மனிதரும் சமூகவாழ்வும் விடுதலைக்கான போராட்டமும்

நான் ஜாதி தோன்றியதை தேடிய பொழுது, இந்த சமூகத்தை அறிய வைத்தது; இந்த சமூகம் தோன்றியதை தேடிய பொழுது இந்த மனிதகுலம் ஏன் உலகம் எப்படி தோன்றியது என்பதனை ஆழமாகபுரிய வைத்தது. 

நூல்களின் அடிப்படையில் எதையையும் எழுதுவது எளிதுதான் நாம் அறிந்து எழுதுவதுதான் சாலச்சிறந்தது என்பதனை என் தேடல்கள் வாயிலாக வந்தடைந்தேன்.

இந்த உலகே இல்லாத ஒரு காலகட்டம்

ஆம் உயிரினங்களே இல்லாத காலக்கட்டம்

பின் உயிர் எப்படி தோன்றியது இந்த உலகில் வாழும் இத்தனை உயிரினக்களும் எப்படி வந்தது என்று ஆய்ந்தறிந்த பின்னர் மனிதனின் தோற்றம் அவனின் வளர்ச்சி அதில் பல கட்டம் இன்றுள்ள நிலை புரிந்துக் கொள்ள முடிந்தது. 

இங்கேதான் அறிவியலின் பிரமாண்டத்தை அதன் தேடலை அதன் கண்டுபிடிப்பு இதுவரை நம்பிக்கை என்ற அறியா நிலையில் இருந்த பலவற்றிக்கு கல்லறை கட்டியது அதுவும் கடவுள் என்ற அறியாநிலையில் உள்ளவற்றிக்கும் ஆக என் தேடல் நூலாக்க முயற்ச்சிக்கும் முன் என்னை நான் முழு மார்க்சிய மாணவனாக வளர்த்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டுள்ளேன் அதன் வெளிப்பாடே... என் தேடல்கள் .                                                                   

உண்மையைத் தீர்மானிக்கும் ஒரே அளவு கோல் அது நிரூபிக்கப்படுவதாய் இருக்க வேண்டும் என்பது தான். அதாவது உண்மை என்பது அறிவுக்குப் புறம்பானதாய் இருக்கக் கூடாது. இவ்வாறு உண்மையைக் கண்டறிய முற்படும் போது அவை ஆதாரங்களில் இருந்து பெறப்படல் வேண்டும் என்பது மீற முடியாத நிபந்தனையைப் பெறுகின்றது. இதற்கு விஞ்ஞான அடிப்படையும், வரலாற்றுக் கண்ணோட்டமும் அவசியமாகும்.


மனிதகுல நாகரிகத்தின் வளர்ச்சிப் பரிமாணங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் பல்வேறு துறைகள் இன்று மேற் கூறிய வகையிலேயே விரிவடைந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆனால் இவற்றின் தாக்கம் நமது சமூகச் சூழலில் மிகக் குறைந்தளவாதாகவே காணப்படுகிறது. கல்வித் தேவையின் பொருட்டு புத்திஜீவிகள் மட்டத்திலே பல்வேறு அம்சங்கள் அறிந்து கொள்ளப்பட்ட போதிலும் அவை நடைமுறையில் சமூக வாழ்வுக்குப் பயன்படாதவாறு இருட்டில் விடப்படுகின்றன. இதற்கான அடிப்படை நமது சூழல் பழமை வாதத்தின் மீது கொண்டுள்ள இறுக்கமான பிடிப்புத்தான் என்பது மிகையல்ல.
நாம் வாழும் சமூகச் சூழல் மரபு வழி வந்த பழைமைவாதச் சிந்தனைகளாலேயே பெருமளவிற்கு வழி நடத்தப்படுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் கார்ல் மார்க்ஸ் எடுத்துக் கூறினார். "இறந்து போன எல்லாத் தலைமுறைகளின் மரபும் உயிரோடிருக்கும் தலைமுறையின் மூளையில் ஒரு பயங்கரக் கனவாகக் கனக்கின்றது". இக் கூற்று வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய மனிதத் தலைமுறையினருக்குரியதாகினும் நமது பழமைவாதச் சூழலுக்கு அதிகம் பொருந்தக் கூடியதொன்றாகும். வ்வாறு கூறுவதன் மூலம் மரபையும் அதன் வழிவந்த பழைமையின் மனித நேயக் கூறுகளையோ, சமூகச் சார்பு மிக்க நல்லம்சங்களையோ பழைமை எதிர்ப்பின பேரால் நிராகரிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் மரபு, பழைமை என்பவற்றை கேள்வி, நியாயங்களுக்கு அப்பால் புராண, இதிகாச இலக்கியங்கள் என்ற பெயரில் அறிவியலுக்கு நேர் எதிரான கருத்துக்களாக மனித மூளையில் திணித்து வரும் போக்கே நிராகரிக்கத்தக்கதாகும். அவை தான் இன்றைய வாழ்வியலுக்கு வழிகாட்டுவன என்று கூறப்படும் அபத்தமே விமர்சனத்திற்குரிய சுட்டிக் காட்டலாகும்.

இந்நிலையிலே தான் சமூக அறிவியல் என்பதன் அவசியம் உணரப்படல் வேண்டும். அதன் ஓர் அம்சமே சமூக வரலாறு பற்றிய அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளலாகும். ஓர் இனம் என்னும் அடிப்படையில் தேசிய இன விடுதலைக்கான போராட்டம் உச்ச நிலையில் இருந்து வரும் இவ்வேளையில் அறிவு ரீதியிலும் அறிவியல் அடிப்படையிலும் மனித சமூக வரலாறு பற்றி கற்றுக் கொள்வது ஒரு தேவையாகின்றது.
மனித குலம் மகத்தானது.மனிதர்கள் தான் மனிதர்கள் மட்டுமே உலகின் யாவற்றையும் விட மேம்பட்டவர்கள். மனிதர்களது உழைப்பும் சிந்தனையும் ஏனைய செயல்களும் மலர்ச்சி பெற்று வளர்ச்சியடையவில்லை என்றால் இன்றைய மனிதகுல நாகரீகம் தோன்றியிருக்க முடியாது. அவர்களது அபார சக்தியின் வெளிப்பாடாகத் தான் உலகில் பொருள் உற்பத்தியும் அதனைத் தொடர்ந்து கலையும், கலாச்சாரமும், தத்துவங்களும், அரசியலும், சட்டமும், விஞ்ஞானமும், தொழில்நுட்பங்களும் இன்னும் பிற ஆக்கக் கூறுகளும் வரலாற்று வளர்ச்சிகண்டன. இவை அனைத்தும் ஆரம்ப நிலையில் இருந்து உயர்ந்த நிலை நோக்கி முன்னேறி வந்தன.

இயற்கை என்னும் பரந்த விளை நிலத்திலே உருவாகிய மனிதர்கள் அவ் இயற்கைக்கு எதிராகப் போராடி, அதனைக் கட்டுப்படுத்தி, வாழ்க்கைக்கு இசைவாக்கி பல முனைகளில் வெற்றிகொண்டு தமது சமூகவாழ்வை விரிவுபடுத்தி வந்ததில் திட்டவட்டமான வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருந்தனர். இதனால் ஏனைய விலங்கினங்களில் இருந்து வேறுபட்ட ஓர் தனித்தன்மை வாய்ந்த மனித சமூகமாகினர். இயற்கையின் செல்வாதாரங்களுக்கு எல்லைகாண முடியாமை போன்றே மனித ஆற்றல்களுக்கும் எல்லை வகுக்க முடியாது என்பதினைப் பல லட்சம் ஆண்டுகளிலான மனித குல வரலாற்றின் வளர்ச்சி எடுத்துக் காட்டியுள்ளது. இங்கே காணப்படும் முக்கியத்துவம் மனிதர்களுக்கு மனிதர்கள் மட்டுமே நிகராக இருக்க முடியும் என்பதுதான். அதனாலேயே மனிதர்களின் மகத்துவம் யாவற்றையும் விட மேலோங்கி நிற்கின்றது.

இன்றைய உலகம் நவீன விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பவியலிலும் அதிவிரைவான, அதி அற்புதமான வளர்ச்சி கண்டுவரும்; போக்;கைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் எதிர்விளைவுகளில் மனித குலத்திற்கு நாசம் விளைவிக்கும் அம்சங்கள் உள்ளடங்கியிருப்பதையும், அதனை மனித சுய நலப்போக்கு(ஏகாதிபத்தியம்) தன் நோக்கிற்கு பயன்படுத்தி வருவதையும் மறுக்க முடியாது. இருந்த போதிலும் விஞ்ஞான வளர்ச்சியானது மனித ஆற்றல்களின் உயர் வெளிப்பாடாகவும் மனித குலத்திற்கான வளர்ச்சித் தேவையாகவும் அமைந்துள்ளது. உலகியல் சார்ந்த நடைமுறைகளின் மூலமாக ஆதாரங்களைத் தேடுவதும் அவ் ஆதாரங்களில் இருந்து உண்மைகளைத் கண்டறிவதும் என்ற அடிப்படையிலேயே விஞ்ஞானம் வேர் ஊன்றி வளர்வதாயிற்று. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே விஞ்ஞானம் தனது வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுந்தது, தீயை உருவாக்கியமையும், கல்லாயுதங்களைக் கண்டறிந்தமையும், உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை நோக்கி முன்சென்ற அனைத்துமே மனிதரின் விஞ்ஞான முன் முயற்சிக்கான ஆரம்ப நிலைதான். அந்த வகையிலே மனித வாழ்வின் சகலதுறைகளிலும் ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று நவீன விஞ்ஞான பூர்வ வழியில் வளர்ச்சி பெற்றுக் கொண்டது.

தொடரும்....


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்