சாதி ஒழிப்பு பேசுவோர் பற்றி

 தலித் விடுதலை சாதி ஒழிப்பு பற்றி பேசுவோர் இதுவரை செய்தவற்றை தொகுப்பாக காணும் பொழுது அவை எந்த வர்க்க நலனில் உள்ளது?

உண்மையாலுமே சாதி ஒழிப்பு சாத்தியமா?மேலும் நம்மிடையே உள்ள போக்கை பற்றியும் ஆராய்வும் என் நூலில் உள்ளன.(சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில்) தேவைபடுவோர் வாசிக்க தோழர்களே.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிப் பயன் இல்லை என்று சொல்லிக் கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் காங்கிரசுடன் சேரமறுத்து எதிர்த்துக் கொண்டிருந்த அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை ஆதரவுடன் இருந்த அரசியல் சட்ட நகல் தயாரிப்புக் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.) பிரிட்டிஷ் காலனிய இந்தியா ஒரு அரைக்காலனியாக மாற்றப்படுவதற்கு ஆதரவு தந்தார்.

நேரு பிரதமராக இருந்தபொழுது மத்திய அமைச்சரவையில் அம்பேத்கர் சேர்ந்துக்கொண்டார். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களிடம் நாடாளுமன்ற 


முறை மட்டுமே, அதிகாரப்பகிர்வு மற்றும் சாதி ஒழிப்புக்கான ஒரேவழி என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. அதிகாரத்தை அடைவதற்கு அவர்கள் தேர்தல் நடைமுறையை நம்பவேண்டிய நிலை ஏற்பட்டது. அரசியலில் நீடிப்பதற்காக, அம்பேத்கர் வழிவந்தவர்கள், ஏதாவது ஒரு அரசியல் கட்சியோடு கூட்டுச் சேர்வது நிரந்தரமாகிவிட்டது. முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் நடைமுறை இங்கேயும் நிலைகொண்டது. இவ்வாறு தலித் இயக்கம் ஆளும் வர்க்கத்தின் நிரந்தரத் தொங்குசதையாக மாறியது. சாதியத்திற்கு, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே அடித்தளமாக விளங்குகிறது. அடித்தளத்தை அசைக்காமலே, அதன் மேற்கட்டுமானத்தை- சாதி முறையை ஒழிக்கமுடியும் என்பது அம்பேத்கரின் நிலைபாடாக இருந்தது. சாதிய ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதினார்.

அன்றும் இன்றும் இதற்கு மாற்றான வடிவம் இச்சமூகத்தை மாற்றி அமைபதுதான், இன்று நமது சமூகத்தில் பேசப்படும் பல்வேறு விதமான சாதிய அடையாள அரசியல் சிந்தனை முறைக்கு வேறாக அன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் போராட்ட வடிவங்கள் இருந்தன. 1930-40 களில், நாட்டில் நடந்த நிலஉடைமையாளர்களுக்கு எதிரான போராட்டங்களில் சாதியால் தாழ்த்தப்பட்டோரும் ஏனைய பல்வேறு சாதியில் இருந்த உழைக்கும் மக்களும் ஒன்று திரட்டப்பட்டு விவசாய சங்கங்களில் ஈடுபட்ட போராட்டங்கள். தேபாக இயக்கம், தெலுங்கானா இயக்கம், கீழ் தஞ்சை போராட்டங்கள் பொதுவுடைமைக் கட்சியின் கீழ் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டதை வரலாற்றுப் பக்கங்கள் நமக்கு கூறுகின்றன. சாதி வேற்றுமைகளும் தீண்டாமையும் ஆழமாக வேரூன்றி இருந்த கிராம நிலவுடைமைச் சமூக அமைப்பில் உள்ளூர் நிலப்பிரப்புகளை எதிர்த்தும் அரசாங்கத்தை எதிர்த்தும் வர்க்க போராட்டம் நடைபெற்றன. இப்போராட்டங்களின் மூலம் மக்களிடையே இருந்த தீண்டாமை கொடுமைகளையும் வேறுபாடுகளையும் எதிர்த்துப் பல போராட்டங்களும் மேற்கொள்ளப் பட்டன. இத்தகைய போராட்டங்களின் ஊடே சாதியால் தாழ்த்தப்பட்டோர் சமூக, அரசியல், பொருளாதாரப் போராட்டங்களில் ஈர்க்கப்பட்டனர். ஏனைய சாதிகளோடு ஐக்கிய அம்சங்களை கண்டுபிடிக்க முடிந்தது. அன்றைய கம்யூனிஸ்டுகள் சாதி கடந்து உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதில் போராட்ட களத்தில் முன்னணியில் திகழ்ந்தனர். இன்று அவர்கள் அந்த பணியை விட பாராளுமன்ற மாயையில் மூழ்கிவிட்டனர் மற்ற புரட்சி பேசும் குழுக்கள் இங்கே பெரிய சாதனைபடைகும் அளவில் இல்லாவிட்டாலும் அவற்றிலும் முழுதிறனுடன் செயல்பாடு குறைவே.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசி, வர்ண சிரம தர்மத்தை ஆதரித்த காந்தியாரும்; வர்ண சிரம தர்மத்தை எதிர்த்தும், சாதி ஒழிப்புக்கு, மதம் கடவுள், பார்ப்பனன் ஆகியவற்றை ஒழிக்கவேண்டும் என்று சொன்ன பெரியாரும்; வர்ண சிரம தர்மத்தை எதிர்த்து, சாதி ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதிய அம்பேத்கரும், இம்மூவரும் வெவ்வேறு நிலைபாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில், சாதியத்திற்கு அடித்தளமான நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்தாமலே மேற்கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் நடத்தியதில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர்.

ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அம்பேத்கர் உரிமைக் கொண்டாடினாலும் அவர், தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், மற்றும் தொழிலாளி வர்க்கம் ஆகியோர் மீதான சுரண்டலுக்கு அடிப்படையாக இருந்த காரணிகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கிய இயக்கத்தை வழி நடத்தவில்லை. தாழ்த்தப்பட்டோரில் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவுள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் அடிப்படைக் கோரிக்கையான "உழுபவருக்கு நிலம் சொந்தம்" என்கிற கோரிக்கையை எழுப்பவில்லை. தாழ்த்தப்பட்டோரில் புதிதாகத் தோன்றி உருவாகி கொண்டிருந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்க கூடிய, தனித்தொகுதி ஒதுக்கீடு, அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீடு, உதவித் தொகை கோருதல் போன்ற கோரிக்கைகள் (இக்கோரிக்கைகள் ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பயன்படும் என்று சொன்னாலும் கூட) மட்டுமே எழுப்பப்பட்டன. அவை தாழ்த்தப்பட்ட சாதிகளிலுள்ள நடுத்தர வர்க்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை திடப்படுத்தக் கூடியவைதான். அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நடைமுறையை வைத்துப்பார்க்கும் போது, அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் உருவாகி வந்த நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாகத்தான் இருந்தார் என்பது தெளிவாகிறது. அம்பேத்கரின் வழிவந்தவர்களில் முக்கியமானவரான கெய்க்வாட், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, நிலப்பகிர்வுக் கோரிக்கையே முக்கியமானது என்று எடுத்துக்கொண்டு போராடினார். பெருந்திரளான தாழ்த்தப்பட்ட மக்களை இந்தப் போராட்டம் கவ்விப்பிடித்துக் கவர்ந்தாலும், மற்ற 'தலித்' தலைவர்களின் பார்வை வேறுவிதமாக இருந்தது.இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் வழிப்பட்டது என்று கூறி,அவர்கள் கெய்க்வாட்டின் போராட்டத்தினை ஏற்கவில்லை. அம்பேத்கரின் செயல்திட்டத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு இடமில்லை என்றும், அறிவித்தார்கள். அரசியல் சட்டப்படியான ஆட்சியில், பொதுமக்களின் போராட்டம் என்பது அராஜகவழி. எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதற்கு இடமளிக்க கூடாது என்ற அம்பேத்கரின் கருத்தை அவர்கள் உயர்த்திப்பிடித்தார்கள்.

நிலப்பிரச்சினை முக்கியமானது என்றால், சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். என்று அவர்கள் வாதிட்டனர். இவ்வாறு, அம்பேத்கர், வழிவந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிலப்பகிர்வுக்கான போராட்டங்களை ஏற்க மறுத்துவிட்டார்கள். தலித் இயக்கத்தினர் தற்போது நிலவும் பாராளுமன்ற முறையின் மூலம், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசதிகார அமைப்புகளில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன், ஏதாவது ஒரு ஆளும்வர்க்க அரசியல்கட்சிக் கூட்டணியில் சேர்வது நடைமுறைப் போக்காக ஆகிவிட்டது. இத்தகைய நிலைமைகளில் தலித் அமைப்புகள்-சாதிச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதிஒழிப்பு என்பனவற்றை முன்னிலைப் படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆக அன்று அம்பேத்கார் தொடங்கி வைத்த சீர்திருத்தமுறையிலான தீர்வைதான் இன்றைய தலித்திய அமைப்புகளும் தன்னார்வக் குழுக்களும் பின்பற்றுகின்றனர்.

அரசின் பணியான எல்லோருக்கும் எல்லாம் செய்யாமல் அதிகாரம் படைத்த சிறுபான்மையினருக்கானவையாக இருக்கும் பொழுது அவர்களின் தேவையிலிருந்தே இன்றை அரசாட்ச்சி நடைபெறுகிறது என்பத்னை கவனத்தில் கொள்க.

சாதி ரீதியாக கொடூரமான ஒடுக்குமுறைகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் காரணமான சமூக அமைப்பை கட்டிக் காக்கும் அரசமைப்பை பற்றி கேள்வி கேட்காமல் அதன் அங்கமான பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதை தீர்வாக முன்னிருத்தும் பொழுதே இவர்கள் நோக்கம் சமூக மாற்றமில்லை; இப்போது உள்ள அமைப்புமுறைக்குள்ளேயே இடம் தேடி வாழ்தல்தான் அதாவது இந்த தீங்குகளை, கொடூரங்களை சகித்துக் கொண்டு வாழ்தலே என்பதாகிறது. வர்க்கமாக திரள வேண்டிய தலித் மக்களை சாதியாக ஒன்று திரட்ட சாதி கட்சிகளும் தன்னார்வ குழுக்களும் முயன்றுக் கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக உழைக்கும் மக்கள் பல்வேறு சாதி பிரிவினைகளில் பிரிந்துக் கிடக்கின்றனர். உழைக்கும் ஏழை எளிய மக்கள் பல்வேறு சாதிகளில் உள்ளனர் அவர்கள் வர்க்கமாக ஒன்றிணையாமல் இருக்க இவர்கள் சாதியாக பிளவுப்படுத்துகின்றனர்.

தலித்துகளின் காப்பாளர்களாக வலம் வரும் கட்சிகள் தினம் தினம் தலித்துகள் படும் அவலங்களை பற்றி துளியும் அக்கறை இன்றி தனது ஓட்டரசியலை மையமாகக் கொண்டே செயல்படுகின்றன.

இன்று தலித் மக்கள் படும் துன்ப துயரங்களை பேச பலர் உள்ளனர். ஆனால் அவர்களின் இன்னல்களுக்கு தீர்வை நோக்கி தலித் அரசியல்வாதிகளோ அல்லது தன்னார்வக குழுக்களோ இல்லை எனலாம். இதனை சில கடந்தகால நிகழ்வுகளோடு பொறுத்தி பார்ப்போம்.

கீழ்வெண்மணியிலாகட்டும், தருமபுரி, வடஆற்காடு பகுதியில் அன்று சாதி தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித் மற்றும் பிறசாதி உழைக்கும் ஏழை எளிய மக்களை ஒன்றிணைத்து அன்றைய புரட்சியை நேசித்த கம்யூனிஸ்ட்டுகள் போராடினர் அவர்கள் அன்று சாதித்தும் காட்டினர். 

இன்று புரட்சிகர கட்சி எதுவும் இல்லாத நிலையில் ஏகாதிபத்திய எதிர்புரட்சிகர சக்திகள் மேலோங்கியுள்ள நிலையில் அவர்களின் வெற்றிடத்தில் தோன்றிய பல்வேறு அமைப்புகள் குறிப்பாக சமூகத்தில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சாதி மக்களை ஒரு பிரிவினர் “தலித்’ என்ற பெயரில் அணிதிரள்வது முற்போக்கானது, சமூகவிடுதலைக்கு அவசியமானது, “உயர்சாதியை எதிர்க்க உதவுகின்றது’’ எனப் பலவாராக தலித்தியவாதிகள் குறிப்பிடுகிறார்கள்.

தலித்துகள் தம் அடிமை நிலையிலிருந்து மீள்வதையையே தலித் விடுதலை என்கிறோம். அதற்கான அரசியலை தலித் அரசியல் என்று குறிப்பிடுகின்றோம். இங்குள்ள ஒடுக்கு முறையில் இருந்து பொருளாதார, அரசியல், சமூக பண்பாட்டுத் தளங்களிலிருந்து விடுதலைப் பெறுவதையே சமூக விடுதலை என்கிறோம். அதாவது இங்கு தலித்துகள் மட்டுமல்லாது சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்களும் ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த சமூகத்தில் இருந்து விடுதலை பெறுவதே சமூக விடுதலை என்கிறோம். தலித் விடுதலையை சமூக விடுதலையிலிருந்து பிரித்து தனித்து துண்டித்து காணும் போக்கானது சரியானது அல்ல. நாம் வாழும் சமூக அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை முற்றாக மாற்றி அமைக்காமலேயே தலித்துகளுக்கு தனியான விடுதலை சாத்தியம் என்று இந்த பிற்போக்குத் தனமானது போக்கு கூறுகின்றது.

வர்க்க ரீதியாக மக்கள் சுரண்டப்பட்டு கொண்டுள்ளபோது இந்த சுரண்டலுக்கான அடித்தளத்தை முற்றாக மாற்றாமல், அரசு அதிகாரத்தையும் உற்பத்தி முறையையும் அவைகள் மீதான கருத்துருவாக்கத்தையும் பற்றி பேசாமல் தலித் விடுதலை என்பது கானல் நீரே. இன்றைய சமூக உற்பத்திமுறையை அதாவது ஏகாதிபத்திய நலன்களுக்கான இந்நாட்டு பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்கு உகந்த முறையில் அரசு அதிகாரம் கோலோச்சும் பொழுது. அதற்கு எதிராக போராடாமல் அதற்குள்ளேயே சில சீர்திருத்தங்கள் மூலம் விடுதலை என்பது கற்பனையானதே. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், ஏழை எளிய மக்கள், தலித் மக்கள் ஒன்று திரண்டு போராடாமல் கிளர்ந்தெழாமல் எவ்வகையான புரட்சியும் விடுதலையும் சாத்தியம் அல்ல.

சாதிகளைக் கடந்து அனைவரும் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து போராட வேண்டும் இதற்கான ஒற்றுமை கட்டமைக்கப்பட்டாக வேண்டியுள்ளது. தலித் மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சாதியினர் என்பது சரி. சமூகப் புரட்சி என்பது சாதிய ஒழிப்பை உள்ளடக்கியதே தவிர, அது ஒன்றை மட்டும் கொண்டதல்ல. உற்பத்திமுறை மாற்றம், அரசு அதிகாத்தைக் கைப்பற்றுதல் என பல தளங்களில் இயங்கி சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு கூறுகளோடு நெருங்கியதாகும். இங்குள்ள சூழலில் பாட்டாளி வர்க்கத்திற்கு நாம் இதற்கு முன்னர் கொடுத்த விளக்கத்தோடு இதையையும் இணைந்து காணும் பொழுது; பாட்டாளி வர்க்கத்தில் தலித் மக்கள் பெருந்திரளாக உள்ளனரே தவிர, தலித் மக்கள் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தினர் அல்ல. எல்லா சாதிகளிலும் பாட்டாளி வர்க்கத்தினர் உண்டு.


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்