்கட்டமைப்பும் என்றால் என்ன?
குறிப்பிட்ட சமூகம் ஒர் உற்பத்தி முறையைக் கொண்டுள்ளது. அந்த உற்பத்தி முறையில் உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியன அடங்கியிருக்கிறது. இந்தப் பொருளாதார அமைப்பே அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது.
தத்துவம், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்பத்தோன்றும் மேற்கட்டமைப்பாகும். அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடன் ஒன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தமது தாக்கத்தைச் செலுத்துகிறது. இந்தத் தாக்கம் என்பது சமூக வளர்ச்சியை விரைவுடுத்தும் அல்லது தாமதப்படுத்தும். இதனையே வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது, சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை என்று கூறுகிறது.
36) சமூக வாழ்நிலை என்றால் என்ன?
உற்பத்தி நடிவடிக்கையின் போது ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளே சமூக வாழ்நிலை ஆகும். மனிதர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக உற்பத்தியில் ஈடுபடும்போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பொருளாயத உறவுகளே உற்பத்தி உறவுகள் எனப்படும். இந்த உறவுகளே சமூக வாழ்நிலையைத் தோற்றுவிக்கிறது. இந்த வாழ்நிலை மனிதர்களுடைய சித்தங்களில் இருந்து தனித்துப் புறநிலையாக இருக்கிறது.
37) சமூக உணர்வுநிலை என்றால் என்ன?
மனிதர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக உற்பத்தியில் ஈடுபடும் போது ஏற்படுகிற உறவுகள், சமூக வாழ்நிலையாகும். இந்தச் சமூக வாழ்நிலைதான் அவர்களது சமூகஉணர்வுநிலையைத் தோற்றுவிக்கிறது. சமூக உணர்வுநிலை என்பது நம்பிக்கைகள், கருத்துக்கள், சிந்தனைகள், தத்துவங்கள் போன்றவை ஆகும். இவை வாழ்நிலையைச் சார்ந்து நிற்கிறது.
38) அடித்தளம் என்று கூறப்படுவதைச் சற்று விரிவாக விளக்கவும்?
சமூக வாழ்வின் அடிப்படை பொருளுற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. இந்தப் பொருள் உற்பத்திமுறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற இவ்விரண்டையும் உட்கொண்டுள்ளது. இந்த உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது.
39) உற்பத்தி சக்திகள் (Productive Forces) என்றால் என்ன?
உற்பத்தி நிகழ்விற்குத் தேவைப்படுகிற உழைப்பின் குறிப்பொருள் (Objects of Labour), உழைப்புக் கருவிகள் (Instruments of Labour), உழைப்பு (Labour) ஆகிய மூன்றையும் உற்பத்தி சக்திகள் என்றழைக்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணமாகிறது.
40) உழைப்பின் குறிப்பொருள் என்றால் என்ன?
உற்பத்தியைத் தொடங்குவதற்கும், விளைபொருட்களைச் செய்வதற்கும் தேவைப்படும் பொருள் உழைப்பின் குறிப்பொருள் ஆகும். அதாவது எந்தப் பொருட்களின் மீது உழைப்பாளி, தமது உழைப்பை செலுத்துகிறாரோ, அந்தப் பொருள் உழைப்பின் குறிப்பொருள். உழைப்பின் குறிப்பொருள் இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையில் நேரடியாகக் கிடைப்பது, அவை பூமியிலிருந்து எடுக்கும் கனிமவளங்கள், நீரிலிருந்து கிடைக்கும் மீன்கள், வனப்பொருட்கள் மற்றும் நிலம் போன்றவை. சாகுபடிக்கு ஏற்ற நிலமே விவசாயத்திற்குரிய உழைப்பின் குறிப்பொருளாகும். மற்றது, கச்சாப்பொருட்கள். நூற்பாலைக்குத்தேவையான பருத்தி, இரும்பாலான பொருளுற்பத்திக்கு இரும்பு கச்சாப்பொருள் ஆகும்.
41) உழைப்புக் கருவிகள் என்றால் என்ன?
உற்பத்தியின் போது மனிதன் பயன்படுத்தும் கருவிகளே உழைப்புக் கருவிகள். ஆதிகாலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில், அம்பு போன்றவையும், இன்றைய காலத்தில் இயந்திரம், சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள், தொழில்நுட்பம் போன்றவையும் ஆகும். இத்தகைய உழைப்புக் கருவிகளோடு, தொழிற்சாலை, மின்சாரம், ரயில்வே, கால்வாய், கிடங்கு போன்ற சாதனங்களும் சேர்ந்து உழைப்புக் கருவிகள் ஆகின்றன.
42) உழைப்பு என்றால் என்ன?
உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து கிடைக்கும் பொருட்களை, மனிதத் தேவைகளை நிறைவு செய்ய முற்படும் நடவடிக்கையாகும்.
43) உற்பத்தி உறவுகள் (Relations of Production) என்றால் என்ன?
பொருளாயத நலன்களின் அடிப்படையில் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை, நுகர்வு ஆகியவற்றின் போது மனிதர்களுக்கு இடையே தோன்றுகிற பொருளாதார உறவுகளே உற்பத்தி உறவாகும்.
44) உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான தொடர்பு எப்படிப்பட்டது?
உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவைகளை உள்ளடக்கியவை உற்பத்தி முறையாகும். இவற்றைத் தனித்தனியாகப் பிரித்திட முடியாது. அதே நேரத்தில் இவை இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்விரண்டில் உற்பத்தி சக்திகள் முதலில் வளர்ச்சி அடைகிறது, அதன்பிறகு உற்பத்தி உறவில் மாற்றம் பெறுகிறது. உற்பத்தி சக்திகளின் இயல்புக்குப் பொருத்தமாக, உற்பத்தி உறவுகள் அமைந்திருப்பது, சமூக வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாகும். ஆனால் இந்தப் பொருத்தம்தற்காலிகமானதே. உற்பத்தி வளர்ச்சியின் தொடக்கக் கட்டத்தில் மட்டுமே இசைவான முறையில் உற்பத்தி உறவுகள் நிலவுகிறது. வளர்ச்சி ஏற்பட்டு முதிரும்போது முரணும் முற்றுகிறது.
45) உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண் என்ன விளைவை ஏற்படுத்துகிறது?
உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பழைய உற்பத்தி உறவோடு முரண் பெருகுகிறது. உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் விரைவாக வளர்ச்சியடைகிறது, புதியதாக வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்தியோடு பழைய உற்பத்தி உறவுகள் பொருந்தாமல் முரண்படுகிறது. பழைய உற்பத்தி உறவுகள், புதிய உற்பத்தி சக்தியை தடுக்க முற்படுகிறது. புதிய உற்பத்தி உறவுகள் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.
சமூக உற்பத்தி முறையின் முரண்பாடு, பழைய உற்பத்தி முறையை மறுதலித்து, புதிய உற்பத்தி முறைக்கு மாறுகிறது. புதிய உற்பத்தி சக்திகளுக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகள், பழைய அமைப்பின் உள்ளிருந்தே தோன்றுகிறது. உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒர் உற்பத்தி முறையிலிருந்து, மற்றொரு உற்பத்தி முறைக்கு மாற்றம் அடைவதில் அடங்கியிருக்கிறது. அதாவது கீழ்நிலை உற்பத்திமுறையில் இருந்து, மேல்நிலை உற்பத்திமுறைக்குச் செல்வதாகும். சமூக மாற்றம் என்கிற சமூகப் புரட்சி இதில் தான் அடங்கியிருப்பதாக மார்க்சியம் கூறுகிறது.
46) மேற்கட்டமைப்பு என்று கூறப்படுவதைச் சற்று விரிவாக விளக்கவும்?
அடித்தளத்தளமே மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது. ஆனால் மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் ஏற்கிறது. மேற்கட்டமைப்பு பல இனங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்கிறது. இரண்டாம் நிலையானாலும்சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும். மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்குக் கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது. இந்தச் சார்பான தாக்கத்தை மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருப்பதை இறுதியில் நிருபிக்கிறது.47) அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையேயான தொடர்பை பரஸ்பர வினையாகக் கொள்ளலாமா?
அது பெரும் தவறாகும். அப்படிப் பரஸ்பர வினைபுரிந்தால் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற சொற்களை மார்க்ஸ் பயன்படுத்தி இருக்க மாட்டார். அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானித்தால் அது பொருள்முதல்வாதம். மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானித்தால் அது கருத்துமுதல்வாதம். வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது என்பது பொருள்முதல்வாதம், சிந்தனையே வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது என்பது கருததுமுதல்வாதம். இதனை ஏற்றுப் புரிந்து கொள்ளாமல், அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் சில நேரங்களில் மேற்கட்டமைப்பும் அடித்தளத்தைத் தீர்மானிக்கும், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது, அதே போல் மேற்கட்டமைப்பு அடித்தளத்தை நிர்ணயிக்கிறது, அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் நிர்ணயிக்கிறது என்றெல்லாம் கூறுவது கருத்துமுதல்வாதக் கண்ணோட்ட வயப்பட்டதேயாகும்.
அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது-நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது இதற்கு மேலே செல்வது மார்க்சியமாகாது.
48) மேற்கட்டமைப்பில் எவைகள் அடங்குகின்றன?
அடித்தளமும் மேற்கட்டமைப்பும் தம்முள் நெருக்கமான இணைப்பைப் பெற்றவை. அடித்தளமே நிர்ணயகரமான தன்மை பெற்றது, அது மேற்கட்டமைப்புக்குக் காரணமாகிறது. மொத்தத்தில் மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது. பொருத்தமாக என்று சொன்னவுடன் மேற்கட்டமைப்பில் ஒரேவித சிந்தனை ஏற்படுவதாகப் புரிந்து கொள்ளக்கூடாது. வர்க்க சார்பாகவே சிந்தனை எழுகிறது. அடித்தளத்தில் காணப்படும் முரண் வர்க்க பிரிவுகளின் சிந்தனையாக வெளிப்படுகிறது. அரசியல், மதம், பண்பாடு, கலைகள் போன்ற கருத்துநிலைகள் மேற்கட்டமைப்பில் அமைகிறது. தொடரும்.......