இன்றைய சமுதாயத்தில் குழந்தைகள் மீதான....

 குழந்தைகள் எனும் மூலதனம்..

இன்றைய நெருக்கடியான முதலாளித்துவ சமூகத்தில் வளரும் குழந்தைகளை பார்க்கும் போது ஏதோ ஒருவித அனுதாபம் எழுகிறது. கல்வி துறையை பார்க்கும் போது பணம் இருந்தால் மட்டுமே தான் குறைந்தபட்சம் இந்த முதலாளித்துவ கல்வியையாவது கற்றுக்கொண்டு இந்த சமூகத்தில் நம்மை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற சூழல் ஏற்கனவே நிலவும்போது, குடும்ப உறவுகள் சார்ந்தும் ஒரு பெரும் பாரம் குழந்தைகளின் முதுகின் மேல் பெற்றோர்களால் கூடுதலாக தூக்கி வைக்கப்படுகிறது.
நாம் தற்போது உண்ணும் ஒருவேளை உணவை எனது குழந்தை அவனது உழைப்பால் இரண்டு வேளையாக மாற்றுவான் என பாமர பெற்றோர்களின் நோக்கம் தொடங்கி, நான் 1 இலட்சம் சம்பாதிக்கிறேன் என்றால் எனது குழந்தை அதனை 2 இலட்சமாக சம்பாதிக்க வேண்டும் என்ற உயர் நடுத்தர வர்க்க பெற்றோர்களின் நோக்கம் என இன்று பெற்றோர்கள் குழந்தைகள் மீது முதலீடு செய்கிறார்கள்.
எப்படி உடல் உழைப்பை செலுத்தி காலால் மிதித்து இயக்கும் சாதாரண தையல் இயந்திரத்தை ஒரு தையல்காரர் தனது தொழிற் வளர்ச்சிக்கு ஏற்றவாறு முதலீடு செய்து அதனை மின்சாரம் மூலம் இயக்கி அதிக துணிகள் தைத்துக்கொள்ளலாம் என்று எண்ணுவது போன்றே, இன்றைய பெற்றோர்கள் தனது குழந்தைகளுக்கு நல்ல பள்ளி, நல்ல கல்லூரி, சிறந்த வகுப்புகள் என ஒவ்வென்றாக பார்த்து பார்த்து ஒரு சாதாரண தையல்காரரை போன்று முதலீடு செய்கிறார்கள். அதே நேரம் அந்த குழந்தைகள் பெற்றோர்களின் முதலீட்டுக்கு ஏற்றது போல உற்பத்தியை (மதிப்பெண்களை) கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அந்த குழந்தைகள் மீது, ஒரு முதலாளி தொழிலாளிக்கு கொடுக்கும் அழுத்தத்தில் எந்தவித மாற்றமும் இல்லாதவாறு ஒரு பெரும் அழுத்தத்தை செலுத்துகிறார்கள்.
இதனை 1848-ஆம் ஆண்டே மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்கள், "நவீனத் தொழில் துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள். குடும்பம், கல்வி என்றும், பெற்றோருக்கும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவருக்கத்தக்கனவாகி வருகின்றன.”
பெற்றோர் குழந்தைகள் இடையே எந்தவித புனித உறவும் இன்றி, ஒரு முதலாளி தனது லாபத்தை பெருக்க இயந்திரத்தில் முதலீடு செய்வது போன்று, பெற்றோர்கள் தங்கள் இலாபத்தை அதிகரிக்க வேண்டி குழந்தைகள் மீது முதலீடு செய்யும் ஒரு சாதாரண முதலாளி தொழிலாளி உறவை நோக்கி இந்த சமூகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
பெண்கள் நச்சரிக்கும் வீட்டு வேலைகள் மற்றும் தொழிற்சாலை என இரட்டை ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்று லெனின் கூறுவது போன்று, இன்றைய குழந்தைகள் பெற்றோரின் இலாபம் மற்றும் கல்வி நிலையங்களின் இலாபம் என இரண்டையும் தக்க வைக்க வேண்டி கடுமையான இரட்டை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது குழந்தைகளின் தன்மையை எல்லாம் முழுவதும் சிதைத்து உணர்வற்ற ஒரு இயந்திரமாக அவர்களை இந்த சமூகத்தில் வளர்த்தி எடுக்கிறது.
பி.கு. இந்த முதலீட்டை குழந்தைகள் மீதான அக்கரை திறமையை வளர்க்கும் நோக்கம் என நியாயப்படுத்தி, 5 வயது குழந்தையை மூன்று இடத்தில் டியூஷன் விடும் பெற்றோர் யாரும் தயவு செய்து கதவை ஆட்டாமல் மாற்றுப் பாதை நோக்கி செல்லவும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்